HealthNews

கொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா? இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்

கடந்த பல வருடங்களாக மருத்துவ, சத்துணவு, அரச நியமக் கட்டுப்பாட்டு (Food Guide) நிபுணர்களின் மத்தியில் ஆரோக்கிய உணவு எது என்பது பற்றிய விவாதமொன்று நடைபெற்று வருகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தை மாவுணவுப் பொருட்களிலிருந்து (Carbohydrates) பெறுவதா அல்லது கொழுப்புணவுப் (Fats) பொருட்களிலிருந்து பெறுவதா ஆரோக்கியமானது என்பதுவே அவ் விவாதம். குறிப்பாக உடல் பருமனானவர்கள் தமது எடையைக் குறைப்பதற்கு கீட்டோ (Keto Diet) உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று பல சத்துணவு நிபுணர்களும், நிறுவனங்களும் கோரிக்கை வைத்தனர். மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த பலர் இவற்றைப் பணம் பண்ணும் முயற்சிகளென ஒதுக்கிவந்தனர். ஆனால் தற்போது கீட்டோ உணவு முறை உண்மையில் உடலுக்கு ஆரோக்கியமானது எனக் கருதும் பக்கத்துக்கு பல மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கீட்டோ உணவுமுறை (Keto Diet) என்றால் என்ன?

ஒருவரது உடலுக்குத் தேவையான சக்தி சாப்பிட்ட உணவு சமீபாடடைவதினால் (எரித்துக் கொள்வதினால்) தான் பெறப்படுகிறது. இவ்வுணவு கொழுப்பு, மாச் சத்து, புரதம் என்று பல வகைகளிலும் அடங்கும். இவற்றில் எதை எரித்து நாம் தேவையான சக்தியைப் பெறுகிறோம் என்பது பற்றிப் பலரும் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். கொழுப்பிலிருந்து பெரும்பான்மையான சக்தியையும், மாவுணவிலிருன்து சொற்பமான சக்தியையும் பெறும் முறையே கீட்டோ உணவுமுறை எனப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் மாவுணவை உண்ணும்போது உடல், கொழுப்பிலிருந்து கீட்டோன்கள் (ketones) எனப்படும் மூலக்கூறுகளை உருவாக்கி மாவுணவுக்குப் பதிலாக கொழுப்பையே சக்தியைத் தரும் எரிபொருளாகப் பாவிக்கிறது. 5% மாவுணவும், 20% புரதமும், 75% கொழுப்பும் கலந்த உணவு மிகச் சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலின் முக்கிய எரிபொருளாக மாவுணவிலிருந்து கொழுப்புணவிற்கு மாறிக்கொள்ளும் முறையே கீட்டோ உணவு முறையின் நோக்கமாகும்.

விவாதம்

இதில் எந்த முறை சிறந்தது என்பது பற்றி சில வருடங்களாக மருத்துவர்களிடையேயும், சத்துணவு நிபுணர்களிடையேயும் பலத்த கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்று வருகின்றன. உடைப் பருமன் அதிகமாக உள்ளவர்கள் பலர் அதைக் குறைப்பதற்கு தேகாப்பியாசம் முதல் உணவுக் குறைப்பு வரை பல வழிகளையும் முயற்சித்து வெற்றி கண்டவர்களும் தோல்வி கண்டவர்களுமென ஒரு பெரிய சமூகம் சத்துணவு பரிந்துரைப்பு விடயத்தில் பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது. அரசு சார்பில் இயங்கும் மருத்துவ ஆலோசனைக் குழுக்கள் இவ் விடயத்தில் முறையான வழிகாட்டி ஒன்றைப் பரிந்துரைக்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் விஞ்ஞான ரீதியாக எது சிறந்த உணவுமுறை என்பதை நிரூபிப்பதில் இரு சாராரும் திக்கு முக்காடும் நிலையிலேயே உள்ளனர்.

ஆய்வுகள்

சமீபத்தில் சீ.பி.சீ. வானொலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது பற்றிய அலசல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பெயர் White Coat Black Art. நிகழ்ச்சியை நடத்துபவர் Dr.Brian Goldman, நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர். இன் நிகழ்ச்சியில் நேர்காணப்பட்டவர்களில் ஒருவர் Dr. Carol Loffelmann. இவரும் ஒரு மருத்துவர். Dr. Loffelmann மகப் பேற்றுக்குப் பின்னர் அதிகரித்த உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளையும் கையாண்டார். அவருக்கு அவரது சக மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனை –  கலோரிகளைக் குறைக்க வேண்டும்; அதற்கு கொழுப்புணவைக் குறைத்து தேகாப்பயாசத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே. ஆனால் அவருக்குக் கிடைத்த பெறுபேறு உடல் எடை மேலும் அதிகரித்ததே.

