கொறோனாவைரஸ் | கனடிய-அமெரிக்க எல்லை மூடப்படுகிறது.

Spread the love

மார்ச் 21, 2020

  • அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் அனுமதியுண்டு
  • நுழைவு அனுமதியுள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
  • வேலை செய்ய அனுமதிபெற்றவர்கள் அனுமதுக்கப்படுவார்கள்
  • நாளாந்த தேவைகளுக்கு பண்டங்கள் வாங்கச் செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
  • வர்த்தகக் காரணங்களுக்காகச் செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
  • பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலா நோக்கங்களுடனும் கடப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்
  • குடியிருக்கும் நோக்குடன் அனுமதியற்றுக் கடப்பவர்கள் அனுமதி மறுக்கப்படுவார்கள்

கனடாவுக்கும் அமெரிக்கவுக்குமிடையிலான தரைப்பிரதேச எல்லை வெள்ளி 20, நள்ளிரவு முதல் மூடப்படுகிறது. அத்தியாவசிய பயணங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.

பண்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்பவர்கள், வேலைக்குப் பயணிப்பவர்கள் போன்றவர்களது பயணங்கள் தடைசெய்யப்படமாட்டாது. இரு நாடுகளுக்கிடையேயான பண்ட நகர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தாதவண்ணம் இந் நடவடிக்கை செயற்படுத்தப்படும்.

“இது ஒரு உலக கொள்ளை நோய். அதற்கேற்றவாறு ஆயத்த நிலையிலும், இயக்க நிலையிலும் நாம் இருக்கவேண்டும்” என உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்றீலாண்ட், ஊடகவியாளருக்குத் தெரிவித்தார்.“சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதற்காகத் தாமத்தப்படுத்துவதைவிட உடனடியாக அதை எடுப்பது என்ற விடயத்தில் மக்கள் எங்கள் செயற்பாட்டுடன் உடன்படுவார்கள் என நான் எண்ணுகிறேன். இதன்மூலம் உயிராபத்து ஏற்படக்கூடிய நிகழ்வுகளிலிருந்து நாம் தப்பிக் கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாவுக்கும், பொழுதுபோக்கிற்காகவும் செல்கிறவர்கள் போன்ற, ‘செல்லக்கூடாதவர்களை’ இனம் கண்டு தடைசெய்யும் அணுகுமுறையை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்வார்களென அவர் தெரிவித்தார்.

அன்றாட தேவைகளுக்காய் எல்லை கடந்து பண்டங்களை வாங்கச் செல்பவர்களையும் இது பாதிக்காது. நுழைவு அனுமதிகளைக் கொண்ட மாணவர்கள், வேலை செய்யும் அனுமதி பெற்ற தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் போன்றோருக்கு எல்லை கடக்கும் அனுமதி இருக்கும் எனவும் கனடாவுக்குள் குடிபுகும் எண்ணத்தோடு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இத் தடை 30 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், நிலைமைகளைப் பொறுத்து அதில் மாற்றங்கள் செய்யப்படலாமெனவும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கனடாவின் கோவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெள்ளியன்று 1,000 த்தைத் தாண்டியிருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  கனடா | கணக்கெடுக்காத காசோலைகள்

Leave a Reply

>/center>