• Post category:HEALTH
  • Post published:January 8, 2021
Spread the love

அகத்தியன்

உலகைக் கலக்கிவரும் கோவிட் பெருந்தொற்று உங்களுக்குத் தெரிந்த பலரையும் பீடித்திருக்கலாம். சிலர் இறந்தும்கூட இருக்கலாம். மரணமானவர்களில் சிலர் ஆரோக்கியமான இளையவர்களாக இருப்பதும், தப்பிப் பிழைத்த பலர் வாழ்வியல் நோய்களால் பீடிக்கப்பெற்ற முதியவர்களாக இருப்பதும் பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும் விடயங்கள்.

கொறோணாவைரஸைப் பற்றியோ அதனால் உண்டாகும் கோவிட்-19 நோய் பற்றியோ உலகம் இன்னும் முற்றாக அறிந்துகொண்டுவிடவில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்தி நாம் இந் நோயை அணுக வேண்டும். இந் நோய் பற்றிய ஆராய்ச்சிகளும் அதை ஒழிக்க மேற்கொள்ளப்படும் கட்டுபாட்டு நடவடிக்கைகளும் ஒரு வகையான trial and error எனப்படும் பரிசோதனை முயற்சிகள் எனவே பார்க்கப்பட வேண்டும்.

வித்தியாசமான பரிசோதனைகள்

கொறோணாவைரஸ் ஒருவருக்குத் தொற்றியிருக்கிறதா என்பதை அறிவதற்கு தற்போது இரண்டு பிரதான பரிசோதனை முறைகள் பாவிக்கப்படுகின்றன. ஒன்று வைரஸ் பரிசோதனை (Viral Testing), மற்றது இரத்தப் பரிசோதனை (Serology Testing).

வைரஸ் பரிசோதனை (Viral Testing)

வைரஸ் பரிசோதனை, PCR பரிசோதனை, Antigen பரிசோதனை என்று இரண்டு வகைகளை உள்ளடக்கும். உடனடி நோய்த் தொற்றுக்களைக் (current infections) கண்டுபிடிக்க வைரஸ் பரிசோதனைகள் பாவிக்கப்படுகின்றன. இதன்போது ஒருவரது மூக்கு அல்லது தொண்டைத் திரவங்களையோ அல்லது உமிழ்நீரையோ பாவித்து அதில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா எனப் பரிசோதிக்கப்படுகிறது. இப் பதார்த்தங்களில் வைரஸ் இருக்கிறதா என்பதை நேரடியாகப் பரிசோதிப்பது Antigen Test எனப்படுகிறது. அதே வேளை, இப் பதார்த்தங்களில் வைரஸ்களின் மூலக்கூறுகளான நியூக்கிளிக் அமிலங்கள் (nucleic acids) இருக்கின்றனவா என்பதை அறிவது PCR பரிசோதனை.



PCR பரிசோதனை

கொறோணாவைரஸ் | PCR பரிசோதனை, Antigen பரிசோதனை பற்றிய எளியமுறை விளக்கம் 1

இப் பரிசோதனையைச் செய்யும் தொழில்நுட்பம் பலவருடங்களாகப் பாவிக்கப்பட்டுவரும் ஒன்று. சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் ஃபுளூ காய்ச்சல் முதல் ஒருவரது தந்தையை அறிவதுவரை பல தேவைகளுக்காக பாவிக்கப்படும் ஒரு பரிசோதனை இது. ஆகவே இதன் பெறுபேறுகளில் சந்தேகம் கொள்வதற்கு ஏதுமில்லை.

இப் பரிசோதனையின்போது முதலில் மூக்கு அல்லது தொண்டையினுள் திணிக்கப்படும் பருத்திக் குமிழின் மூலம் அங்குள்ள சளி அல்லது திரவம் தோய்த்தெடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் ஒருவருக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்கான வைரஸ் இப்பகுதியிலுள்ள சளியில் அதிகமாகக் காணப்படுவதனால் தான். சளி என்பது வெளி உலகுடன் தொடர்புபடு ஒருவரது உடலுறுப்புக்களின் மேற்பரப்புக்களைக் கிருமிகள் மற்றும் தேவையற்ற அழுக்குகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு பதார்த்தம்.

