Spread the love

மனிதரில் ஆபத்து விளைவிக்கவில்லை; உடலில் எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்கிறது

ஜூலை 20, 2020: பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொறோணாவைரஸ் தொற்றுக்கு எதிராந தடுப்பு மருந்த்தொன்றை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் செய்துவரும் ஆராய்ச்சியின் மனிதப் பரிசோதனைகள் (clinical trials) வெற்றியளித்திருப்பதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்டுவரும் குழுவின் தலைவர் , பேராசிரியர் சேறா கில்பேர்ட் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த டிசம்பர் 2019 இல் ஆரம்பித்ததெனக் கருதப்படும் கொரோணாவைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு உலகெங்கும் பல மருத்துவ நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் தடுப்பு மருந்து பற்றி ஏற்கெனவே மருத்துவ சமூகங்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதுவரை 5 இலட்சம் மக்களைக் கொன்று குவித்திருக்கும் இவ் வைரஸைத் தடுத்து நிறுத்துமென எதிர்பார்க்கப்படும் இத் தடுப்பு மருந்தின் முதலாவது மனிதப் பரிசோதனையின்போது, மனிதரில் அது எந்தவிதமான தீங்குகளையோ, விபரீதமான எதிர்வினைகளையோ விளைவிக்கவில்லை எனவும் பரிசோதிக்கப்பட்டவர்களின் உடல்களில் கொறோணாவைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்கியிருக்கிறதென்றும் ஆரம்ப பெறுபேறுகள் காட்டுகின்றன.

1,077 பேரில் மேற்கொள்ளப்பட்ட, முதலாவது, இரண்டாவது (Phase I & II trials) மனிதப் பரிசோதனைகள் 56 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இவற்றின் ஆரம்ப பெறுபேறுகளின்படி பரிசோதநையில் ஈடுபட்டு வரும் மனிதரில் பிறபொருளெதிரிகளும், T-cell எனப்படும் கிருமியழிப்புக் கலங்களின் உருவாக்கமும் பலமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனவென, இவ் வாரய்ச்சி பற்றி லான்செட் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 பேரைக் கொண்ட இரண்டாவது குழுவொன்றில் இம் மருந்தின் அதிகரிக்கப்பட்ட அளவில் (dose) மருந்தைக் கொடுத்தபோது நோயெதிர்ப்பாற்றல் இன்னும் அதிகரித்ததை ஆராய்ச்சியாளர் அவதானித்துள்ளனர்.



ChAdOx1 nCoV-19 என அடையாளமிடப்பட்ட இத் தடுப்பு மருந்து மனிதரில் பாதுகாப்பான சூழலைக் காட்டிவரும் அதே வேளை, அதிகளவு பிறபொருளெதிரிகளையும் உருவாக்கியிருக்கிறது எனவும், மனித கலங்களுக்கு உள்ளேயும் (cellular), வெளியேயும் (humoral) இம் மருந்து, கிருமிகளை அழிப்பதற்கான எதிர்ப்பொருள்களை உருவாக்குவது என்பது மிகவும் உற்சாகம் தரும் விடயம் எனவும், அடுத்த கட்டமாக, மூன்றாவது மனிதப் பரிசோதனைகளுக்குப் போவதற்கு இது போதுமானதாகவிருக்கிறது என லான்செட் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கோவிட்-19 நோய்க்கெதிராக இத் தடுப்பு மருந்து பாவனைக்கு விடப்படுமுன் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது என பேராசிரியர் கில்பேர்ட் தெரிவித்துள்ளார்.

“இவ் வைரஸ் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, SARS-CoV-2 வைரசுக்கு எதிரான பாதுகாப்பைத் தரக்கூடிய அளவுக்கு எவ்வளவு பலமான நோயெதிர்ப்பாற்றலைக் கிளறிவிடவேண்டும் என்னும் அளவு எங்களுக்குத் தெரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related:  கோவிட் அமெரிக்கா | எந்த நோயாளி காப்பாற்றப்படவேண்டும் எனத் தீர்மானிக்க மருத்துவமனையில் ஒரு குழு!

இச் செய்திகளைக் கேள்விப்பட்ட பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இவ்வாராய்ச்சிக் குழுவிற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

Print Friendly, PDF & Email