கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது – கோத்தாபய உறுதி


கொழும்பு துறைமுகத்திலுள்ள கிழக்கு கொள்கலன் முனையம் வெளியார்களுக்கு விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச துறைமுகத் தொழிலாளர் சங்கத்துக்கு உறுதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது துறைமுகத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவித முதலீட்டு முயற்சிகளும் எமக்குத் தேவையில்லை. செய்யப்படும் முதலீடுகளை இலங்கை துறைமுக நிர்வாகசபையே நிர்வகிக்கும். இதற்கான முன்மொழிவுகளை தொழிலாளர் சங்கங்களும் சமர்ப்பிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முந்திய அரசாங்கம், மே 28, 2019 அன்று, இந்திய, யப்பானிய அரசுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கிழக்கு கொள்கலன் முனையத்தின் 100% உரிமையாளராக இலங்கை துறைமுக நிர்வாக சபையே இருக்குமெனவும், இம் முனையத்தை நிர்வகிக்கவென உருவாக்கப்பட்ட நிறுவனமான முனைய செயற்பாட்டு நிறுவனத்தில் (Terminal Operations Company) இலங்கைக்கு 51% மும், இந்திய-யப்பான் கூட்டுக்கு மீதி 49% மும் என உரிமை பகிரப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இம் முனைய உருவாக்கத்துக்கெனத் தேவையான பணத்தை யப்பான் கடனாக வழங்குமெனவும் இப்பணத்தின் மூலம் இலங்கை முனையத்தின் கட்டுமான உபகரணங்களை வான்குவதெனவும் அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பிராந்தியத்தின் பூகோள அரசியல் கேந்திர முக்கியத்துவம், நாட்டின் இறைமை, வருமானம், வேலைவாய்ப்பு ஆகிய பல காரணிகளை முன்வைத்தே இம் முனைய அபிவிருத்தி பற்றித் தீர்மானிக்கப்பட்டதெனவும் இதன் உருவாக்கச் செயற்பாடுகள் முழுவதும் முதலீடுகளைக் கொண்டே செய்யப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இம் முனையத்தில் இடம்பெறும் கொள்கலப் பரிமாற்றங்களில் 66% இந்தியாவுக்கும் 9% பங்களாதேசத்துக்கும் மீதி இதர நாடுகளுக்கும் செல்கின்றன.



இம் முனையம் ஒரு முதலீட்டுத் திட்டம் எனவும் அதில் 51% உரிமையாளராக இலங்க அரசாங்கம் இருக்குமெனவும், மீதி 49% உரிமை இந்தியாவின் அடானி குழுமம் மற்றும் அதன் பங்காளிகளுக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்த ஜனாதிபதி, இதுகுறித்த முன்மொழிவுகளை தொழிலாளர் சங்கங்கள் தரமுடியுமெனவும் சந்திப்பின்போது கூறினார்.

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக நிர்வாகசபையிடம் கையளிக்கவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு முனைய அபிவிருத்தியினால் பெருமளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செய்லணியின் தலைவரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரா, இலங்கை துறைமுக நிர்வாகசபையின் தலைவர், 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.