Health

வரலாற்றில் நுண்ணுயிர்களின் அழிவுப்பாதை..

சிவதாசன்

பெப்ரவரி 26, 2020

‘அமெரிக்காவில் இந் நோய் பரவுமா எனபது கேள்வியல்ல, எப்போது பரவுமென்பதே கேள்வி’ என்று உலகின் அதி நவீன நோய்க் கட்டுபாட்டு மையத்தை வைத்திருக்கும் அமெரிக்கா சொல்கிறதென்றால், நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டதென்பதே அர்த்தம்.

கொறோனாவைரஸ் சீனாவை விட்டுப் புறப்பட்டு வெகுநாட்களாகிவிட்டது. எந்தவித நவீன கருவிகளுக்கும் அகப்படாமல், பல நாட்களுக்கு ஒளித்திருந்து பயணம் செய்ய அது பழகிவிட்டது. ‘சீனாவுக்குள் தானே’ என்று உதாசீனம் செய்த வெளியுலகு இன்று பதை பதைத்து ஓடித் திரிகிறது.

நிபுணர்கள் வைரஸ் பற்றியோ, அதன் நோய்க்குணங்கள் பற்றியோ, அது பரவும் முறைகள் பற்றியோ, அதைத் தடுக்கும் முறைகள் பற்றியோ முற்றும் அறியாமலேயே உலகுக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். உலக சுகாதார நிறுவனமும் அதில் அடக்கம்.

சீனா ஆரம்பத்திலிருந்தே உண்மையைச் சொல்லவில்லை எனப் பலர் குரலெழுப்பியிருந்தார்கள். ஈரானும் அதையேதான் செய்கிறது என இப்போது குரல்கள் எழுகின்றன. இத்தாலியிலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அது ‘வேறு’. ஆனால் இவர்கள் எல்லோரும் எனக்கு ஒரே வகை தான் என வைரஸ் தீர்மானித்துவிட்டது. இப்போதுதான் உலகம் விழித்திருக்கிறது.

நோய் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தாக்கும்போது அதை epidemic என்பார்கள். அது எல்லைகளைக் கடந்து உலகத்தைப் பாதிக்கும்போது pandemic என்பார்கள். நிலைமை இன்னும் pandemic ஆக வரவில்லை என நிபுணர்கள் சொல்கிறார்கள். yeah right என்று சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


உலகில் இதுவரை நிகழ்ந்த கொள்ளை நோய்கள் (pandemic)

காலரா, பூபோனிக் கொள்ளை நோய், சின்னம்மை, ஃபுளூ (இன்புளுவென்சா) போன்றவை மனித வரலாற்றில் பேரழிவுகளைக் கொண்டுவந்த கொடூரமான நோய்கள். சர்வதேச எல்லைகளை நோய்த் தொற்றுக் கடந்ததும் அதைப் pandemic என அழைக்க முடியுமென அப்போது வரையறுக்கப்பட்டது. குறிப்பாகச் சின்னம்மை. சின்னம்மை வைரஸின் (small pox) 12,000 வருட வாழ்க்கையில் 300 – 500 மில்லியன் மக்களை அது கொன்றிருக்கிறது. அதை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்து போத்தலில் அடைத்து அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் (Centre for Decease Control (CDC)) வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

நமது காலத்தில் அறியப்பட்ட ‘இபோலா’ வைரஸ் (Ebola virus) பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்றது. அது மேற்கு ஆபிரிக்காவிற்குள் தன்னை முடக்கிக் கொண்டதால் (epidemic) அதை உலகம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

எச்.ஐ.வி. / எயிட்ஸ் (HIV/AIDS)

இதுவும் வைரஸினால் வரும் ஒரு வியாதி. 2005 – 2012 காலப்பகுதியில் உலகைக் கலக்கிய ஒரு pandemic வகை. பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளரைப் பாதித்த படியால் உலகம் அப்போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 36 மில்லியன் மக்களை இது காவுகொண்டிருந்தது.

1976 இல் கொங்கோ, ஜனநாயகக் குடியரசு, நாட்டில் தொடங்கிய இந்த வைரஸுக்கு HIV/AIDS எனப் பெயரிட்டார்கள். 1981 இலிருந்து இன்று வரை 36 மில்லியன் மக்கள் இறந்திருந்தாலும் அதை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. 31-35 மில்லியன் மக்கள் இவ் வைரஸ் தொற்றுக்களுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இவர்கள் எல்லோருமே (21 மில்லியன்) ஆபிரிக்காவில் வாழ்வதால் உலகம் அதிக அக்கறைப் படவில்லை. புதிய மருந்துகள் இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

இன்ஃபுளுவென்சா (Flu)

இதுவும் ஒரு pandemic வகையிலான வைரஸ் தொற்று. 1968 இல் இது கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களைக் கொன்றது. பொதுமக்கள் அப்போது இதை ‘ the Hong Kong Flu’ என்றழைத்தார்கள். மருத்துவ உலகம் இதை H3N2 என்ற Influenza A வைரஸ் என அழைத்தது. ஜூலை 13, 1968 இல் ஹொங் கொங் கில் முதல் அறியப்பட்ட இவ் வைரஸ் 17 நாட்களில் சிங்கப்பூர், வியட்நாம் என்று சென்று மூன்று மாதங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகை வலம் வந்தது. ஹொங் கொங்கில் மட்டும் 500,000 மக்களைக் (15%) கொன்று குவித்தது.

