Columnsசிவதாசன்

கொறோனாவைரஸ் | பழகிக் கொள்ளுங்கள் அல்லது விலகிக் கொள்ளுங்கள்


சிவதாசன்

நம் கண் முன்னால் நடைபெற்றுக்கொண்டிருப்பது மனித குலத்தின் சுவாசத்துக்கான போராட்டம். 1 மில்லியன் மக்களைத் தொற்றி, 1 இலட்சம் மக்களைக் காவுகொன்றபின்னரும் கொறோனாவைரசின் பசி அடங்குவாதாகவில்லை. எந்தத் தொழில்நுட்பமும், மகத்தான கண்டுபிடிப்புகளும் இவ்வைரஸிடமிருந்து மனிதர்களைகளைக் காப்பாற்ற முடியவில்லை. இந்து, கிரேக்க புராணங்களில் போல, கடவுளர்களிடம் மன்றாடும் நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வைரஸுக்கு எதிராக முன்னணியில் நின்று துணிச்சலுடன் போராடிக்கொண்டிருக்கும் சுகாதார சேவைப் போராளிகளது நிலை மிகவும் பரிதாபகரமாகவிருக்கிறது. அசுர வேகத்தில் மடிந்துகொண்டிருக்கும் சகபாடிகளின் உடல்களையும் தாண்டிப் போர்முனைக்குச் செல்கின்ற சுயநலமற்ற, கடமை உணர்வுள்ள, மனிதாபிமான காவலர்களுக்கு கிடைத்துவரும் சன்மானம், அரண்மனைகளிலிருந்து வரும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளும், பாதுகாப்பான உப்பரிகைகளில் இருந்து எழும் பொதுமக்களின் கரவொலிகளும் மட்டுமே. இதையெல்லாம் ஒதுக்கி விட்டுக் தமது சிறு குழந்தைகளைக்கூடக் கட்டியணைக்க முடியாமல் கடமைக்குச் செல்லும் செவிலியரையும், வாடகை வீடுகளிலிருந்து தெருவில் இழுத்து விடப்படும் மருத்துவர்களையும் (இந்தியாவில்) பார்க்கும்போது மனம் கனக்கிறது.

இந்த வைரஸ் தன் படையெடுப்பை ஆரம்பித்து ஏறத்தாள நான்கு மாதங்கள். எதிரியின் வரவு புதிதாக இருந்தாலும், ஒற்றர்களின் எச்சரிக்கைகள் போதுமானதாக இருந்தன. வழக்கம் போல ‘ஓநாய்’ பாணியில் அரசியல்வாதிகள் அவற்றை உதாசீனம் செய்துவிட்டுத் தாம் மட்டும் கோட்டைகளில் பதுங்கிக்கொண்டனர்.

நிலைமை இப்போது மோசமடைகிறது. முன்னணி வீரர்களுக்குப் போதுமான ஆயுதங்கள் கிடைக்காததோடு, உலகம் பூராவும் படைத் தலைவர்கள் மண்டியிட ஆரம்பிக்கிறார்கள். மக்களை ஒளிந்து கொள்ளச் சொல்வது ஒன்றைத் தவிர, உயிரிழப்புக்களைத் தவிர்க்க, தற்போது எந்தவித உபாயங்களும் அரசர்களிடம் இல்லை.

மனித வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் 13ம் நூற்றாண்டின் மொங்கோலியப் படையெடுப்பின் போது நகரங்கள், கிராமங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாதையில் குறுக்கிட்ட அனைத்தையும், அனைவரையும் கொன்றுபோட்ட, மொங்கோலியப் படைகள் செய்த துவம்சத்தை ஏனோ நினைவுபடுத்துகிறது இந்த வைரஸின் வெற்றி. 5% மான சனத்தொகையை அப்போது உலகம் இழந்து போனது.

கொறோனாவைரஸுக்கும், கெங்கிஸ் கானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. மக்களின் மனங்களில் அச்சத்தை உண்டுபண்ணுவதன் மூலம் அவர்களைச் சரணடைய வைப்பதே கானின் உபாயம். கொறோனாவைரஸும் இதே உபாயத்தைத்தான் பாவித்து வெற்றி பெற்று வருகிறது. பலவீனமானவர்கள் சரணடைந்து விட்டோம். போர் புரிபவர்கள் தமது கடமைகளைச் செய்கிறார்கள்.