உமிழ்நீர்ப் பரிசோதனை, பருத்திக்குழிழ்ப் பரிசோதனையைவிட இலகுவானதும், வலி குறைந்ததும், வீட்டிலிருந்துகொண்டே செய்யக்கூடிய ஒன்றுமாகும். ஆனால் இப் பரிசோதனை இன்னும் பரந்த அளவில் பாவனைக்கு வரவில்லை.

மூக்கு அல்லது தொண்டையிலிருந்து எடுக்கப்பட்ட பதார்த்தத்தில் கொறோணாவைரஸின் கூறுகள் எதுவும் இருக்கிறதா என்பதே ந்மது நோக்கம். ஆனால் இப் பதர்த்தங்களில் பல்லாயிரக்கணக்கான இதர நுண்ணுயிர்கள் மற்றும் எமது உடலின் கூறுகள் எனப் பல கோடி உயிரினங்களின் கூறுகள் இருக்கலாம். இவற்றுள் மிகச் சிறியதொரரு பங்கே நாம் தேடும் வைரஸாக இருக்கலாம். எனவே அவற்றைக் கண்டுபிடிப்பது வைக்கோற்போரில் ஊசியைத் தேடுவது போன்றது. அப்படிக் கண்டுபிடித்தாலும் சில வைரஸ் கூறுகளை வைத்துக்கொண்டு பரிசோதனைகளைச் செய்துவிட முடியாது. அதற்காக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இன்னுமொரு தொழில்நுட்பமே இந்த PCR பரிசோதனை.

Related:  கோவிட் | இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பம்


வைரஸ் உற்பத்தி

கொறோணாவரைஸைப் பொறுத்தவரையில் இப் பரிசோதனையில் ஒரு சிக்கலும் எழுகிறது. அதாவது SARS-CoV-2 எனப்படும் இவ் வைரஸ் ஒரு RNA ரகமானது. இதன் கட்டமைப்பு ஒரு இழையுடன் கூடியது (single strand).அதனால் பரிசோதனையின்போது இலகுவாகச் சிதைந்து போகக்கூடியது. இச் சிதைவைத் தடுப்பதற்காக முதலில் இப் பரிசோதனையின் போது செய்யப்படுவது இந்த RNA வைரஸை இரு இழைகளுடன் கூடிய DNA வைரஸாக மாற்றுவது. இதனால் வைரஸின் கட்டமைப்பு இறுக்கம் பெறுகிறது. இச்செய்முறைக்காக அவர்கள் ஒரு நொதியத்தைப் (enzyme) பயனபடுத்துகிறார்கள்.

இப்போது எழும் சிக்கல், வைரஸின் DNA யும் நோயாளியின் (நோய் தொற்றியிருந்தால்) DNA யும் கலந்து கூழாகிவிடுவது. இதற்குள் வைரஸின் DNA யை அடையாளம் கண்டு (target DNA) அதைப் பிரதி எடுத்துக் கொள்வதே அடுத்த செயன்முறை. இதை வெற்றிகரமாகப் பிரதி எடுத்ததும் ஒரு நொதியத்தைப் பாவித்து அதன் மில்லியன் கணக்கான பிரதிகள் எடுக்கப்படுகின்றன. பல தடவைகள் மீளச் செய்யப்படும் இச் செயன்முறையினால் (chain reaction) பல மில்லியன் வைரஸ் கூறுகளின் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே அந்நோயாளியில் வைரஸ் தொற்று இருந்திருந்தால் வைரஸ் மூலக்கூறுகளின் மில்லியன் கணக்கான பிரதிகளை PCR இயந்திரம் இலகுவாக அடையாளம் கண்டுவிடும். வைரஸ் கூறுகள் அங்கு இல்லாதிருந்தால் அப் பரிசோதனையின் பெறுபேறு negative என்று வரும்.

