Spread the love
வைத்தியன்

கொறோனாவைரஸ் ஆண்களை வஞ்சம் தீர்க்கிறதா? தரவுகள் அப்படித்தான் சொல்கின்றன. டாக்டர் சேறா காயாட் இதுபற்றிச் சேகரித்த தரவுகளைக் கொண்டு அப்படியான முடிவை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

கொறோனாவைரஸ் பெண்களைவிட அதிக ஆண்களைத்தான் கொல்கிறது என்பதைச் சீன மருத்துவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தனர். ஆனால் அதை நிரூபிக்குமளவுக்கு ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கவில்லை.

சீனாவின் கொறோனாவைரஸ் தாக்கத்தைக் கண்காணித்து தரவுகளைப் பேணிவரும் சீனாவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் (China CDC) அங்கு நடைபெற்ற கோவிட்-19 மரணங்களைக் கணக்கெடுத்ததன் பிரகாரம், நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஆண்களில் 2.8% மானோர் உயிரிழந்திருக்கின்றனரெனவும், அதே வேளை பெண்களில் இது 1.7 % எனவும் கண்டறிந்துள்ளது.

அதே வேளை இத்தாலியில் நடைபெற்ற கோவிட்-19 மரணங்கள், 7.2% ஆண்களும் 4.1% பெண்களும் என்ற அடிப்படையில் இருக்கிறது.


நோய்த் தொற்றுப் பரிசோதனை மிகவும் பரவலாகச் செய்யப்பட்டதெனக் கருதப்படும் தென் கொரியாவில் ஆண்களோடு ஒப்பிடும்போது நோய்த் தொற்றுக்கண்ட பெண்கள் அதிகமாகவிருந்தும், இறந்தவர்களில் ஆண்களே அதிகமாக (54%) இருந்தனர்.

கொறோனாவைரஸ் ஆண்களை வஞ்சம் தீர்ப்பது இதுதான் முதல் தடவையல்ல. 2002-2003 காலகட்டத்தில் வந்த SARS நோய்த்தொற்றின் போதும், அதன் பின்னர் மத்திய கிழக்கில் வந்த MERS நோய்த் தொற்றின்போதும், கொறோனாவைரஸ்கள் ஆண்களையே அதிகம் கொன்றிருந்தன.

ஆய்வுகூடங்களில் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதும், ஆண் எலிகள் சார்ஸ் நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது அறியப்பட்டிருந்தது.

நோய்த்தொற்று உள்ள எலிகளின், குறிக்கப்பட்ட அளவு குருதியில் எத்தனை RNA பிரதிகள் (வைரஸின் உடல்களில் இருக்கும் பகுதி) இருக்கின்றன என்பதை அறிவதன் மூலம் (viral load) அவ்வெலியின் உடலில் நோய்த் தொற்றின் தீவிரத்தைப் பரிசோதனை கூடங்கள் தீர்மானிக்கின்றன. இதே நடைமுறைதான் மனிதரிலும் பாவிக்கப்படுகிறது. அத்தோடு ஒருவரது உடலில் அழற்சிக் காட்டிகளை (inflammation markers) வைத்து சுவாசப்பைகள் பழுதடையும் வீதத்தை அளவிடுகிறார்கள்.

ஏன் ஆண்கள்?

கொறோனாவைரஸ் பெண்களைவிட ஏன் ஆண்களை அதிகம் குறி வைக்கிறது? இதற்கான விடையைத் தருவதற்கு விஞ்ஞானிகள் இன்னும் தயாரில்லையெனினும், சில கருதுகோள்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை

பலருக்கு இது எரிச்சலைத் தரலாமெனினும் அதில் உண்மை இருக்கிறதென்கிறார்கள். ஆண்கள் பொதுவாக, சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களை இலகுவாககவும் (எச்சரிக்கைகளைப் புறந்தள்ளுவது) அதே வேளை சிலர் அவற்றை வீரத்தின் அடையாளமாகவும் (macho) எடுத்துக்கொள்வதுண்டு. இதனால் அவர்கள் பல நாள்பட்ட வியாதிகளிடம் (chronic diseases) மாட்டிக்கொள்வதுண்டு. நீரிழிவு, உயரழுத்தம், இருதய வியாதி என்பன சில.

கோவிட்-19 நோய்க்கு மரணமான பல ஆண்கள் இப்படியான நீண்டநாள் வியாதிகளைக் (underlying conditions) கொண்டிருந்தவர்கள் என அறியப்பட்டவர்கள். இந்த வாழ்க்கைமுறைத் தேர்வுகளை இலகுவாகப் பின்பற்றுவது அதிகம் ஆண்கள் தான். கொறோனாவைரஸுக்கு இத்தகைய ஆண்கள் இலகுவாக இரையாகிவிடுவதுண்டு.

Related:  மந்தை நிர்ப்பீடன (Herd Immunity) விஷப் பரீட்சை!

