Spread the love

தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருக்கு இது நல்ல செய்தி!

வைத்தியன்

கொறோனாவைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உழைத்துவரும் வேளையில், அவர்களுக்கு உற்சாகம் தரும் இன்னுமொரு விடயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தது உடலுக்குள் புகுந்த SARS-CoV-2 வைரஸைத் தாக்குவதற்கு உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி (நிர்ப்பீடனத் தொகுதி) உற்பத்தி செய்த T Cells எனப்படும் கலங்களை. இவை உடலில் வைரஸ் போன்ற வெளி எதிரிகள் நுழையும் போதும், உடலினுள் புற்றுநோய் போன்ற கலப்பெருகையின் போதும் உற்பத்தியாகின்றன. இக் கலங்கள் ஒவ்வொரு எதிரிக்குமேற்பச் செய்யப்படுபவை. கோவிட்-19 நோய்த்தொற்று வந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை ஆராய்ந்தபோது அதில் T cells இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

உடலின் நிர்ப்பீடன ஆற்றல் பற்றி மறுமொழி யில் சில் கட்டுரைகள் வந்திருந்தாலும்,

இந்த T cells ஐப்பற்றி விளக்குவதற்கு இன்னுமொரு தடவை நிர்ப்பீடன ஆற்றலைப் பற்றிப் பார்ப்பது அவசியம்.


நிர்ப்பீடனத் தொகுதியின் பணி

உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலுக்குப் பொறுப்பான உடலின் அங்கம் நிர்ப்பீடனத் தொகுதி எனப்படும். இரத்தச் சுற்றோட்டத் தொகுதியைப்போல் இதுவும் ஒன்று ஆனால் இருதயத்தைப் போல் இதற்கென்றொரு pump இல்லை. உடலின் தசைத் தொகுதி கொடுக்கும் அழுத்தத்தினால் தான் இதற்குள் இருக்கும் திரவம் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிகிறது. தேகாப்பியாசம் உடலின் நிர்ப்பீடன ஆற்றலை அதிகரிக்கிறது ஏன் என்பதற்கு உங்களுக்கு இப்போது விளக்கம் தெரிந்திருக்கும்.

நிர்ப்பீடனத் தொகுதி உடலின் பாதுகாவலைக் கவனிக்கிறது. அதற்காக அது இரண்டு ‘இராணுவங்களை’ வைத்திருக்கிறது. உடலில் வைரஸ், பக்டீரியா போன்ற ஒரு எதிரி நுழைந்தவுடன் முதலாவது அணி உடனடியாகக் களத்தில் இறங்குகிறது. ஒருவர் பிறக்கும்போது அவரோடு சேர்ந்துவந்த இந்த பாதுகாப்பு நடவடிக்கையை innate immunity என்பார்கள்.

இந்த படையணியிடம் தப்பி உள்ளே போகும் எதிரிகளைக் கவனிப்பது இரண்டாம் படையணி. இது பிறக்கும்போதே ஒருவருக்குக் கிடைப்பதில்லை. அவரது உடல பலவிதமான நோய்க் கிருமிகளைச் சந்திக்க நேரும்போது அவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ப உருவாக்கப்படும் custom made படையணிதான் இது. இப் படையணி மேற்கொள்ளும் நோயெதிர்ப்பு ஆற்றலை acquired or adaptive immunity என்பார்கள்.

இந்த இரண்டாம் படையணி தாம் சந்திக்கும் கிருமிகளை அழித்தொழிக்க விசேட கருவிகளை உருவாக்குகின்றன. அதனால் அவற்றுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. அக் கருவிகளுக்குப் பெயர் T-cells மற்றும் B-Cells. இக் கலங்கள், innate immune cells ஐப் போலல்லாது சற்று நீண்ட காலம் வாழக்கூடியவை. எதிரிகளை ‘ஞாபகத்தில்’ வைத்திருக்கக் கூடியவை. ஒரு எதிரி இரண்டாம் தடவை வந்தால் அதை உடனே இனம் கண்டு தாக்கியழிக்கக்கூடியவை. தடுப்பு மருந்துகளும் இப்படியான ஒரு நடைமுறையையே பின்பற்றுகின்றன. முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழக்கப்பட்ட கிருமிகளைக் கொண்டதுதான் தடுப்பு மருந்து. SARS-CoV-2 வைரஸைப் போல ஒன்றை இந்த இரண்டாம் படையணிக்குக் காட்டிவிடுவதே தடுப்பு மருந்து செய்யும் வேலை. உண்மையான SARS-CoV-2 உடலில் நுழையும்போது இந்த் இரண்டாம் படையணி உடனடியாகக் களத்தில் இறங்கும்.

Related:  பிறபொருளெதிரி (antibody) பரிசோதனைக்கு கனடிய அரசு அங்கீகாரம்!

