Health

கொறோணா வைரஸ் | தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.529 திரிபு அச்சம் தருவதாயுள்ளது – விஞ்ஞானிகள்


கொறோணா வைரஸின் புதிய திரிபொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இதன் வடிவமைப்பு உடலின் எதிர்ப்புத் தன்மையை ஏமாற்றிப் பிழைக்கக்கூடியதாகக் காணப்படுவது அச்சம் தருவதாக உள்ளதாகவும் தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் நேற்று (25) அறிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரின் வியாபார மையத்தில் கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரித்துவரும் தொற்று பற்றி ஆராய்ந்தபோதே, B.1.1.529 எனக் குறியீடிடப்பட்டுள்ள இப் புதிய திரிபை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை 22 நோயாளிகள் புதிய திரிபினால் தொற்றப்பட்டவர்களாக அறியப்பட்டுள்ளனர். தென்னாபிரிக்காவிலிருந்து ஹொங் கொங்கிற்குச் என்ற ஒருவருக்கும் இத்திரிபு தொற்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, எஸ்வத்தினி, லெசோத்தோ, நமீபியா, சிம்பாப்வே ஆகிய 6 ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானப்பயணங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளது.

B.1.1.529 திரிபு பல அபூர்வமான வடிவத்தைக் கொண்டதாகத் திரிபடைந்திருப்பது அச்சத்தைத் தருகின்றது எனவும் உடல் ஏற்கெனவே உருவாக்கியிருக்கும் எதிர்ப்பு சக்திகளை இப்புதிய வடிவம் இலகுவாக ஏமாற்றிக்கொள்ள முடியும் எனத் தாம் கருதுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இவற்றின் தொற்று திறன் பற்றித் தாம் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் புதிய திரிபினால் நாட்டில் தொற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ ஃபாஹ்லா தெரிவித்துள்ளார்.

பொதுவாக உடலுக்குள் புகும் வைரஸின் கூர்ப் புரதத்தின் (spike protein) உருவக் கட்டமைப்பை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலமே உடலின் எதிர்ப்பு சக்தி இவவைரஸ்களை இனம் கண்டு அழிக்கின்றன. இதை அறிந்துகொண்ட வைரஸ்கள் தமது உயிர் பிழைத்தலுக்காகத் தமது உருவத்தை அவ்வப்போ மாற்றிக்கொள்கின்றன. இவ்வுருவக் கட்டமைப்பின் ஒவ்வொரு மாற்றமும் திரிபு (mutation) எனப்படுகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள B.1.1.529 திரிபு பல கட்டமைப்பு மாற்றங்களை ஏக காலத்தில் செய்துகொண்டுள்ளதாகவும் இதனால் இவற்றின் பரவு திறன் எப்படியிருக்குமெனத் தம்மால் எதிர்வுகூற முடியாதுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



ஒவ்வொரு திரிபின் போதும் மனிதக் கலங்களைப் பற்றிப்பிடித்து உள்ளே நுழையும் கூர்ப்புரதமென்ற கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவதாக விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். அவ்வடிவங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதால் நோயெதிர்ப்புக் கலங்கள் அவற்றைத் தேடியழித்து விடுகினறன. வைரஸ் இக்கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துகொண்டு வரும்போது நோயெதிர்ப்புக் கலங்கள் அவற்றை இனம் கண்டு அழிக்க முடியாமல் போவதால் வைரஸ் உடற்கலங்களுக்குள் புகுந்து தன்னைக் கோடிக்கணக்கில் பெருக்கிவிடுகிறது.

mRNA தடுப்பு மருந்துகளில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு புதிய திரிபுக்கு ஏற்றவாறு தடுப்பு மருந்துகளையும் வடிவமைத்து விடமுடியும். ஆனால் அவற்றைப் பரீட்சிப்பதற்கு நீண்ட காலம் தேவை. எனவே தான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.