கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா விடுதலை – ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது

16 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் விடுவிப்பு


நீதிமன்றத்தால் கொலைக்குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சில்வா, 2011 இல், அப்போதைய ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மந் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொலை செய்தார் என கொழும்பு உயர் நீதிமன்றத்தால், செப்டம்பர் 8, 2016 அன்று, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றியதும், ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிக நெருக்கமானவரான துமிந்த சில்வா விடுதலை செய்யப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அக்டோபர் 2011 தேர்தலுக்கு முன்னர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துமிந்த சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவத்தின்போது துமிந்த சில்வாவும் காயமடைந்திருந்து வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்றிருந்தார் என அப்போது கூறப்பட்டது. 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நீதி மன்றங்கள் அரசியல் தலையீடு எதுவுமில்லாது சுயாதீனமாக இயங்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து ராஜபக்ச ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

விடுதலை செய்யப்பட்ட 16 விடுதலைப் புலி உறுப்பினர்களும், அநுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.