ஏசியன் ஃப்ளூ (ASIAN Flu)

1956 – 1958 காலப்பகுதியில் பரவிய இத்தொற்றும் ஒரு pandemic வகையினது. H2N2 வகையிலான இன்ஃபுளுவென்சா A வைரஸ் சீனாவில் 1956 இல் தொடங்கியது. 1958 வரை வியாபித்த இவ் வைரஸினால் 2 மில்லியன் மக்கள் இறந்தார்கள். சீனாவின் குவிசூ (Guizhou) மாகாணத்தில் ஆரம்பித்து சிங்கப்பூர், ஹொங் கொங், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்தது. அமெரிக்காவில் மட்டும் 69,800 பேர் இறந்தார்கள்.


இன்ஃபுளுவென்சா (Flu)

1918 முதல் 1920 வரையில் உலகைக் கலக்கிய இவ் வைரஸ் 20 – 50 மில்லியன் மக்களைக் காவுகொண்டிருந்தது. 500 மில்லியன் மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தும் முதல் 25 வாரங்களுக்குள் 25 மில்லியன் மக்கள் இவ் வைரஸ்ஸினால் கொல்லப்பட்டார்கள். நோய் அறிகுறி கண்டவர்களில் 10% முதல் 20% வரையிலானவர்கள் இறந்து போனார்கள். வழக்கமாகக் குழந்தைகளையும், வயோதிபர்களையும், பலவீனமானவர்களையும் மட்டுமே தாக்கி வந்ததுபோலல்லாது, இந்தக் குறிப்பிட்ட வைரஸ், பலவீனமானவர்களை விட்டு விட்டுச் சுக தேகிகளை மட்டுமே கொன்றொழித்தது.

ஆறாவது காலரா

இதுவும் ஒரு pandemic வகையான வைரஸ். 1910 – 1911 காலப்பகுதியில் கோலோச்சியது. 800,000 மக்கள் இறந்தார்கள். இதற்கு முந்திய ஐந்து அவதாரங்களையும் போலவே இந்த ஆறாவது அவதாரமும் இந்தியாவில் அவதரித்து மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ரஸ்யா என்று பல நாடுகளுக்கும் யாத்திரை சென்றது. அமெரிக்காவினுள் காலடி எடுத்து வைத்ததும் (1910- 1911) அவர்கள் நோயாளிகளை உடனேயே பிடித்து தனிமைப்படுத்தியதால் 11 உயிரிழப்புகளுடன் இவ் வைரஸைக் கட்டுப்படுத்தி விட்டார்கள். 1923 ஆண்டுடன் இவ் வைரஸ் பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவில் அது இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஹெயிட்டி தீவில் இந்திய, நேபாள படையினரால் கொண்டு செல்லப்பட்ட காலரா பல நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றிருந்தது.

இன்ஃபுளுவென்ஸா (Flu)

1889 – 1890 காலப்பகுதியில் பரவியிருந்த ‘ஏசியாட்டிக் ஃபுளூ’ அல்லது ‘ரஸ்யன் ஃபுளூ’ என அழைக்கப்பட்ட H2N2 வகையைச் சேர்ந்த இன்ஃபுளுவென்சா A வைரஸ் அக் காலப்பகுதியில் 1 மில்லியன் மக்களைக் கொன்றிருந்தது. மே மாதம் 1889 இல் உலகின் முவ்வேறு இடங்களில் – மத்திய ஆசியாவில் தேர்க்கிஸ்தானிலும், வட மேற்கு கனடாவில் அதபாஸ்கா என்னுமிடத்திலும், கிரீன்லாந்திலும் -பரவியிருந்தது. 19 ம் நூறாண்டில் அதி வேகமான நகர்ப்புறவாசிகளின் வளர்ச்சி இந் நோய்ப்பரவலுக்கு உகந்ததாயிருந்தது. சொற்ப காலத்தில் இந் நோய் உலகம் முழுவதும் பரவி 1 மில்லியன் மக்களைக் கொன்றுவிட்டிருந்தது.

