Uncategorized

கொறோனாவைரஸ் தொற்று ஒரு ‘அரசியல் சூழ்ச்சி’ என்றவர் அந்நோயினால் மரணம்

‘கொறோனாவைரஸ் தொற்று ஒரு அரசியல் சூழ்ச்சி” என எள்ளி நகையாடிய, ஒஹாயோ மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நோயினாலே மரணமடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.

ஒஹாயோவைச் சேர்ந்த 60 வயதுள்ள ஜோன். டபிள்யூ. மக்டானியல் என்பவர் நேற்று (புதன்) கொலம்பஸ் என்னுமிடத்தில் காலமானார் என அறியப்படுகிறது.

கொறோனாவைரஸ் தொற்று என்பது உண்மையல்ல எனவும், இது அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு சூழ்ச்சி என அவர் எள்ளி நகையாடிவருவது வழக்கம் என அவரது நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஒஹாயோ மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு வழங்கப்பட்டபோது “அது ஒரு bull…t” எனக் கூறி வந்தவர் எனவும், நோய்த் தொற்றைப் பற்றிப் பல குறுஞ் செய்திகளை அனுப்பிவந்தவர் எனவும கூறப்படுகிறது. இக்குறுங்ஜ் செய்திகளை அனுப்பிச் சரியாக ஒரு மாதத்தில் அவருக்கு நோய் தொற்றி விட்டது.

கோவிட்-19 ஒரு அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதற்கு யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா?. நான் பிழையானால் நிரூபியுங்கள்

ஜோன். டபிள்யூ. மக்டானியல்

“கோவிட்-19 ஒரு அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதற்கு யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா?. நான் பிழையானால் நிரூபியுங்கள்” என அவர் மார்ச் 13 இல் அனுப்பிய குறுஞ்செய்தி கூறுகிறது

அச் செய்தியை அனுப்பி இரண்டு நாட்களின் பின்னர் ஒஹாயோ மாநிலத்தின் ஆளுனர் மைக் டெவின் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மதுபான நிலையங்கள், உணவகங்களை மூடுமாறும், மக்களை அவரவர் வீடுகளில் இருக்குமாறும் பணித்தபோது அதை “bull sh.t” என மக்டானியல் அதைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

“அதைச் செய்வதற்கு, அவருக்கு (ஆளுனருக்கு) அதிகாரமில்லை. ஒருவர் நோய்த் தொற்றுக்குப் பயப்பட்டால் அவர் வெளியே எங்கும் போகத் தேவையில்லை. வாழ்க்கையை வாழ விரும்பும் எங்களை அவர் தடுக்க முடியாது. இந்த விசர்த்தனம் நிறுத்தப்பட வேண்டும்” என மக்டானியல் எழுதியிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இக் குறுஞ்செய்திகள் தற்போது அழிக்கப்பட்டு விட்டாலும், சிலர் அவற்றைச் சேமித்து வைத்திருப்பது மட்டுமல்ல அவற்றை மீளவும் உலாவிட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் டாக்டர் டேனா கிறேசன்.

மக்டானியல், மரியோன் கவுண்டியின் முதல் கோவிட் மரணமெனவும், அவரது குடும்பத்தினர் சூழ இருக்கையில் அவர் உயிரை நீத்தார் எனவும், அவரது மரணத்துக்குக் காரணம் கோவிட்-19 நோய் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தி மரியோன் ஸ்டார் என்னும் உள்ளூர் பத்திரிகை அவரது மரண அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

மக்டானியலின் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானதாக, அவரது குடும்பத்தினர் அவரது நண்பர்களுக்கு விடுத்த அறிக்கையில் ” ஒவ்வொருவரும் சமூகத் தொடர்புத் தவிர்ப்பை மேற்கொண்டு எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளனர்.

மக்டானியலுக்கு மனைவியும், இரண்டு ஆண் பிள்ளைகளும் உண்டு. அவர் ஒரு அன்பான கடமையுணர்வுள்ள கணவனாகவும், தந்தையாகவும், மாமனாகவும், நண்பனாகவும் இருந்தார். அவர் வாழ்க்கையை நேசித்தவர். அவரைச் சுற்றியிருந்தவர்களை முழு மனதோடு நேசித்தவர் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் அவரது மரணத்தைக் கூடப் பரிகசிக்கும் பதிவுகள் இன்னமும் வெளிவந்தபடி இருக்கின்றன.