தம்மைக் காப்பாற்றும் என மக்கள் நம்பியிருந்த உலக வல்லரசுகள், வழமை போல ‘ஆயுத வியாபாரத்தின்’ காசுகளை எண்ணியே கருமமாற்றுகிறார்கள். அமெரிக்காவில் ‘வழமைபோல் வியாபாரம்’ என அதன் தலைவர் மக்களைத் துரத்துகிறார். வைரஸோ பல புதிய தலைவர்களை உருவாக்கிக்கொண்டு புதிய உத்திகளையும் கையாண்டு அலை அலையாகப் போர்க்களங்களில் உலா வருகிறது.

ஒளிந்தோடுவதைத் தவிர நமது தலைவர்களிடம் எந்தவித திட்டங்களும் இல்லை. புதிய ஆயுதங்களோ, உத்திகளோ எதுவுமேயில்லை. திட்டமிடுத்தலுக்கோ, தயாரிப்புக்களுக்கோ தேவையான அவகாசம்கூட இல்லாத நிலையில் அவர்கள் நிலையும் பரிதாபகரமானதுதான்.இக் கொறோனாப் போர் முடிந்து தூசிகள் படியும்போது வரலாற்றாசிரியர்கள் மீண்டும் ஒரு இலக்கத்தைக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள். கெங்கிஸ் கானின் சந்ததிகள் உலகில் பரவியதைப் போல கொறோனாக்களின் ஆட்சியில் நாமும் வாழப் பழகிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நாம் மாறிக்கொள்வதே வழி.

சில வருடங்களுக்கு முன்னர் ஏச்.ஐ.வி./எயிட்ஸ் என்று இன்னுமொரு கொள்ளை நோய் படையெடுத்தது. ஆபிரிக்காவில் 70 மில்லியன் மக்களைத் தொற்றி அவர்களில் அரைவாசிப்பேரைக் காவுகொண்டது. மீதி அந்நோயுடன் சமரசம் செய்துகொண்டு வாழப்பழகிக் கொண்டுவிட்டது. அது ஒரு ‘ஆபிரிக்க நோய்’ என்று கடவாய்க்குள் நமுட்டுச் சிரிப்போது நடந்து போயிருந்தது உலகம். அதே சிரிப்பு இப்போதும் இருந்தது. மொங்கோலிய வியாதியான கொறோனாவிடம் அது இந்தத்தடவை எடுபடவில்லை.

எல்லா உலகப் போர்களுமே உலக ஒழுங்கை மாற்றியமைத்து விடுவதுணடு. இந்த இரண்டாம் மொங்கோலியப் போருக்குப் பின்னான உலகம் (new world order) நிச்சயம் வேறு விதமாகவே இருக்கும்.

உலகமயமாக்கல் ஏற்படுத்திய பல தீய விளைவுகளில் இதுவும் ஒன்று. உலகமயமாக்கலின் மூலம் தகர்க்கப்பட்ட எல்லைகள் பணத்தின் எல்லைகளற்ற பயணங்களுக்காகவே தான். மனித சுதந்திரம் என்ற லேபல்களை ஒட்டிவிட்டு எல்லைகளற்ற பயணங்களை ஊக்குவித்தமையின் விளைவு தரைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விமானங்களின் மூலம் தெரிகிறது கொறோனாவின் சாதனை. வூஹானிலிருந்து கொறோனாவை ஏற்றி இறக்கிவிட்டு அமைதியடைந்திருக்கிறது உலகமயமாக்கல்.

மொங்கோலியர்களைப் போலவே, கொறோனாவும் எங்கும் போய்விடப் போவதில்லை. நாம் தான் அதன் மத்தியில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியாக்கமும் அப்படித்தான். ஒரு நிரந்தரமான சமூக இடைவெளியாக்கத்துக்கான ஆரம்ப விதையை கொறோனா விதைத்திருக்கிறது.

புதிய உலக ஒழுங்கில், இதுவே எனது எதிர்பார்ப்பு.

உலகமயமாக்கல் கட்டவிழ்க்கப்படும் (de-globalaization). நாடுகள் தத்தம் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கவாரம்பிக்கும். குடிவரவு விடயங்கள் மறுபரிசீலனைக்குள்ளாகும். விமான நிலையங்களில் வெடிமருந்துகளை மோப்பம் பிடிக்கும் நாய்கள் இனிக் கொறோனாவை மோப்பம் பிடிக்கக் கற்றுக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் தமது தனி மனித சுதந்திரங்களை அரசுகளிடம் அடகு வைத்து சில பாதுகாப்புச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வார்கள். நகர நிர்மாணக் கட்டமைப்புகள் மாறும். பெரும் திரளான மக்கள் கிராமிய வாழ்வையும், இயற்கையுடன் இசைபட வாழ்தலையும் நோக்கி நகர்வார்கள்.இந்த வைரஸின் கொடூரமும், கொலை வெறியும் சமீப கால மனித வரலாற்றில் குறிப்பிடக்கூடிய வன்மம் நிறைந்தது. இது வன விலங்குகளின் பழி வாங்கல் எனச் சிலர் பட்டும் படாமலும் முணுமுணுக்கிறார்கள். கொறோணா பல குடும்பங்களைத் துவம்சம் செய்து வருகிறது. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த அல்லது உறவினரான ஒருவரை இழக்காத குடும்பங்கள் இல்லை.

