Spread the love
நியூ யோர்க்கில் ஒரே நாளில் 100 மரணங்கள்

சீனாவை மீறிய நோய்த் தொற்று இப்போது அமெரிக்காவிற்கு வந்துவிட்டது. இப்போது இன்று (வியாழன், மார்ச் 26) நோய்த்தொற்று எண்ணிக்கையில் உலகிலேயே அமெரிக்கா முதலாமிடத்தில் இருக்கிறது.

இந்த நிமிடத்தில் அமெரிக்காவின் நோய்த் தொற்று எண்ணிக்கை 85,594 ஆகவும், மரணித்தவர்களின் எண்ணிக்கை 1305 ஆகவும் உள்ளது. சீனாவிலும், தென் கொரியாவிலும் இரண்டாவது அலையாக மீண்டும் தொற்றுகளும் மரணங்களும் நிகழத் தொடங்கியுள்ளன. சீனாவில் 81,340 தொற்றுக்களும், இத்தாலியில் 80,589 தொற்றுக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் (57,736) மிக வேகமாகத் தொற்றுக்குள்ளாகும் நாடுகளில் ஒன்று. ஜேர்மனி, ஆரம்பத்தில் தொற்று வேகம் அதிகமிருந்தாலும் அதன் இறப்பு வீதம் ஒப்பீட்டளவில் உலக சராசரியான 3.5% வீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

உலகெங்கும் கொறோணாவைரஸ் தொற்றுக்கள், மரணங்கள் நடைபெறும் நிகழ்வுகளை நிகழ்கால எண்ணிக்கைகளுடன் ‘உலகமானி’ என்றொரு இணையத்தளம் தருகிறது.

உலகமானியின் தரவுகளின்படி, இந்தியாவில் 733 தொற்றுக்களும், 20 மரணங்களும், இலங்கையில், 106 தொற்றுக்களும், எவருமே மரணமடையாத நிலையும் உள்ளது.

அமெரிக்காவில் அறியப்பட்ட நோய்த் தொற்றுக்களில் அரைவாசிக்கு மேல் நியூ யோர்க் மாநிலத்தில் நடைபெற்றுள்ளதெனத் தெரியவருகிறது.

சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்கா கொறோனாவைரஸ் கொள்ளை நோயின் அடுத்த மையமாக (epicentre) மாறக்கூடிய சாத்தியங்களுண்டென, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் அண்ணளவாக 100 தொற்றுக்களே அறியப்பட்டிருந்தன.நியூ யோர்க்

நேற்று மட்டும் (புதன்), நியூ யோர்க்கில் மட்டும், கொரோனாவைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 100 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்த நகரின் ஆளுநர் கூமோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல்தர நோய் தொற்றும் நகரமாக நியூ யோர்க் தற்போது வந்துள்ள நிலையில், அதன் சுகாதார சேவைகள் திணைக்களம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாகவும் நிலைமை மேலும் மோசமடையும் அபாயமுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை தற்போது 385 ஆகியிருக்கிறது. இன்று வரை, அமெரிக்கா முழுவதும் ஆயிரத்துக்கும் மேலான இறப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூ யோர்க்கின் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை ஒரு நாளிலே 6,500 ஆள் அதிகரித்து தற்போது 37,200 ஐத் தாண்டியிருக்கிறது. இந்த நிலையில் அதன் சுகாதார சேவைகள் திணைக்களத்தால் சமாளிக்க முடியாமற் போகலாமென ஆளுநர் கூமோ கவலை கொண்டிருக்கிறார்.

இந்த அவசரகால நிலைமையைச் சமாளிக்க நியூ யோர்க் மருத்துவமனைகளில் 110,000 கட்டில்கள் தேவைப்படலாம் என அவர் முன்னர் எதிர்வு கூறியிருந்தார். தற்போது அது 140,000 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை நோயாளிகளுக்குத் தேவையான சுவாசக் கருவிகள் (ventilators) போதாமையும் தற்போதுள்ள பிரச்சினைகளை மேலும் மோசமாக்கிறது எனவும் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது தயாரிப்புத் திறன்களை அதிகரிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related:  கோவிட்-19 | 1% த்துக்கும் குறைவான கனடியர்களே நோயெதிர்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள் - கனடா இரத்த சேவைகள் அறிக்கை

“பலர் மருத்துவமனைகளில் நீண்டகாலமாக இருக்கிறார்கள். காலம் போகப்போக அவர்களது நிலைமை மோசமடைவதால் இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த தான் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளேன்” எனவும் அவர் தெரிவித்தார்.நியூ யோர்க் நகரின் முக்கிய மக்கள் கூடும் இடங்கள், பூங்காக்கள், நகர் மையங்கள், விளையாட்டுத் திடல்கள் ஆகியன விரைவில் மூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அருகி வரும் வளங்களை நிவர்த்தி செய்ய ஆதரவு தரும்படி அவர் கடந்த சில நாட்களாக மத்திய அரசைக் கேட்டு வருகிறார்.

பொதுச் சுகாதார அதிகாரிகள், மருத்துவமனைக்கு கட்டில்களையும், இதர மருத்துவ உபகரணங்களையும் மித மிச்சமாக வைத்திருப்பவர்கள் தந்துதவும்படியும், தங்கள் நேரத்தை வழங்க விரும்பும் மருத்துவர்க, தாதிகளையும் முன்வந்து உதவும்படியும் ஆளுநர் கூமோ கேட்டுள்ளார்.

அதே வேளை இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு இடம் போதாமையால், நியூ யோர்க் நகரிலுள்ள பெல்வியூ மருத்துவ மனைக்கு வெளியே புதிய தற்காலிக கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. வெறிச்சோடிப் போயிருக்கும் வீதிகளில் காவற்துறையினர் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவைக்கதிகமான மனிதக் கூடல்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ் தாக்கத்தால் சீரழிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவென நேற்று (புதன்) அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட US $ 2.2 ட்ரில்லியன் அனர்த்த நிவாரணம் போதாது எனவும், தனது மாநிலம் மட்டும் US $15 பில்லியன் வருமானத்தை ஏற்கெனவே இழந்திருக்கிறது எனவும் ஆளுநர் கூமோ சாடியுள்ளார்.

Print Friendly, PDF & Email
கொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்
கொறோணாவைரஸ் - அமெரிக்கா முதலாமிடத்தில்

கொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்