இப் பரிசோதனை மூலம் பெறுபேறுகளைப் பெற ஆய்வுகூடத்துக்கு சில மணித்தியாலங்கள் எடுக்கிறது.

PCR பரிசோதனையின் துல்லியம்

மனிதர்களிலிருந்து எடுக்கப்படும் பதார்த்தங்கள் முறைப்படி எடுக்கப்பட்டால் இப் பரிசோதனை மிகவும் துல்லியமான, நம்பகத்தன்மையுடனான முடிவுகளைத் தருகின்றன. மூக்கினுள் எடுக்கப்பட்ட சளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் நோய் தொற்றிய அன்று (day zero) இதன் துல்லியம் 94% எனவும், நோய் தொற்றிப் 10 நாட்களின் பின் செய்யப்பட்ட பரிசோதனைகளின் துல்லியம் 65% எனவும் கூறப்படுகிறது. தொண்டைக்குழியில் எடுக்கப்பட்ட பதார்த்தங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் துல்லியம், தொற்றிய அன்று 88% மாகவும், 10 வது நாளில் 47% எனவும் கூறப்படுகிறது.



தவறான முடிவுகள் (False Positives / False Negatives)

ஒருவரிலிருந்து போதுமான அளவு பதார்த்தம் சேகரிக்கப்படாவிட்டால் அவருக்கு நோய்த் தொற்று இருந்தாலும் பரிசோதனை முடிவுகள் ‘தொற்றில்லை’ என முடிவுகளைத் தர (false negative) வாய்ப்புண்டு.

தவறான வழிகளில் பதார்த்தங்கள் சேகரிப்பப்பட்டாலும் பொய்யான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

சரியான காலத்தில் பதார்த்தங்களைச் சேகரிப்பதும் முக்கியம். அதாவது நோய்த் தொற்றின் அறிகுறிகள் தெரியவாரம்பித்த முதல்நாளன்றுதான் வைரஸ்களின் எண்ணிக்கை இப்பதார்த்தங்களில் அதிகமாக இருக்கும். ஒருவர் நோயாளிக்கு அருகில் போய்விட்டேன் என்பதற்காக உடனே பரிசோதனைக்குப் போனால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லையெனவே பதில் வரலாம். அவரது உடலில் பரிசோதனைக்குப் போதுமான அளவு வைரஸ்களின் எண்ணிக்கை (viral load) இல்லை என்பதே அதற்கு அர்த்தம். தொற்று ஏற்பட்டு சில நாட்களில் உடலின் எதிர்ப்பாற்றல் உக்கிரமாகச் செயற்படவாரம்பித்ததும் வைரஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இப்படி நோய் தொற்றியிருந்தும், உரிய காலத்தில் பரிசோதனைகள செய்யப்படாவிட்டால் அவற்றின் பெறுபேறுகள் ‘தொற்றில்லை’ (false negative) என வருவதற்கான சாத்தியங்களுமுண்டு.

Related:  ஐஸ் கிரீமில் கொறோணாவைரஸ் - சீனாவில் கண்டுபிடிப்பு

அன்ரிஜென் பரிசோதனைகள் (Antigen Tests)

அன்ரிஜென் பரிசோதனைகள் எனப்படுபவை PCR பரிசோதனைகளைப் போல் வைரஸின் மரபணுக்களைப் பரிசோதனை செய்யாது, அதன் உடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் புரதங்களைப் (spike proteins) பரிசோதிக்கின்றன. இப் பரிசோதனைகள் மருத்துவர் அலுவலகங்கள், மருந்தகங்கள் போன்ற இடங்களில் வைத்து இலகுவாகச் செய்யக்கூடியதாக இருப்பினும் இவற்றின் பெறுபேறுகள் PCR பரிசோதனைகளைப் போலத் துல்லியமானவை அல்ல எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் பரிசோதனைகள் மூலம் அறிகுறிகளற்ற நோயாளிகள் ( asymptomatic) மற்றும் அறிகுறிகள் தோற்றுமுன்னரான (pre-symptomatic) நோயாளிகளில் நோயைப் பரிசோதிக்க மிகவும் உதவுகிறது என்பது சில நிபுணர்களின் கருத்து.