B-Cells

கொறோனாவைரஸுக்கு எதிரான தடுப்பாற்றலை உடல் உற்பத்தி செய்கிறது - நிரூபிக்கிறார்கள் விஞ்ஞானிகள் 1

‘B’, ‘T’ கலங்கள் எலும்பு மச்சையில் உற்பத்தியாகிப் பின்னர் வெவ்வேறு உறுப்புகளில் முதிர்ச்சியடைந்து தத்தம் பணிகளுக்கேற்ப உருமாற்றம் பெறுகின்றன.

‘B’ கலங்கள் தமது மேற்பரப்பில் ‘Y’ உருவத்தில் வைத்திருக்கும் புரதங்களைத்தான் நாம் பிறபொருளெதிரி (antibodies) என்கிறோம். கிருமியொன்று உடலுக்குள் வரும்போது அதன் அடையாளத்தை antigen (விமான நிலையத்தில் பொதிகளிற்கு கட்டிய நாடாக்களின் மூலம் தத்தமது பொதிகளை அடையாளம் காண்பதுபோல்) என்கிறோம். அந்தக் குறிப்பிட்ட antigen உடன் கொழுவிக்கொள்ளவல்லதாகவே இந்த பிறபொருளெதிரியின் (antibody) வடிவம் இருக்கும். எனவே ஒரு எதிரிக்குத் தகுந்ததாவே B-cells தமது antibody களைத் தயாரிக்கும். சரியான எதிரி அகப்பட்டால் அதனோடு பிணைக்கப்பட்டவுடன் B-cells மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம் பெருந்தொகையான பிறபொருளெதிரிகளை உருவாக்குதலும், ‘ஞாபகக்’ கலங்களை உருவாக்குதலுமாகும். சரியான எதிரியோடு பிணையாவிட்டால் இந்த B-cell இறந்துவிடும். எனவே SARS-CoV-2 வைரஸ் ஒருவரது உடலில் நுழைந்தால் இந்த இரண்டாம் படையணி களத்தில் இறங்கியிருந்தால் அதன் அடையாளமாக ஏராளமான பிறபொருளெதிரிகள் இரத்தத்தில் இருக்கும். இதையே தான் antibody testing மூலம் கண்டுபிடிப்பார்கள்.T-cells

எலும்பு மச்சையில் உற்பத்தியாகும் T-cells தைமஸ் எனப்படும் உறுப்பில் முதிர்ச்சியடைந்து தமது கடமைகளுக்கேற்ப உருவமாற்றம் பெறுகின்றன. T-cells இல் இரண்டு வகையுண்டு. உதவியாளர் (helper T-Cells), கொலைகாரர் (killer T-Cells). பிறபொருளெதிரிகளை உருவாக்கும்படி B-Cells ஐத் தூண்டிவிடுவது இந்த உதவியாளர் T-Cells தான். கிருமிகள் தொற்றிய கலங்களைக் கொல்வது இந்த கொலைகார T-cells.

கலிஃபோர்ணியா லா ஜொல்லா இன்ஸ்டிடியூட் இல் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியின்போது, கோவிட்-19 தொற்று வந்து குணமாகிய 20 நோயாளர்களின் இரத்ததில் SARS-CoV-2 வைரஸ்களில் இருந்து எடுத்த புரதங்களுடன் கலந்தபோது, அவர்கள் அனைவரதும் helper T-cells இந்த வைரஸின் spike protein ஐ உடனடியாக அடையாளம் கண்டுகொண்டுவிட்டன. அத்தோடு அவர்களில் 70 வீதமானவர்களில் killer T-Cells அப் புரதத்தைத் தாக்கவும் தொடங்கிவிட்டன. ஒருவரின் உடலில் வைர்ஸ் தொற்றும்போது உடல் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையை உடல் மேற்கொள்கிறது என்பதை இப்பரிசோதனைகள் நிரூபிக்கின்றன என இவ்விஞ்ஞானிகளில் ஒருவரான ஷேன் குறொட்டி கூறுகிறார்.

அதே வேளை, கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகாதவர்களில் (2015-1018 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இரத்தத்தில் SARS-CoV-2 வைரசின் புரதம் (spike protein) அறிமுகம் செய்யப்பட்டபோது, அங்கும் helper – T cells உருவாகியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், கொறோனாவைரஸின் வேறு வடிவங்களால் (தடிமன், இன்ஃபுளுவென்சா) அக் காலத்தில் அவர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

இயற்கையாகவோ (நோய்த் தொற்றுக்களின் மூலமாக) அல்லது செயற்கையாகவோ (தடுப்பூசிகளின் மூலமாக) தமது நிர்ப்பீடன ஆற்றலை வளர்த்து வைத்திருப்பவர்களுக்கு SARS-CoV-2 வைரஸின் தாக்கம், இவை எதுவுமற்ற சுகதேகிகளை விடக் குறைவாகவிருக்குமோ என்று இனியும் சந்தேகப்படத் தேவையில்லை.

Print Friendly, PDF & Email