• Post category:ECONOMY / WORLD
  • Post published:March 8, 2020
Spread the love

மார்ச் 08, 2020

சற்றிலும் எதிர்பாராமல் உலகைத் தாக்கி வரும் கொரோனாவைரஸின் பக்க விளைவாக உலகம் மிகவும் ஆபத்தான பொருளாதார நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இக் காலகட்டத்தில் பலராலும் பேசப்படுவது ‘பொருளாதார மந்தநிலை’ (economic recession) பற்றி.

மக்கள் பணத்தைச் செலவுசெய்து பண்டங்களை வாங்கத் தயங்கும்போது உற்பத்தி மட்டுப்படுத்தப்படும், வேலைகள் குறைக்கப்படும், அரசாங்கத்துக்கு கிடைக்கும் பலவித வரிகள் குறையும், அதனால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், சம்பளங்கள், வேலைகள் எனச் சங்கிலித் தொடராகப் பாதிப்புகள் ஏற்படும். மொத்தமாக இதைப் பொருளாதாரச் சுருக்கம் (economic contraction) என்பார்கள். இரண்டு காலாண்டுகளுக்குத் தொடர்ந்து இப்படியான நிலை காணப்பட்டால் அதை ‘பொருளாதார மந்த நிலை’ என வர்ணிப்பார்கள்.

கொறோனாவைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட முதல் நாடு சீனா என்பதும் அதன் உற்பத்தி முடக்கப்பட்டதால், உலகத்துடனான அதன் வர்த்தகம் (ஏறத்தாழ 1.8 ட்றில்லியன் ஏற்றுமதி / 2 ட்றில்லியன் இறக்குமதி (2018) ) ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில், அதன் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்படலாமென்ற அச்சம், வைரஸைப் போலவே விரைவாகப் பரவியும் வருகிறது. இவ்வச்சத்தின் காரணமாக மக்கள் தமது கையிலிருக்கும் பணத்தைச் செலவு செய்யாது பாதுகாக்க முயற்சி எடுப்பார்கள்.இதன் காரணமாக ஏற்படும் மந்த நிலையைச் சீர் செய்ய, அரசாங்கங்கள், மக்களைச் செலவு செய்து பண்டங்களை வாங்கும்படி ஊக்கப்படுத்துவது வழக்கம். அதற்கு வசதியாக மக்கள் இலகுவாகக் குறைந்த வட்டியில் கடன்களைப் பெறத்தக்க வசதிகளைச் செய்து கொடுக்கின்றன. அமெரிக்காவும், கனடாவும் கடந்த சில நாட்களில் மத்திய வங்கிகளின் வட்டிகளை அரை வீதத்தால் குறைத்துள்ளன.

சில்லறை வங்கிகள் முதலீட்டாளர்களிடமிருந்தும், வாடிக்கையாளர்களின் சேமிப்புகளிலிருந்தும், அரசாங்க வங்கிகளிலிடமிருந்து குறைந்த வட்டியிலும் பெறுகின்ற பணத்தை மீள முதலீடு செய்வதன் மூலம் இலாபத்தைச் சம்பாதிக்கின்றன. ஆனால் முதலீட்டாளர்கள் தமது பணத்துக்கு அதிக இலாபம் கிடைக்குமிடங்களை நோக்கியே போவார்கள். தற்போது அவர்களுக்கு பங்குச் சந்தைகள் போன்ற முதலீடுகளே அதிக இலாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. எனவே அவர்கள் வங்கியில் முதலிட்ட / சேமித்து வைத்த பணத்தை இதர முதலீடுகளுக்கு மாற்றி விடுவார்கள். எனவே நீண்ட காலத்துக்கு இவ் வட்டிக் குறைப்பைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கங்கள் முனையமாட்டா. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அரசுகள் எடுக்கும் நடவடிக்கையை stimulus எனக் கூறுவார்கள்.

2008 இல் அமெரிக்காவில் உருவாகி உலகப் பொருளாதாரங்களை இழுத்து வீழ்த்திய பொருளாதாரச் சுருக்கம், வங்கிகள் குறைந்த வட்டியில் அடமானம் கொடுத்த (sub prime mortgages) செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகவிருந்தது. குறைந்த சம்பளமுள்ளவர்கள், குறைந்த முற்பணத்துடன், ஏறத்தாழ 95-100% வீத அடமானங்களுக்கு வீடுகளை வாங்கினார்கள். திடீரென வட்டி வீதம் ஏறியதும் அவர்களால் அடமானக் கடன்களைக் கட்டமுடியாமல் போகவே வீடுகள் விற்பனைக்கு வந்தன. வங்கிகள் பெரும் தொகையாக இழப்புகளைச் சந்தித்தன. அரசாங்கம் அவ் வங்கிகளுக்கு நிதியை வாரியிறைத்து (stimulus) அவற்றைக் காப்பாற்றி விட்டது.

Related:  கோவிட் தொற்று விசாரணைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றடைந்தனர்

கொறோணாவைரஸின் தாக்கம் இப்படியானதல்லவெனினும், விமானப் பயண நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் சேவை சார்ந்த வியாபார நிறுவனங்கள் பல பாரிய இழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. இதனால் ஆயி ரக்கணக்கானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து தோன்றியுள்ளது. இப்படியான நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து அவற்றைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. விமானத்துறை மட்டும் $113 பில்லியன் இழப்பைச் சந்திக்கவிருக்கிறது எனக் கூறப்படுகிறது. குறைந்த வட்டியில் கடன் பெறுவதுகூட இந் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் தற்காலிக நிவாரணம் தான்.உலக நாடுகளின் வர்த்தகத்தில் தங்கியிருக்கும் சிறிய, வறிய நாடுகளின் பொருளாதாரச் சரிவின் நீண்டகாலத் தாக்கம் குடிசனப் பரம்பல்கள் மூலம் மேற்குலக நாடுகளைப் பாதிப்பது வழக்கம். குறிப்பாக பொருளாதார காரணங்களுக்கான மக்கள் பரம்பல் (economic migration). ஏற்கெனவே போர்களினாலும், காலநிலை மாற்றத்தினாலும் ஏற்பட்ட மக்கள் பரம்பலை எதிர்கொள்வதற்கே மேற்கு நாடுகள் தயாராகவில்லாத நிலையில் வைரஸின் தாக்கத்தினால் ஏற்படவிருக்கும் (பொருளாதார) மக்கள் பரம்பல் மிக மோசமான, அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கலாம்.

இதை எதிர் கொள்ள உலக வங்கியும் ($12 பில்லியன்) சர்வதேச நாணய நிதியம் (IMF) ($50 பில்லியன்) வழங்கத் தயாராகவுள்ளன. இது பெரும்பாலும் வறிய நாடுகளின் சுகாதாரத்துறைகளுக்கானது.

இருப்பினும், 2008 இல் போலல்லாது, கொறோனவைரஸினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் உலகத்தை ஒரே நேரத்தில் பாதித்ததால், அதிலிருந்து மீள்வதற்கு அதிக காலம் பிடிக்குமென நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email