இரத்தப் பரிசோதனை (Serology Tests)

நாட்பட்ட தொற்றுக்களைப் பரிசோதிக்க பிறபொருளெதிரிப் பரிசோதனை (antibodies test) எனப்படும் இரத்தப்பரிசோதனை பாவிக்கப்படுகிறது. நோய்த்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டதும் சில நாட்களுக்குள் அத் தொற்றுக்குக் காரணமான கிருமியை அழிப்பதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் பிறபொருளெதிகள் உடலில் தோன்றியுள்ளனவா என்பதை இப் பரிசோதனை கண்டறிகிறது.

இப் பரிசோதனை, ஒருவரது உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டுச் சில நாட்களில் (பொதுவாக 5 நாட்கள்) உடல் தனது எதிர்ப்பாற்றலை விருத்திசெய்த பின்னர் இரத்தத்தில் இருக்கும் அந்த எதிர்ப்பாற்றலின் தடயங்களை (பிறபொருள் எதிரி) அறியும் ஒரு நடைமுறை. நோய்த்தொற்றுக் கண்ட சில நாட்களின் பின்னர் செய்யப்படும்போது இதன் துல்லியம் அதிகமாகவிருக்கும். நோயிலிருந்து குணமான ஒருவரது உடலில் இத் தடயங்கள் அதிகமாக இருக்கும்போது அவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவது அரிது. ஒரு நாட்டின் 70 வீதமான மக்கள் இப்படியான பிறபொருளெதிரிகளை உருவாக்கியிருப்பானார்களால் அதை மந்தை நிர்ப்பீடனம் (Herd Immunity) என்பதுடன் நோய் அருகிப் போகிறது எனவும் கருத முடியும்.

இப் பரிசோதனையிலுள்ள குறைபாடு என்னவென்றால், தற்போது நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளை அது கண்டுபிடிக்காது. அறிகுறிகள் ஆரம்பித்த சில நாட்களில் அல்லது நோயிலிருந்து குணம்பெற்ற பின்னரான நாட்களில் தான் இத் தடயங்கள் ஒருவரது உடலில் இருக்கும். வைரஸ்கள் ஒழிக்கப்பட்ட பின்னரும் ஒருவரது உடலில் இந்த பிறபொருளெதிரிகள் தங்கியிருந்து மீண்டும் அதே கிருமி தாக்கும்போது அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இப் பிறபொருளெதிரிகள் ஒருவரது இரத்தத்தில் இருப்பதால் அவரது இரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதா எனபதை அறிந்துகொள்ள முடிகிறது.

துரிதப் பரிசோதனைகள் (Rapid Tests)

LAMP எனப்படும் இப் பரிசோதனை PCR பரிசோதனையைப் போலவே வைரசின் மரபணுக் கூறுகளைப் பெருக்குவதன் மூலம் செய்யப்படுமொன்று. மருத்துவரின் சிபார்சுப்படி மேற்கொள்ளப்படும் இப்பரிசோதனை, அர மணித்தியாலத்தில் முடிவுகளைத் தரவல்லது எனினும், மேற்கூறிய இதர பரிசோதனைகளைப் போல் துல்லியமான முடிவுகளைத் தருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

Related:  கொறோணாவைரஸின் புதிய அவதாரம் ஆபத்தானதா? | ஒரு பார்வை

Print Friendly, PDF & Email