கொழும்பு துறைமுக நகர விவகாரம் | எதிர்பாராத நெருக்கடிக்குள் ராஜபக்ச ஆட்சி?

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் துறைமுக பொருளாதார ஆணையம் தொடர்பான சட்டவரைவுக்கு எதிராகப் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், தனிப்பட்டவர்களும் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளைப் பதிந்துள்ளனர்.

அரசாங்கத்தின் திட்டத்தின்படி இச்சட்ட வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் துறைமுக நகரத்தின் பெரும்பகுதி சீனாவின் காலனியாக மாறிவிடும். அங்கு நடைபெறும் எந்த நடவடிக்கைகளையும் இலங்கை அரசினால் நிர்வகிக்க முடியாது.

இந்நிலையில், அரசியலமைப்பின்படி இச் சட்டவரைவுக்கு எதிர்ப்பவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதியப் போதுமான அவகாசம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் கபடமாக, ஒரு வாரத்தையே (7 நாட்கள்) இதற்காகக் கொடுத்திருந்தார்கள். இந்த 7 நாட்களில் 5 விடுமுறை நாட்களாகும் (புது வருட). அப்படியிருந்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினதும் (Bar Association of Sri Lanka) வேறு பலரது அயராத உழைப்பின் காரணமாகவும், பல அரசியற் கட்சிகளும், அமைப்புக்களும், தனிப்பட்டவர்களும், கொடுக்கப்பட்ட குறுகிய கால அவகாசத்துள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

கோதாபய ராஜபக்ச ஒரு தோட்டத்து வெருளி போல நடந்துகொள்கிறார். எல்லாத் தீர்மானங்களும் மிஸ்டர் இருபது வீதத்தாலேயே எடுக்கப்படுகிறது. இப்போது கோதாபய , பசில் ராஜபக்சவின் ஒரு அடிமை போலவே செயற்படுகிறார். இத் துறைமுகநகரம் விற்கப்படுவது நிறுத்தப்படாவிட்டால் பலம் வாய்ந்த நாடுகள் சீனாவுடன் மோதும்போது இந் நாட்டில் பிணங்கள் தான் மிஞ்சும். அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?

விஜேதாச ராஜபக்ச , SLPP பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சமாகி ஜன பலவேகய, ஜே.வி.பி., ஐ.தே.க., சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், பல பொறியியலாளர்கள், முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் ஆகியோர் உள்ளிட்ட பலர், ஏப்ரல் 15 காலவரையறைக்கு முன்னர் தமது எதிர்ப்பு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வருவதற்குப் பின்னணியில் இருந்து கடுமையாக உழைத்த முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் தற்போது ராஜபக்சக்களுக்கு எதிரான முன்னணி எதிரியாக இருப்பது அவர்களின் ஆட்சி நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்பதற்கு அறிகுறியாகவிருக்கிறது என்பதையும் மக்கள் ராஜபக்சக்களுக்கு எதிராகத் திரள்கிறார்கள் என்பதையுமே காட்டுகிறது எனக் அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

நாரம்பிட்டி அபயராமய விஹாரையின் பீடாதிபதியான முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் இச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இச் சட்டமூலம் இலங்கைக்குள் தனிநாடொன்றை உருவாக்குகிறது. இந்நாடு சீன அரசாங்கத்தின் பணத்தில் சீனாவினாலேயே நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் சீனா தனது காலனியொன்றை உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட குழுவொன்றைப் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். ஏப்ரல் 19 இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்க்கொள்ளப்படும். ஆனாலும் ஆட்சியாளரை மீறி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்காது எனவே பரவலாக நம்பப்படுகிறது.

அனைத்து முடிவுகளையும் பசில் ராஜபக்சவே எடுக்கிறார், ஜனாதிபதியல்ல

இதே வேளை, ஆளும் கட்சிக்குள்ளும் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாகப் பலத்த எதிர்ப்பு திரண்டு வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக அக் கட்சியின் பா.உ. விஜேதாச ராஜபக்ச பேசும்போது “தற்போது நாட்டின் நிர்வாகம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பசில் ராஜப்கசவினாலேயே எடுக்கப்படுகின்றன, ஜனாதிபதியாலல்ல எனத் தெரிவித்துள்ளார்.

” எமது நாட்டின் 446 ஹெக்டெயர்கள் கடல் பிரதேசம் தற்போது குறைக்கப்பட்டுவிட்டது. அதௌ தற்போது தரையாக்கப்பட்டிருக்கிறது. இச் சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந் நிலத்தில் 1100 ஏக்கர்கள் இனிமேலும் இலங்கைக்குச் சொந்தமாக இருக்கமட்டாது. அது மேற்கு மாகாணத்துக்கோ அல்லது கொழும்பு மாநகரசபைக்கோ சொந்தமாக இருக்காது. இச் ச்ட்டம் நிறைவேற்றப்பட்டால், இந் நிலத்திலிருந்து 5 சதங்களைக்கூட நாம் வசூலிக்க முடியாது. இந்நிலம் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அது ஒரு சீன காலனி மட்டுமே. வெளிநாட்டுக்காரர் இந்நிலத்தில் தேவையானதை வாங்கலாம் விற்கலாம். எமது அரசாங்கத்துக்கு எந்தஹ்விதமான உரிமையும் அந்நிலத்தில் இல்லை.

