கொறோனாவைரஸ் | கொண்டாடும் சீனர்கள்!
நோயாளிகள் இல்லாமையால் சகல தற்காலிக மருத்துவமனைகளும் மூடப்பட்டன
மார்ச் 15, 2020
நோயாளிகள் இல்லாமையால், சீனாவின் வூஹான் நகரில் கொறோனாவைரஸ் நோயாளிகளைப் பராமரிப்பதற்கெனெ அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளில் எஞ்சியிருந்த ஒன்றும் நேற்று மூடப்பட்டது.
புதிய நோய்த்தொற்று எதுவும் இல்லாமையால் அம் மருத்துவமனைக்கு இனி அவசியமில்லை எனத் தீர்மானித்து அது மூடப்பட்டது. அங்கு பணி புரிந்த மருத்துவர்களும், பணியாளர்களும் தமது முகக்கவசங்களை அகற்றி, அதை ஒரு மகிழ்ச்சியான வைபமாகக் கொண்டாடும் காணொளி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வூஹான் நகரில் இரண்டு மருத்துவமனைகள் உட்பட, சீனா முழுவதும் 14 தற்காலிக மருத்துவ மனைகள், கடந்த மாதம் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. வேகமாகப் பரவிய வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, பல ஆயிரக்கணக்கான படுக்கைகளுடன் இம் மருத்துவமனைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
சீனாவில் மொத்தம் 80,824 நோய்த் தொற்றுக்களும், 3,189 மரணங்களும், இவ் வைரஸினால் ஏற்பட்டிருந்தன. கடுமையான நடமாட்டத் தடை வைரஸின் பரவலை நிறுத்தியிருப்பதால் சில பகுதிகளில் தடைகள் இலகுவாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று 13 நோயாளிகள் மரணமடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இதர நாடுகளிலிருந்து வருபவர்கள் உட்பட, 11 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 65,000 மக்கள் இன்நோயிலிருந்தும் வெற்றிகரமாகக் குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான ‘வைரஸ் பனிப்போர்’ முற்றிக்கொண்டு போகிறது. வெள்ளியன்று, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரது கருத்துக்கள் தொடர்பாக, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சீன தூதுவரை அழைத்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது. ‘கொறோனாவைரஸைச் சீனாவுக்கு அறிமுகப்படுத்தியது அமெரிக்க இராணுமாக இருக்கலாமென’ சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கொரோனாவைரஸ், ஏற்கெனெவே அறிவிக்கப்பட்டபடி வுஹான் நகரத்திலுள்ள விலங்குச் சந்தையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அது ஆரம்பித்ததாகக் கருதப்படும் ஒருவரைத் தாம் தேடிப்பிடித்துவிட்டதாகவும், அது ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பித்திருக்கலாமென நம்புவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
வைரஸ் வெளவாலிலிருந்து, எறும்புண்ணி விலங்குக்குத் தாவிப் பின்னர் மனிதரில் தாவியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவ் விலங்குகள் வூஹான் சந்தையில் உயிரோடு கூடுகளில் அடைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்டன எனபதை ஆரம்பத்தில் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது, இப் பரவலுக்குக் காரணமாக அமெரிக்க இராணுவத்தினர்மீது குற்றம்சாட்டும் குறுஞ்செய்தி கடந்த சில நாட்களாக வேகமாகப் பரவி வருகிறது.