கொறோனாவைரஸ் பற்றி எச்சரிக்கை செய்த டாக்டர் லீ நோய்க்குப் பலி!

Spread the love
வேகமாகப் பரவும், டாக்டர் லீ ஆரம்பித்துவைத்த ‘சுதந்திரப் போராட்டம்’

பெப்ரவரி 6, 2020

கொறோனாவைரஸின் தீவிரத்தை முற்கூட்டியே அறிந்து இதர சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கும்படி எச்சரித்த சீன மருத்துவர் இறுதியாக அந்நோயினாலேயே கொல்லப்பட்ட துயரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றிருக்கிறது.

வூஹான் மத்திய வைத்தியசாலையில் கண் வைத்தியராகப் பணிபுரிந்த டாக்டர் லீ வென்லியாங் இந் நோய் ‘சார்ஸ்’ வைரஸ் போன்ற தீவிரத்துடன் பரவுகிறது என டிசம்பர் 2019 இலேயே தன் சக பணியாளர்களுக்கு எச்சரித்திருந்தார். அப்போது இவ்விடயத்தை ரகசியமாக வைத்திருப்பதில் சீன அரசு மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இருப்பினும் டாக்டர் வென்லியாங்க் தனது சமூக வலைத்தளத் தொடர்பைப் பாவித்துப் பலரையும் எச்சரித்திருந்தார். இதற்காக அவர் மத்திய மாநில அரச் அதிகாரிகளால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.

பலரது உயிர்களைக் காப்பாற்றிய அவர் துரதிர்ஷ்ட வசமாக வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 7 அன்று மரணமானார் “என அறிவிக்கப்பட்டுள்ளது”. அவரது மரணத்தால் வெகுண்டெழுந்த சமூகவலைத்தளங்களின் அலறல்களின் பின்னர்தான் அரசுகளும் பிரதான ஊடகங்களும் அவரது மரணத்தை அறிவித்தன. சீன அரசின் மிகக் கேவலமான நடத்தை என்னவென்றால், அவர் இறந்த பின்னரும் அவர் கடுமையான சுகவீனமுற்றுள்ளார் என்றும், இன்னும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் பணிபுரிந்த வைத்தியசாலை நிர்வாகத்தின் மூலம் அறிவித்தமை தான். பின்னர் அரச ஊடகங்கள் இந்த அறிவித்தல்களை அழித்துக்கொண்டதும் அதைவிட மோசமான காரியம்.


இந் நோய்பற்றி வெளியுலகுக்குத் தெரிவதற்கு முன்னரே நோய் வெகுவாகப் பரவிவிட்டதென்றும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தாமதித்திருந்தார்களென்றும் வலைத்தளங்களில் செய்திகளைப் பகிர்ந்தவர்கள் மீது டாக்டர் லீ யைப் போலவே, அரசாங்கம் பொய் வதந்திகளைப் பரப்புவதாக நடவடிக்கை எடுத்திருந்தது. அத்தோடு இவர்களில் சிலரது தகவல்களின்படி, இறப்பின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்படுவதை விட மூன்று மடங்கு அதிகமெனவும் அப்போது கூறப்பட்டது.

டாக்டர் லீயின் மரணம் சமூகவலைத்தளங்களின் மூலம் அரசியல் இயக்கமொன்றையே முடுக்கிவிட்டிருக்கிறது. டாக்டர் லீயின் மரணத்துக்கு வூஹான் அரசே பொறுப்பேற்கவேண்டுமெனவும் அதன் தவறுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவும், சீனாவின் ருவிட்டர் போன்ற ‘வேபோ’ ஊடகமூலம், வலைப்போராட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. தமக்குப் பேச்சுச் சுதந்திரம் வேண்டுமென்பதும் அவர்களின் ஒரு கோரிக்கை. இதனால் வேறுவழியின்றி அரசு மன்னிப்புக் கேட்டதுடன் டாக்டர் லீயின் மரணம் தொடர்பான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கிறது.

‘டாக்டர் லீயின் மரணம் ஒரே இரவில் மில்லியன் கணக்கான சீன இளைஞர்களை முதிர்ச்சியடையச் செய்திருக்கிறது’ என்கிறது ஒரு வலைத்தளச் செய்தி.

உலக சுகாதார நிறுவனமும் இச் சச்சரவில் மாட்டிக்கொண்டு விட்டது. வியாழன் இரவு 10:40 க்கு அவரது மரணம்பற்றித் தெரிந்தவுடன் அது ஒரு அனுதாபச் செய்தியை வெளியிட்டிருந்தது. பின்னர் சீன அதிகாரிகளின் அழுத்தத்தால் அச் செய்தியை மாற்றி அவரது உடல்நிலை பற்றி இன்னும் எதுவும் தெரியாது என வெளியிட்டது.

Related:  பொதுவிடங்களில், சகலரும் முகவாய்க் கவசமணிதல் வேண்டும் - நோய்க் கட்டுப்பாட்டு மையம்

சீன அதிகாரிகளின் இப்படியான நடவடிக்கைகளினால் நோய்த்தொற்று பரவும் வீதம் அதிகரிக்கிறது எனக்கூறப்படுகிறது. நேற்று (புதன்) மட்டும் 73 பேர் மரணித்திருக்கிறார்கள். நோய்த் தொற்று 15 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.

டாக்டர் லீயின் மரணம் உருவாக்கிய அரசியல் இயக்கமும் அதனைவிட வேகமாகப் பரவிவருகிறது என்பது மட்டுமே இப்போதைக்கான நற்செய்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>