Sri Lanka

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பிரேம்லால் ஜயசேகராவை மந்திரியாக்குவோம் – வாசுதேவ நாணயக்கார!


ஆகஸ்ட் 5 2020: 2015 ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சிக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒருவரைக் கொலை செய்தமைக்காக, கொழும்பு உய்ரநீதிமன்றத்தால் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேகரா இந்த வருடம் பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தத் தடையுமில்லை என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கீகாரம் வேறு வழங்கியிருக்கிறார்.

பிரேம்லாலை அதிகப்படியான தேர்வு வாக்குகளால் வெல்ல வைக்க வேண்டும் அதன் பிறகு அவரைப் பாராளுமன்றம் வராமல் தடுக்க முடியாது என சிறிலங்க பொதுஜன பெரெமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முதல், முந்நாள் இடதுசாரி நட்சத்திரமும், தற்போது பொதுஜன பெர்முன கட்சியின் பலம்வாய்ந்த பிரமுகருமான வாசுதேவ நாணயக்கார, பிரேம்லாலுக்குத் தனது கட்சி மந்திரிப்பதவியைக் கொடுக்கக்கூடத் தயாராகவிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்துக்கு அந்நாட்டின் நீதிமன்றமொன்றினால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அதுவும் மந்திரி ஸ்தானம் கொடுத்து கெளரவிக்கப்படப் போகிறார் என்றால் இந்த அரசாங்கத்திடமிருந்து எப்படியான நீதிபரிபாலனத்தை எதிர்பார்க்கலாம்?

சிலவேளைகளில் பிரேம்லாலுக்கு நீதிமந்திரிப் பதவியைக் கொடுத்து தனக்கு எதிராகக் கொலைக்குற்றம் சாட்டியவர்களையும், தீர்ப்பளித்த நீதிபதியையும் உள்ளே தள்ளுவதற்கான முயற்சிகளாகவும் இது இருக்கலாம்.

2018 சிறிசேன அரசின் சதியின்போது ராஜபக்ச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைத் தாக்கியதுமல்லாது இதர உறுப்பினர்கள் மீதும், பொலிசார் மீதும் மிளகாய்த் தூளை வீசியிருந்தார்கள். மிளகாய்த் தூளை வீசிய உறுப்பினர், பிரசன்னா ரணவீர, இப்போது பொதுஜன பெரமுன கட்சியிந் வேட்பாளர். “ஜனநாயகத்தைக் காக்கவே தான் மிளகாய்த் தூளை வீசினேன்” என இவர் அப்போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். “நாட்டைப் பாதுகாக்கவே, பிரசன்னா மிளகாய்த்தூளை வீசினார்” என அவரது மாட்சிமை தங்கிய தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரசன்னவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.



இப்போது பிரேம்லால் ஜயசேகரவும் “ஜனநாயகத்தைக் காப்பதற்காக” பாராளுமன்றம் கொண்டுவரப்பட்டு நீதியமைச்சுப் பதவியும் கொடுக்கப்படமாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

கொலை செய்தவர்களும், அராஜகம் புரிந்தவர்களும், வெள்ளிவான் கடத்தல்காரரும், சித்திரவதை கூடங்களை நடத்தியவர்களும், முள்ளிவாய்க்கால் படுகொலை காரர்களும் அரச ஆசனங்களை அலங்கரிக்கும் இந்நாட்டில் எதையும் எதிர்பார்க்கலாம்.

மாயமான்