HealthUS & Canada

கொறோனாவைரஸ் | பிழையான மருத்துவ பரிசோதனைகளை வழங்கிய பீல் மருத்துவ அதிகாரிகள்

ஒன்ராறியோ, கனடா, ஏப்ரல் 2: பதினாறு கொரோனாவைரஸ் நோயாளிகளுக்கு தொற்று இல்லை எனத் தவறாகப் பெறுபேறுகளை வழங்கியமைக்காக ஒன்ராறியோவின் பீல் பிரதேச மருத்துவ அதிகாரி இன்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

பீல் பிரதேச இடைக்கால மருத்துவ அதிகாரி லோறென்ஸ் லோ, வியாழன் இரவு வெளியிட்ட அறிக்கையில், 16 நோயாளிகளின் மீதான மருத்துவப் பரிசோதனைகளின் பெறுபேறுகள், கடந்த வாரம், தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டன எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தங்களுக்கு நோய்த் தொற்று இல்லை என மகிழ்ந்திருந்த சிறு தருணங்களில் அது தலிகீழாக மாறி, அச்சத்தையும், பதட்டத்தையும் கொடுத்து விட்டது” என அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“விசாரித்துப் பார்த்தபோது, நோய்த் தொற்றுள்ளவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பெறுபேறுகளும் நோய்த் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டவர்களின் பெறுபேறுகளும் பரிசோதனைகூடத்தில் ஒன்றையொன்று கலக்கப்பட்டுவிட்டன. நோயாளிகளுக்கு அப் பெறுபேறுகள் அனுப்பப்பட்ட பிறகே உண்மை தெரியவந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விடயத்தை அறிவிப்பதோடு நிலைமையைச் சீராக்கவும், நோயாளிகள் சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உதவிகளைத் தமது பணியாளர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், இது போல் இனியும் நடைபெறாமல் இருக்க, இவ் விடயங்களைக் கையாளும் முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவெனவும், பீல் பிரதேசத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே வேளை, இன்று, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகி, பீல் பிரதேசத்திலுள்ள பிராம்டன் சிவிக் மருத்துவமனையில் 60 வயதுள்ள ஒருவர் இன்று மரணமாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள ஒரு நெருங்கிய ஒருவரிடமிருந்து அவர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்ததாக அறியப்படுகிறது.

வியாழன் காலை வரை, ஒன்ராறியோவின் உறுதிப்படுத்தப்பட்ட கொறோனாவைரஸ் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,793 எனவும் 53 பேர் மரணமடைந்தும், 831 பேர் குணமாகையுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.