அதைவிட மிகவும் கொடுமையானது மரணமடைந்தவர்களின் இறுதிக் கணங்கள். சுவாசிக்க முடியாமல் திணறும் கொடுமையைப் போல் உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. நிம்மதியான மரணத்தைத் தருவது அந்தக் கடைசிச் சுவாசம் தான் என்கிறது நமது பண்பாடு. அதைக்கூடத் தர மறுக்கிறது கொறோனா. அந்த சுவாசத்துக்கான போராட்டத்தைத் தினம் தினம் பார்க்க வேண்டிய சூழலில் அகப்பட்டிருக்கும் மருத்துவர்கள், தாதிகளின் நிலைமை?

நடந்து வருவது மனித சுவாசத்துக்கான போராட்டம். இது வைரஸ்களுக்கும் மனித குலத்துக்குமிடையிலானது. வைரஸ்களைக் கொன்றொழிப்பதானால் உலக அழிவில் தான் அது நடைபெறலாம். அதுவரை எம்மால் செய்யக்கூடியது, அதன் பாதையிலிருந்தும் விலகிக் கொள்வது.

இதற்கு ஒரு வழியுண்டு. வைரஸ்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் தத்தம் வாழிடங்களைத் தேர்ந்துகொண்டுள்ளன. மனித வரலாற்றில் நாம் கற்றுக் கொண்டதும், கற்றுக்கொள்ளாததுமான பாடங்கள் இவை. எமக்குத் தொற்றிய அனேகமான நுண்ணுயிரிகள் விலங்குகளுடன் சமரசமாக வாழ்ந்து வந்தவை. பன்றிக் காய்ச்சல், கோழிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல், வெளவால்க் காய்ச்சல், ஒட்டகக் காய்ச்சல் என்று எதுவானாலும் அவை நம்மீது தாவிய நுண்ணுயிரிகளால் வந்தவைதான் என்பது, நாம் கற்றுக்கொண்டவை. இவ் விலங்குகளை மேலும் மேலும் உண்பதன் மூலம் மனித அழிவிற்கு நாமே காரணமாக இருப்பது கற்றுக்கொள்ளாத பாடம்.

புதிய உலக ஒழுங்கில் இது மாற வேண்டும். நாம் மண்ணைத் தின்று வாழ்ந்தவர்கள். எமது உடலில் இருக்கும் மனிதக் கலங்களை விட 10 மடங்கு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றோடு சமரச வாழ்வை மேற்கொள்ளப் பழகிக்கொள்வதே வாழ்வியல். பழகியவர்கள் துன்பம் செய்வது அபூர்வம். பழகிய விலங்குகளிலிருந்து நோய் தொற்றியதாக அறியப்படுவது குறைவு. எனவே ஒன்றில் பழகிக்கொள்ளுங்கள் அல்லது விலகிக்கொள்ளுங்கள் என்பதுவே புதிய உலக ஒழுங்கின் தாரக மந்திரமாக இருக்கப் போகிறது என நான் கருதுகிறேன்.இச் சிறிய கதையோடு இக் கட்டுரையை முடிக்கிறேன்.

இமாலய, தென்னாசியப் பிராந்தியங்களில் ‘நிலாக் கரடி‘ என்றொரு கரடியினம் வாழ்கிறது. அதன் அடர்ந்த கருமையான உரோமமுள்ள வயிற்றுப் பகுதியில் பிறை வடிவான வெள்ளை உரோமம் இருப்பதால் அது ‘நிலாக் கரடி (moon bear)’ என அழைக்கப்படுக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள கரடியினத்தின் பிதாமகர் எனக் கருதப்படும் இக் கரடியினத்தின் முதலாம் எதிரிகள் சீனர்.