விரக்தியில் இருந்த அவருக்கு அவரது இன்னுமொரு சகபாடி கொடுத்த ஆலோசனை ஆதி மனித உணவு முறை (Paleo Diet) – இறைச்சி, மீன், பழங்களும் மரக்கறிகளையும் உட்கொள்ளும் அதே வேளை பால், வெண்ணை, தானியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். முற்று முழுதான நம்பிக்கை இல்லாவிட்டாலும் Dr. Loffelmann இம் முறையைக் கடைப்பிடித்தார். மாவுணவுகளைப் பெருமளவில் தவிர்த்தார். சில நாட்களிலேயே அவரது உடலில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. குறைந்த மாவுணவு – அதிக கொழுப்பு கொண்ட உணவில் அவருக்கு நாட்டமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. 
இவரைப் போலவே இன்னுமொரு கல்கரி மாகாணத்தைச் சேர்ந்த இன்னுமொரு மருத்துவர், Dr. Miriam Berchuk.இனிப்பு உணவுகளில் அலாதிப் பிரியமுள்ள இவர் அதிக் கொழுப்பும், குறைந்த மாவுணவும் சார்ந்த உணவு முறைக்கு மாறியவர். இப்போது இனிப்புணவு மீது அவருக்கு நாட்டமே இல்லையாம். 
Dr. Jay Wortman ஒரு கனடிய சுதேசி. மெற்றி குலத்தைச் சார்ந்தவர். வான்கூவரில் மருத்துவராகக் கடமையாற்றுகிறார்.  சுதேசிய சமூகங்களில் இரண்டாம் ரக (Type 2) நீரழிவு நோயின் தாக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.  Dr. Jay Wortman  க்கு இது பெரும் கவலையை அளித்தது. தன் மூதாதையர்களில் இவ் வியாதி பரவலாக இருக்கவில்லை எனவும் அதற்குக் காரணம் அவர்களது உணவு முறை இறைச்சி, மீன் வகைகளையே பொதுவாகக் கொண்டிருந்தது எனவும் நம்புகிறார். கடந்த 15 வருடங்களாக தனது உணவில் மாவுணவைக் குறைத்து வருகிறார். தன்னுடைய மூதாதையரின் உணவு முறையைப் பின்பற்றியதால் தனது நீரழிவு வியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார். மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்றும் இதே போல, அதிக மாவுணவுக்கும் இருதய வியாதிக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கிறது.
மேலும் மருத்துவர்கள்

இருப்பினும் மருத்துவ சமூகம் இந்த உணவு விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்று கூறி இவர்களது நிஜ வாழ்வுப் பரிசோதனைகளை ஏற்க மறுத்தது. கொழுப்புணவின் மீது காதல் கொண்ட மேலே  கூறிய மருத்துவர்களும் தமது நம்பிக்கையைப் பரப்புவதற்காக ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். சத்துணவுச் சிகிச்சைக்கான கனடிய மருத்துவர்கள் Canadian Clinicians for Therapeutic Nutrition (CCTN) என்பது அதற்குப் பெயர்.  4000 த்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இவ்வமைப்பின் முகநூல் கணக்கில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். 

எதிர்ப்புகள்

Diabetes Canada, Heart & Stroke Foundation மற்றும் சில மருத்துவர் சங்கங்கள் குறைந்த மாவுணவு – அதிக கொழுப்பு உணவு முறையை ஆதரிக்கத் தயங்குகிறார்கள். பல  நோயாளிகள் இவ்வுணவு முறை மூலம் தாம் பயன்பெற்றுள்ளோம் என்று கூறினாலும் பல மருத்துவர்கள் தாம் சார்ந்த மருத்துவ சங்கங்களுக்கு அஞ்சி இதர நோயாளிகளை ஊக்கப்படுத்த மறுக்கிறார்கள் என CCTN கருதுகிறது. கனடாவின் சத்துணவு வழிகாட்டியைப் பின்பற்றும் பல நோயாளிகள் தமது உடல்நிலையில் முன்னேற்றமில்லை எனவும் குறைப்பட்டுள்ளார்கள் என இவ்வமைப்பு கூறுகிறது.

எல்லாம் அரசியல் தான்.