Health

கொறோணாவைரஸ் காற்றின் மூலம் பரவலடையுமா?


விஞ்ஞானிகளுக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்குமிடையில் இழுபறி

கொறோணாவைரஸ் கிருமிகள் மிகச் சிறிய துணிக்கைகள் மூலம் காற்றில் பலமணி நேரம் மிதந்து செல்ல முடியுமா என்பது பற்றி ஆராயும் முயற்சியொன்றை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

திங்களன்று (ஜூலை 6) சில விஞ்ஞானிகள், கொறோணாவைரஸ் காற்றின் மூலம் பரவலடைவதற்கான சாத்தியங்கள் பற்றி ஒரு திறந்த கடிதத்தைப் பிரசுரித்திருந்தனர். இதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் விடுத்த அறிக்கையில், குறிப்பாக சன நெரிசலான இடங்களில், மூடப்பட்ட இடங்களில், காற்றோட்டம் குறைவான இடங்களில் அப்படியான நிகழ்வு நடக்கமுடியாதெனவும் கூறமுடியாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ வெளிப்படும் திரவத் துணிக்கைகள் இன்னுமொருவரது உடலின் மென்சவ்வுத் துவாரங்களில் தொடர்புபடுவதனால் தான் கொறோணாவைரஸ் பரவுகிறது என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டுதான் உலக சுகாதார நிறுவனம் தனது வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை வடிவமைத்து மக்களுக்கு அறிவுறுத்தியும் வந்தது.

ஆனால் முந்தய Sars-Cov வைரஸைப் போலன்றி, இந்த புதிய Sars-Cov-2 வைரஸ், மிகச் சிறிய துணிக்கைகளில் ஒட்டிக்கொண்டு காற்றில் பலமணி நேரம் மிதந்து செல்லக்கூடியது என்ற கருத்தைச் சில விஞ்ஞானிகள் முன்வைத்திருந்தனர். ஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனம் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் பகிரங்கமாக திறந்த கடிதம் மூலம் வேண்டுகோளை விடுத்திருந்தனர்.



வைரஸ் காற்றின் மூலம் பரவுமாகவிருந்தால், வீடுகளிலும், வேலைத் தலங்களிலும், தொடர்மாடிக் கட்டிடங்களிலும் குழாய்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு இலகுவாக சுகதேகிகளைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதன் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியியலாளர்களின் உதவியுடன் பல ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். அதிலொன்று, மருத்துவமனைகளில் ஹாம்ஸ்டர்ஸ் எனப்படும் வளர்ப்பு பிராணிகளைக் கூட்டில் வைத்து நோய் தொற்றுகிறதா என ஆராய்வது.

சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உலக சுகாதார நிறுவனம் உலகுக்கு அறிவித்தல்களை விடமுடியும் என அதற்கு ஆலோசகராகவிருக்கும் பேராசிரியர் டேவிட் ஹேமான் கூறியுள்ளார்.

“குளிரூட்டிகள் (airconditioning units), குறிப்பாக சுவர்களில் பொருத்தப்பட்ட வகை, காற்றை வடிகட்டுவதில்லையாதலால், காற்றிலுள்ள சிறிய துணிக்கைகளின் மூலம் கிருமிகளைப் பரவச் செய்ய வாய்ப்புண்டு” என ஹேமான் ஒப்புக்கொள்கிறார்.

சில சீன உணவகங்களில் சமூக இடைவெளிகளைப் பேணியபோதும் பலர் தொற்றுக்குள்ளாகியதற்கு இதுவே காரணமாகவிருக்கலாம் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதை நிரூபிப்பது கடினம் எனக்கூறப்படுகிறது.



அதே வேளை, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் உணவகங்களுக்கும், மது நிலையங்களுக்கும் செல்கிறார்கள். ஆனால் அங்கு நோய்ப்பரவல் அதிகரித்ததற்கான ஆதாரங்கள் இல்லை.