இச் சட்டத்தின் 72 வது சரத்தின்படி, இந் நிலத்தின் நிர்வாகம் சம்பந்தமான சட்டங்களைப் பாராளுமன்றத்தில் விவாதிக்காமலேயே ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவிக்கலாம். அங்குள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இலங்கை ரூபாய்களில் இருக்காது, மாறாக யுவானிலோ அல்லது வேறு நாடுகளின் நாணயங்களிலோ இருக்கலாம்.

1933 இல் கையெழுத்திடப்பட்ட மொண்டிவீடியோ ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு நாட்டைத தனி அலகாக அடையாளப்படுத்துவதற்கு நான்கு காரணிகள் உள்ளன. 1) அங்கு அடையாளப்படுத்தக்கூடிய மக்கள் வாழ வேண்டும் – அதன் படி இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் வேறாகவிருக்கும், அவர்களது சம்பளம் யுவானில் வழங்கப்படும். 2) அங்கு நாங்கள் போய் ஏதாவது பொருட்கள் வாங்கினால் அதற்கு அவர்களுடைய நாணயத்தில் வரிசெலுத்த வேண்டும். 3) அந்நாட்டுக்கென ஒரு குறிக்கப்பட்ட பிரதேசம் இருக்க வேண்டும் 4) அங்கு தனியான அரசாங்கமும் நிர்வாகமும் இருக்க வேண்டும். இச்சட்டம் இந்த நான்கினையும் வழங்குகிறது. எனவே அது ஒரு தனி நாடு.

2010-2012 முதல் சீனா, மிகுந்த திட்டமிடலுடனும், கபட நோக்கத்துடனும் இந்நாட்டை ஆண்டு வருகிறது. இரண்டு அமெரிக்க பிரஜைகள் தமது பிள்ளைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றதும், இந்நாட்டைக் கொள்ளையிடுகிறார்கள்.

கோதாபய ராஜபக்ச ஒரு தோட்டத்து வெருளி போல நடந்துகொள்கிறார். எல்லாத் தீர்மானக்களும் மிஸ்டர் இருபது வீதத்தாலேயே எடுக்கப்படுகிறது. இப்போது கோதாபய , பசில் ராஜபக்சவின் ஒரு அடிமை போலவே செயற்படுகிறார். இத் துறைமுகநகரம் விற்கப்படுவது நிறுத்தப்படாவிட்டால் பலம் வாய்ந்த நாடுகள் சீனாவுடன் மோதும்போது இந் நாட்டில் பிணங்கள் தான் மிஞ்சும். அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு? ” எனக் கேள்வியெழுப்பினார் விஜேதாச ராஜபக்ச.

விஜேதாசவைத் திட்டித் தீர்த்த கோதாபய ராஜபக்ச

பா.உ. விஜேதாசவின் பகிரங்கமான எதிர்ப்பு, கட்சிக்குள் பல காலமாக நடந்துவரும் குத்துவெட்டுக்களை அம்பலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. 2019 தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் உட்பூசல்கள் இப்போதுதான் முதல் தடவையாக வெளிவந்துள்ளது.

துறைமுக நகர விவகாரத்தில் வலுத்துவரும் எதிர்ப்பினால் மிகவும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ராஜபக்ச இலங்கை பொதுமக்கள் முன்னணி (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜப்கசவைத் தொலைபேசியில் அழைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார் என விஜேதாச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“இன்று காலை 9 மணிபோல் ஜனாதிபதி என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எந்த ஜனாதிபதியாகவிருந்தாலும் பாராளுமன்றத்திலேயே இவ் விடயங்களைப் பேசுவது வழக்கம். அவரது அரசியல் முதிர்ச்சி போதாது என்பது எனக்குத் தெரியும். அதனால், ஏதாவது நாட்டிற்கு நன்மை தரும் விடயங்களைப் பற்றி ஆலோசனை செய்ய அழைக்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் என்னோடு மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசினார். ஒரு நாட்டின் தலைவருக்கு அடுக்காத மொழியாக அது இருந்தது. அவரது குரலில் நடுக்கமும், வெறுப்பும் கொந்தளிப்பும் இருந்தது. தயக்கத்துடன் நானும் அதே போன்ற மொழியில் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவர் இப்படி நடந்துகொள்வது அழகல்ல” என விஜேதாச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.