Spread the love

ஜெனிவா: மார்ச் 18, 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்கள் ஐபியூபுறோஃபென் (ibuprofen) மருந்து எடுப்பதைத் தவிர்க்கும்படி உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது. அழல் உபாதையிலிருந்து (inflammation) நிவாரணம் பெறுவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இம் மருந்து கோவிட்-19 தொற்றியவர்களின் நோயை மேலும் மோசமாக்குகிறது என பிரஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெறான் எச்சரித்ததைத் தொடர்ந்து, உ.சு.நிறுவனம் இம் முடிவை எடுத்துள்ளது.

ஐபியூபுறோஃபென் மருந்தின் பாவனையின்போது உடலில் விடுவிக்கப்படும் ஒரு வகை நொதியம் (enzyme) கலங்களினுள் வைரஸ் புகுவதற்குப் பாதையமைத்துக் கொடுக்கிறது என்ற சந்தேகம் மருத்துவ சமூகத்திடையே இருந்துவந்ததுடன், இது பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று ‘தி லான்செட்’ என்ற மருத்துவ சஞ்சிகையிலும் வெளிவந்திருந்தது.

. கொறோனாவைரஸ் | இருதய நோயாளிகள் ஏன் கவனமெடுக்கவேண்டும்?


இக் காரணங்களை முன்வைத்து உலக சுகாதார நிறுவனம் மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் அதே வேளை, மேற்படி எச்சரிக்கையை விடுப்பது நன்மை பயக்குமெனவும், அம் மருந்துக்குப் பதிலாக பரசிட்டமோல் (paracetamol) மருந்தைப் பாவிக்கும்படியும் அந் நிறுவனத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியெர் கேட்டுள்ளார்.

அதே வேளை, அந் நோயாளிக்கு அவரது மருத்துவர் ஐபியூபுறோஃபென் மருந்தைப் பாவிக்கும்படி பரிந்துரைத்திருந்தால் அதைப் பாவிப்பது நோயாளியைப் பொறுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறி காய்ச்சலாக (சுரம்) இருக்குமானால் பரசிட்டமோலை எடுக்கும்படியும், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேலே எடுக்கப்பட்டால் அது ஈரலைப் பாதிக்குமென்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி பிரஞ்ச் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளாகியவர்களில் சிலர் இலேசான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள், சிலரில் அது நிமோனியா (நெருப்புக்காய்ச்சல்) ஆக வெளிப்படுகிறது, மோசமாகும் பட்சத்தில் அது இதர உறுப்புகளின் செயலிழக்கத்துக்குக் காரணமாகிவிடுகிறது.



ஐபியூபுறோஃபென் பல நாடுகளிலும் பல பெயர்களில் விற்கப்படுகிறது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இது அட்வில் (advil), நியூறோஃபென் (Nurofen) என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. வேறு நாடுகளில் விற்கப்படும் பெயர்களைப் பார்க்க இத் தொடுப்பை அழுத்தவும்.

கொறோனாவைரஸ் தொற்று நோயாளிகளில் ஐபியூபுறோஃபென் மற்றும் இதர அழலுபாதஹி நிவாரண மருந்துகள் (NSAID வகை) சிக்கல்களை உருவாக்குகிறது என ஆரம்பத்திலிருந்தே பிரெஞ்சு அதிகாரிகள் எச்சரித்து வந்திருக்கின்றனர். நியூறோஃபென் மருந்தைத் தயாரிக்கும் பிரித்தானிய நிறுவனமான றெக்கிட் பென்கிஸெர் (Reckitt Benckiser) தமக்கு இதுபற்றி ஏற்கெனவே தெரிந்துள்ளது எனினும் அது எந்தவொரு விஞ்ஞானரீதியான ஆய்வினாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது (ஏ.எஃப்.பி.)

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!