புகைத்தல், மது அருந்துதல் ஆகியனவும் இப்படியான வாழ்க்கைமுறைத் தேர்வுகள் தான். 2015 இல் உல்க சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஆண்கள் பெண்களைவிட 5 மடங்கு அதிகமாக மதுவருந்துகிறார்கள் எனவும், அதேயளவு வீதத்தில் புகைத்தலையும் செய்கிறார்களெனவும் அறியப்படுகிறது.புகைத்தல்

புகைத்தல் , நிமோனியா உட்பட்ட, சுவாசப்பைகளுடன் தொடர்புடைய வியாதிகளூக்குக் காரணமாக அமைகிறது. இதனால் பழுதடைந்த சுவாசப் பைகளில் இலகுவாக வைரஸ் தொற்றிக்கொள்ள முடிகிறது. அதே வேளை புகைத்தலின் காரணமாக ஏற்படும் chronic obstructive pulmonary disease (COPD) எனப்படும் மட்டுப்படுத்தப்பட்ட ஒக்சிசன் உள்ளெடுப்பு வியாதி இருப்பவர்களுக்கு வைரஸ் தொற்று அதை மேலும் மோசமாக்கிவிடுவது ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்று.

புகைப்பவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு இலகுவாக ஆளாவதற்கு இன்னுமொரு மிக முக்கியமான காரணம் அவர்கள் புகைக்கும்போது வாயில் கைவிரல்களைத் தொட்டுக்கொள்வது மற்றும் சிகரட்டுகளை மாறி மாறிப் புகைத்துக்கொள்வது போன்ற பழக்க வழக்கங்களாலும் தான்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்களின்மீது சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, இறந்தவர்களில் 50 வீதமான ஆண்களும், 3 வீதமான பெண்களும் இருக்கக் காணப்பட்டனர். எனவே ஆண்களை வைரஸ் அதிகம் ஏன் தாக்குகிறது என்பதற்கு புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகிறது.

இருப்பினும், இத்தாலியில் செய்யப்பட்ட ஆய்வு, இதற்கு உடன்படுவதாயில்லை. அங்கு 7 மில்லியன் ஆண்களும், 4.5 மில்லியன் பெண்களும் புகைக்கிறார்கள். ஆனாலும் அங்கும் மரணமடைந்தது ஆண்கள் தான் அதிகம்.

கைகள் கழுவுதல்

கொறோனாவைரஸ் நோய்த்தொற்றைத் தடுபதில் மிகவும் செலவு குறைந்த ஒரு நடைமுறை, சவர்க்காரத்தால் கைகளைக் கழுவுவது. இதன் முக்கியத்துவத்தைப் பற்றி அனைத்து ஊடகங்களும், பணியிடங்களும், மருத்துவ சமூகமும், பொது அறிவிப்புகளைத் தினமும் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் ஒப்பீட்டளவில், ஆண்கள் கைகளைக் கழுவுவது மிகவும் குறைவு என ஆய்வுகள் கூறுகின்றன. 2009 இல் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆய்வு ஒன்றிந்படி, பொதுக் கழிப்பறைகளைப் பாவித்தவர்களில், 31 வீதமான ஆண்கள் மட்டுமே கைகளைக் கழுவுகின்றனர் எனவும், பெண்களில் அது 65 வீதமெனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் நோய்த் தொற்று என்று வரும்போது, ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ சரிபங்காகவே இருக்கின்றார்கள். மரணமடையும் வீதத்தில் தான் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே கைகளைக் கழுவாத படியால் தான் ஆண்கள் அதிகம் இறக்கிறார்கள் என்பதையும் பெரிதாகக் கருத்தில் கொள்ள முடியாது.

ஆண்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதில்லை

பெண்களை விட் ஆண்களின் உடல்நலம் பற்றிய அறிவும், அவர்களது நடத்தைப் பண்புகளும் வேறுபடுகின்றன. மருத்துவைப் பார்க்கும் விடயத்தில் ஆண்கள், பெண்களைப் போல், அதிகம் அக்கறை காட்டுவதில்லை.

இதற்குக் காரணம், ‘மருத்துவரைப் பார்ப்பது பெண்மைத் தனம் அல்லது வீரக்குறைவின் வெளிப்பாடு’ என்ற எண்ணமும், எதையும் சவாலாக எடுத்துக்கொள்வது ஆண் தன்மை என்ற எண்ணமும் ஆண்களிடமுண்டு என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

Related:  'கோவிட் விரல்கள்' கொறோனாவைரஸ் தொற்றுக்கான அறிகுறியா?

எனவே ஆண்களும் பெண்களும் சரி சமமாகவே நோய்த் தொற்றுக்கு ஆட்பட்டாலும், பெண்கள் உடனேயே மருத்துவரைப் பார்த்துவிடுவதனால் அவர்களது இறப்பு வீதம் குறைவு என்ற கருத்தும் நிலவுகிறது.நோயெதிர்ப்பு ஆற்றல்

இதர கொரோனாவைரஸ் உட்பட்ட பல வைரஸ் தாக்குதல்களை ஆராய்ந்தபோது தெரிந்த இன்னுமொரு விடயம், வைரஸ் தாக்குதலின்போது பெண்களின் நோயெதிர்ப்பு ஆற்றல், ஆண்களை விடவும் திறமையுடன் செயலாற்றுகிறது என்பது.