மூன்றாவது காலராத் தொற்று

1852 – 1860 காலப்பகுதியில் பரவி, 1 மில்லியன் மக்களைக் காவுகொண்ட, காலராத் தொற்று அதன் 7 பிறவிகளிலும் மிகக் கொடியதெனக் கூறப்படுவது. 8 வருடங்கள் நீடித்த இக் கொள்ளை நோய், இதற்கு முன்னர் வந்த இரண்டு கொள்ளை நோய்களையும் போல, இந்தியாவிலேயே ஆரம்பித்தது. கங்கையில் ஆரம்பித்த இது ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா எனச் சகல கண்டங்களிலும் பரவி கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. 1854 இல், மாசடைந்த நீரினாலேயே நோய் பரவுகிறதென பிரித்தானிய மருத்துவர் கண்டுபிடித்து தடுப்பு முறைகளை உலகெங்கும் அறிவித்தார். அந்த வருடம் பிரித்தானியாவில் மட்டும் 23,000 மக்கள் காலாரவினால் உயிரிழந்தார்கள்.


பூபோனிக் கொள்ளை நோய் (Black Death)

1346 முதல் 1353 வரை நீடித்த இக் கொள்ளை நோய், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களிலுள்ள மக்களைத் தாக்கியது. இதனால் இறந்தவர்கள் 75 – 200 மில்லியன் மக்கள் எனக் கூறப்படுகிறது. ஆசியாவில் ஆரம்பித்த இந் நோய், எலிகளின் சருமங்களில் ஒட்டி வாழும் பேன்களினால் (flea) பரவியது. வர்த்தகக் கப்பல்களின் மூலம் இவ்வெலிகள் இறங்கு துறைகளைக் கடந்து இந் நாடுகளெல்லாம் கிருமியைக் கொண்டு சென்றன. இந் நோய் தொற்றுக்கு பக்டீரியா காரணமெனக் கூறப்படுகிறது.

ஜஸ்டீனியன் கொள்ளை நோய்

இந் நோய் 541 – 542 வரை நீடித்தது. ஐரோப்பாவின் சனத்தொகையின் அரைவாசியைக் காவுகொண்ட இன் நோயும் ஒரு வகை பூபோனிக் கொள்ளை வகையினதாகும். அப்போது ஐரோப்பாவில் ஆட்சி செய்த பிசாந்தியன் சாம்ராஜ்யத்தின் கீழிருந்த மத்தியதரை நாடுகளில் பேரழிவைக் கொண்டுவந்தது. பதிவு செய்யப்பட்ட முதலாவது பூபோனிக் கொள்ளை நோய் இதுவாகும். கொன்ஸ்ரன்ரினாப்போல் நகரத்தின் 40% மான மக்களைக் கொன்ற இந் நோயால் நாளொன்றுக்கு 5000 பேர் வரையில் மடிந்தார்கள்.

அன்ரொனீன் கொள்ளை நோய் (கி.பி.165)

கேலென் கொள்ளை எனவும் அழைக்கப்பட்ட ‘அன்ரொனீன்’ கொள்ளை நோய், ஏசியா மைனர், எகிப்து, கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்களைக் கொன்றது. சின்னம்மை (smallpox) அல்லது தட்டம்மை (measles) வகையைச் சேர்ந்ததெனக் கருதப்படினும் உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. மெசோபொட்டேமியாவில் போரில் பங்குபற்றி நாடு திரும்பும் ரோமானிய வீரர்களால் கொண்டுவரப்பட்ட இந் நோய் ரோமானியப் படைகளையே துவம்சம் செய்தது.

சார்ஸ்-கொவ்-2

2019 இல் சீனாவில் ஆரம்பித்த வைரஸ் தொற்று, இதுவரையில் epidemic என்றே அழைக்கப்பட்டாலும், நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் பரவியுள்ள காரணத்தால் இதை pandemic வகையில் சேர்க்கப்பட வேண்டும். இருப்பினும் இதனால் உயிரிழந்தவர்களின் தொகை அண்ணளவாக 2500 மட்டில் இருப்பதாலும், தடுப்பு முறைகள், தகவற் தொடர்புகள், பயணத் தடைகள் போன்ற கட்டுப்பாடுகளால் அதன் பரப்பு வீதம், ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. முன்னைய காலங்களை விட உலகின் ஒன்றிணைந்த பொருளாதாரத்தின் பாதிப்பு அரசியல்வாதிகளின் கரிசனைக்குட்படுவதால் இந் நோயின் தாக்கம் குறைத்து மதிப்பிடப்படுவதும், அறிவிக்கப்படுவதும் நடைபெறுகிறது என நம்பப்படுகிறது.

மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தியினால் மட்டுமே இவ் வைரஸ் பாதிப்பிலிருந்தும், தொற்றுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாமென்பதும் உண்மையாயினும், வைரஸ்கள் தாமும் கூர்ப்படைந்து மாற்று வடிவங்களை (strains) எடுப்பதற்குள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடவேண்டுமென மருத்துவ உலகம் வேகமாகச் செயற்படுகிறது. இதற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கப் பல நாடுகளும், நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் மனிதர்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே (clinical trials) சந்தைக்கு விடப்படும். அது எப்போது என்பதுதான் இப்போதைய கேள்வி.