நிலாக் கரடியின் பித்தம் சீனாவில், ஒரு முக்கிய, நாட்டு மருந்துப் பொருளாகப் பாவிக்கப்படுகிறது. (கனடாவின் மேற்கு மாகாணங்களில் கண்டெடுக்கப்படும் கொல்லப்பட்ட கரடிகளில் காணாமற் போயிருக்கும் உடற்கூறு பித்தப்பைகள் என்பது தெரிந்த விடயம்). இமாலயப் பிரதேசங்களில் வாழும் நிலாக் கரடிகளை, இம் மருந்துத் தேவைகளுக்காகச் சீனர் பிடித்துச் செல்வதால் அக் கரடியினம் அருகி வருகிறது என்பது இன்னுமொரு விடயம்.

இப்படிப் பிடிக்கப்பட்ட கரடிகளைச் சிறு இரும்புக்கூடுகளில் வருடக் கணக்காக அடைத்து வைப்பார்கள். கரடியால் எழுந்து நிற்கவோ அல்லது சுற்றிக் கொள்ளவோ முடியாத அளவுக்குச் சிறிய கூடுகள் அவை. இப்படியான கரடிகளை வைத்திருக்கும் இடங்களைப் பித்தப் பண்ணைகள் என அழைக்கிறார்கள். இது ஒரு வியாபாரமாகச் செய்யப்படுவதால் இக் கரடிகளைப் பிடித்துக் கடத்திச் சென்று கூடுகளில் அடைத்து வைக்கிறார்கள். தேவையான போது வயிற்றைக் கிழித்து பித்தத்தை எடுக்கிறார்கள் எனப்படுகிறது.

இப்படி ஒரு பண்ணையில் ஒருநாள் வேலையாட்கள் கடமையிலீடுபட்டிருந்தபோது ஒரு குழந்தைக் கரடி திடீரென்று அலறத் தொடங்கியது. இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல், இன்னுமொரு கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதன் தாய், கூட்டைப் பிரித்துக்கொண்டு ஓடி வந்தது. வேலையாட்கள் ஓடித் தப்பிவிட்டார்கள். அப்போது அதிசயமாக அந்தத் தாய்க்கரடி ஒரு விடயத்தைச் செய்தது.

தாய்க் கரடி கொன்றுவிடப் போகிறது என ஓடிய வேலையாட்களை அக் கரடி எதுவுமே செய்யவில்லை. மாறாக, தன் குழந்தை சிறை வைக்கப்பட்டிருந்த கூட்டுக்குப் போய் கூட்டின் கம்பிகள் வழியாகக் கைகளை நுழைத்து குழந்தையின் கழுத்தை நெரித்து அதைக் கொன்றுவிட்டது. அதன் பிறகு நடந்தது அவ் வேளையாட்களை இன்னும் அதிசயிக்க வைத்தது.

குழந்தையைக் கொலை செய்த பின்னர் தாய்க் கரடி அமைதியாகப் போய் அருகிலிருந்த பாறையொன்றில் தன் தலையை மோதித் தற்கொலை செய்து கொண்டது.

சில நாட்களுக்கு முன்னர் நான் வாசித்த What Lies Between Us என்ற நயோமி முனவீரவின் நாவல் இக் கதையை முன்னுரையாகக் கொண்டுதான் ஆரம்பிக்கிறது.

வூஹானில் wet market இல் முழு உடல்களோடு அடுக்கி வைக்கப்பட்ட தோலுரிக்கப்பட்ட வன விலங்குகளையும் நாய்களயும் பார்த்து அருவருத்துப் போய் இருந்த எனக்கு இக் கதை மிகவும் ஆத்திரத்தையே கிளப்பி விட்டது. வெறும், படத்தில் கூடப் பார்க்க விரும்பாத இம் மிருகங்களைச் சுவைத்துச் சாப்பிடும் அம் மக்களைக் காண அருவருப்பாயிருக்கிறது என்பதைச் சொல்வது தகாது எனக்கூறும் politically correct ஆன நாகரீக உலகில் வாழ்கிறோம்.

இத்தனை மனித இழப்புகளுக்கும், ஒரு ‘மிரடு’ ஒட்சிசனுக்காய்த் துடித்துக்கொண்டிருக்கும் சக மனிதர்களுக்குமாய் என் உணர்வுகளைக் கட்டிப்போட வேண்டியிருக்கிறது.

நுண்ணியிரிகளோடு சமரசமாக வாழப் பழகிக்கொள்வதே நமது புதிய உலக ஒழுங்காக இருக்க வேண்டும். அல்லாது போனால் இப்போது போல, மேலும் புதிய பாடங்களை இயற்கை எமக்குக் கற்பிக்கும்.