அதாவது, பெண்களிடமுள்ள நிர்ப்பீடன (பாதுகாப்பு) ஆற்றல் வைரஸ்களை மிக விரைவிலேயே தேடியழித்து அவர்களிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கையை (viral load) வெகுவாகக் குறைத்து விடுகின்றன.

இதன் மறுபக்கம் என்னவென்றால், பெண்கள் தமது சுய நிர்ப்பீடனத் தாக்குதலுக்கு (autoimmune disease) அதிகம் ஆளாகிப்போவது. வைரஸ் எதிரிகளை (pathogens) அழிப்பதற்கென உருவாக்கப்பட்ட தேவைக்கதிகமான எதிர்ப்பொருட்கள் (antibodies) உடலின் சொந்த இழையங்களையே தாக்கத் தொடங்கி விடுகின்றன. ஆண்களைவிடப் பெண்களில் இது அதிகமாக நடைபெறுவதால் மூட்டு வாதங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் அதிகம் ஆளாகவேண்டியிருக்கிறது.

ஆண்களில் நிர்ப்பீடன ஆற்றல் குறைவாக இருப்பதால் கோவிட்-19 இற்கு ஆண்கள் அதிகம் இரையாகிப்போவது வழக்கமாகிவிட்டது.

ஹோர்மோன்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள நிர்ப்பீடன ஆற்றலில் உள்ள வேறுபாட்டுக்குக் காரணம் ஹோர்மோன்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஹோர்மோன்களின் செறிவைப் பொறுத்தே, நிர்ப்பீடனத் தொகுதி வேலை செய்கிறது.

பெண்களில், மாதவிடாய் சம்பந்தப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில் ஹோர்மோன் சுரப்புக்களின் செறிவு வித்தியாசமாக இருக்கிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. பெண் ஹோர்மோன்களின் அதைக பிரசன்னத்துக்கும் கோவிட்-19 தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

சார்ஸ் (2002-2003) காலத்தில் விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, பெண் ஹோர்மோன்கள் (சூலகங்கள்/ovaries) அகற்றப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட எலிகளில் சார்ஸ் தொற்றும் அதனால் ஏற்பட்ட மரணமும் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எஸ்ட்றோஜென் (பெண் ஹோர்மோன்) சுரப்பு அதிகமுள்ள பெண்களில் ஏன் கோவிட்-19 தாக்குதல் குறைவு என்பதற்கான ஆதாரம் புலப்படுகிறது.

சார்ஸ் வைரசும், கோவிட்-19 வைரசும் 79% மரபணு வரிசையில் ஒத்துப்போகின்றன.

X நிறமூர்த்தம் (Chromosome)

பெண்களின் நோயெதிர்ப்பு வித்தியாசமாகத் தொழிற்படுவதற்கு இன்னுமொரு காரணம், பெண்களில் காணப்படும் மேலதிகமான X நிறமூர்த்தம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பெண்களில் இரண்டு X நிறமூர்த்தங்களும் (XX) அதே வேளை ஆண்களில் ஒரு X நிறமூர்த்தமும் (XY) காணப்படுகிறது. இந் நிறமூர்த்தங்களில் தான் எமது மரபணுக்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நோயெதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் கட்டளைகளைப் பிறப்பிப்பது இந்த X நிறமூர்த்தங்களே. இரண்டாவது X நிறமூர்த்தங்களைக் கொண்டிருப்பதனால் பெண்களின் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாகவிருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கோவிட்-19 நோய் புதிய வகையான SARS CoV-2 வைரஸினால் உண்டாக்கப்படுவதால், தற்போது நோயாளிகளில் சேகரிக்கப்பட்டுவரும் எதிர்ப்பொருள் செறிவு (antibody concentration), மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் போன்ற தரவுகளை வைத்துக்கொண்டுதான் கோவிட்-19 இன் ஆண் ‘வெறுப்பு’ பற்றி மேலதிக விபரங்கள் அறியப்படுமென்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Related:  கோவிட்-19 தொற்றைத் தவிர்க்க ஹைட்ரொக்சிகுளோரோகுயின் எடுக்கிறேன் - ஜனாதிபதி ட்ரம்ப்

ஆனால் கோவிட்-19 நோய்க்குப் பலியாவது அதிகம் ஆண்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதற்கு, பழக்க வழக்கம், நோயெதிர்ப்பு ஆற்றல், ஹோர்மோன் வேறுபாடு, பிறப்புக் காரணிகள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இன்னுமொரு வைரஸ் தாக்குதல் வருவதற்கு முன்னர் விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புவோமாக.

மூலம்: பப்மெட், அல்ஜசீரா

Print Friendly, PDF & Email