Spread the love

சீனாவின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனாவைரஸ் மரணங்களை மீறிய நிலையில், 3,400 அமெரிக்க இழப்புகளுடன் உலக உயிரிழப்பு இப்போது 40,000 தைத் தாண்டியிருக்கிறது.

ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளிலும் கோவிட்-19 மரணங்கள் கட்டுக்கடங்காமற் போய்க்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அதி தீவிரமாகப் பரவி வரும் கோவிட்-19 நோய்த்தொற்று தற்போது 3,400 ஐத் தாண்டியிருக்கிறதென, இத் தரவுகளைச் சேகரித்து, உன்னிப்பாக அவதானித்துவரும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சமூக இடைவெளியாக்கம் அனுசரிக்கப்பட்டால், மொத்த உயிரிழப்புகளை 100,000 முதல் 200,000 வரை கட்டுப்படுத்த முடியுமென வெள்ளை மாளிகை எதிர்ப்பார்க்கிறது.

உலகம் பூராவும் மொத்தம் 820,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும், 40,000 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. 174,000 பேர் குணமாகியுள்ளார்கள்.

ஸ்பெயின் | ஒரே நாளில் 849 பேர் வைரஸுக்கு இரையாகியுள்ளனர்

ஸ்பெயினில் ஒரே நாளில் 849 பேர் கொரோனாவைரஸுக்கு இரையாகியுள்ளார்கள். வைரஸ் மரணங்களைக் குறைப்பதற்காக கடந்த சில வாரங்களாக அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும், இறப்பு வீதம் அதிகரித்து வருவது தற்போது மக்களிடம் அதிருப்தியைத் தோற்றி வருகிறது. அந்நாட்டின் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அறிக்கைப்படி, மொத்த மரணங்களின் எண்ணிக்கை 8,189 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளாகிய 9,222 பேருடன், மொத்தம் 94,417 நோயாளிகள் தற்போது அந்நாட்டிலுள்ளனர். சீனாவின், 82,240 மொத்த நோய்த்தொற்றுகளை விட இது அதிகரித்துள்ளது.

ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில், இக் கொள்ளை நோய் ஆரம்பித்த நாளிலிருந்து, நாளுக்கு நாள் ஏற்படும் இறப்பு வீதம் கடந்த இரவு உச்சத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சீனாவை விட இரட்டிப்பு மரணங்கள் நிகழ்ந்திருக்கும் இந் நிலையில் மக்கள் நடமாட்டத் தடையை மேலும் விரிவாக்க அந்நாடு தீர்மானித்துள்ளது.கனடா | பாதுகாப்பு உபகரணங்களுக்காக 2 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு

இதே வேளை, நோய்த்தடுப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்களுக்காக கனடா மேலும் 2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. போதிய நோய்த்தடுப்பு உபகரணங்களின்றி, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் பலர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். இவர்களுக்காக, முகவாய்க் கவசங்கள், வெளியங்கிகள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கு இப் பணம் பாவிக்கப்படும்.

இதற்காகக், கனடிய அரசு, எட்டு கனடிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. கியூபெக் மாகாணத்தில் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்களே இருப்பதாகவும், அதன் பிறகு முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் சேவைகளை வழங்குதில் சிரமப்படவேண்டி வருமெனவும் அம் மாகாணத்தின் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ கூறியுள்ளார்.

சிறீலங்கா | கொழும்பு, யழ்ப்பாணத்தில் காலவரையற்ற ஊரடங்கு

சிறிலாங்காவிலும் கோவிட்-19 தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 142 பேருக்குத் தொற்று வந்துள்ளதாகவும், இதற்கான விசேட மருத்துவமனைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றனவெனவும் அறியபடுகிறது.

Related:  கோவிட்-19 | பிரித்தானிய சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டு மடங்கு பாதிக்கப்படுகின்றன

கண்டியில் புதிதாக மூவருக்கும், பேருவலவில் நால்வருக்கும், பண்டாரகமவில் இருவருக்கும், தெஹிவலவில் சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்சி அறிவித்துள்ளார்.

அதே வேளை, அதிகரிக்கும் கோவிட்-19 நோயாளிகளைப் பராமரிப்பதற்காக, புத்தளம், மினுவாங்கொட, பேருவள ஆகிய இடங்களில், புதிய தற்காலிக மருத்துவ மனைகளையோ அல்ல்து இருக்கும் மருத்துவ மனைகளைத் தனியே கோவிட் நோயாளிகளுக்கான மாற்றியமைக்கவும் அமைச்சு முடிவுசெய்துள்ளது.

கொழும்பு, புத்தளம், கம்பஹா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் அதியுயர் ஆபத்துப் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு | டெல்ஹி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேரில் 50 பேருக்குத் தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக, ஒரே நாளில் 57 பேருக்கு கோவி-19 நோய் தொற்றியதன் மூலம், அதன் தொற்று எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இந்த 57 பேரில், 22 பேர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 18 பேர் நாமக்கல் மாவட்டத்திலும், 4 பேர் கன்யாகுமரி மாவட்டத்திலும், ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளார்கள்.

இவர்களில் 50 பேர் புது டெல்ஹியில் நடைபெற்ற இஸ்லாமிய மத பிரசாகர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என மாநில சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இம் மாநாட்டில் 1,500 பேர் கலந்துகொண்டிருந்தார்கள் என்றும், அவர்களில் 1,113 பேர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்திருந்தார்கள் என்றும் மீதி பேர் புது டெல்ஹியில் தங்கிவிட்டதாகவும் தெரிய வருகிறது. திரும்பியவர்களில் 515 பேர் பல மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் பச்சை இலச்சினை ஒட்டாப்பட்டுள்ளதெனவும், 50 பேர் சிகிச்சைகளுக்காக அணுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இவர்களில் பலர் விமான மூலமும், ரயில் மூலமும் பயணம் செய்திருந்தார்கள். சிலர் இதர மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். இவர்களோடு தொடர்புகளை வைத்திருந்தவர்களைத் தம்முடன் தொடர்புகொள்ளும்படியும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

Print Friendly, PDF & Email