HealthWorld

கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு


கொறோணாவைரஸின் மூலத்தைத் தேடி ஆராய்ச்சிக்காக வூஹானுக்குப் பயணம் செய்யவிருந்த உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.

சீனாவின் இந் நடவடிக்கை தனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அவ்வமைப்பின் தலைவர் ரெட்றோஸ் அடனோம் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார்.

கொறோணாவைரஸ் எங்கிருந்து உருக்கொண்டது என்பதனை அறிவதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவைச் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக இக்குழுவிலுள்ள இருவர் முதலில் சீனாவிற்குச் செல்வதற்காக சீனா, உலக சுகாதார நிறுவனம், இடைத் தரிப்பு நாடுகள் ஆகியவற்றிடையே போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சீனா அவர்களுக்கு அனுமதி கொடுக்கத் தவறியிருக்குகிறது.

“சீனாவின் மூத்த அதிகாரிகளுடன் நான் பேசி, உலக சுகாதார அமைப்பின் குழுவிற்கு இப் பயணம் மிக முக்கியமானது எனபதை மீண்டும் வலியுறுத்தியிருந்தேன். பயண ஒழுங்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தமது உள்ளக ஒழுங்குகளை விரைவாக முடித்துத் தருவதாக சீன அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்தனர்” என ரெட்றோஸ் தெரிவித்துள்ளார்.

விலங்கினங்களிடையே பரவும் நோய்களில் நிபுணத்துவம் பெற்றவரான பீட்டர் பென் எம்பாரெக் அவர்களின் தலைமையின் கீழ் செல்லவிருந்த இக் குழு, கொறோணாவைரஸ் தொற்று ஆரம்பித்த இடமான வூகானிலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில், நோய்த்தொற்றியல் (epidemiologic), வைரஸ் தொற்றியல் (virologic), இரத்தக்கூற்றியல் (serologic) ஆகியன தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கெனப் பயணம் மேற்கொள்ளவிருந்தது.ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயண ஒழுங்குகளின் பிரகாரம் பயணத்தை மேற்கொண்டிருந்த இருவரில் ஒருவர் சீனாவினால் திருப்பி அனுப்பப்பட்டும் மற்றவர் மூன்றாவது நாடொன்றினூடாகத் தன் பயணத்தைத் தொடரும் நிலையிலும் உள்ளார்கள் என அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான மைக் றயன் தெரிவிக்கிறார்.

அதே வேளை, இப் பயணம் தொடர்பாகத் தாம் இன்னமும் உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இப் பெருந்தொற்றின் மூலத்தைக் கண்டறியும் விடயத்தில் சீனா எப்போதுமே திறந்த மனதுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து வந்துள்ளது. இவ் விடயத்தில் உலக சுகாதார அமைப்புடன் எமக்கு நெருக்கமான உறவு இருக்கிறது” என சீனாவின் வெளியுறவு அமைச்சு அதிகாரி ஹுவா சுண்யிங் தெரிவித்துள்ளார்.

கொறோணாவைரஸின் முதற் தொற்று, வூஹான் கடலுணவுச் சந்தையில் வழக்கமாக வரும் 61 வயதுடைய வாடிக்கையாளரில், ஜனவரி 11, 2020 அன்று அவதானிக்கப்பட்டது எனினும், வைரஸ் எங்கு, எப்போது, எப்படி மனிதருக்குத் தாவியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வூஹான் சந்தை, சீன அதிகாரிகளால் பூட்டப்பட்டு அங்குள்ள பண்டங்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அவ்விடத்துக்குச் சென்று ஆராய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். இச் சந்தை, தொற்றின் மூலவிடமாகவும், மனிதரிடையேயான தொற்றுப் பெருக்கத்தின் நிகழ்விடமாகவும் இருந்ததா அல்லது இவ்வெல்லா நிகழ்வுகளின் மொத்த நிகழ்விடமாக இருந்ததா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. வைரஸின் மூலம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அமெரிக்கா கோருகிறது. அதே வேளை, இது தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டுமென அவுஸ்திரேலியா கேட்டு வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான உறவு சமீபத்தில் கசந்துபோய் வருகிறது.இப் பெருந்தொற்றிலிருந்து சீனா ஓரளவு மீண்டுவிட்டதாயினும், நோய்க் கட்டுப்பாட்டு விடயங்களில் அது மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. புதனன்று, ஹெபேய் மாகாணத்தை ஊடறுத்துச் செல்லும் பெருந்தெருக்களையும், மாகாணத் தலைநகரிலுள்ள பிரதான பஸ் நிலையத்தையும் மத்திய அரசு மூடியிருக்கிறது.

ஜனவரி 5 இல் சீனாவில் பதியப்பட்ட 23 தொற்றுக்களில் 20 பேர் ஹெபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று நாட்களில் இம் மாகாணத்தின் தொற்று எண்ணிக்கை 19. அதே வேளை, அறிகுறியற்ற 64 நோயாளிகளில் 43 பேர் இம் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகளாவிய ரீதியில் 86.2 மில்லியன் மக்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகியும், அவர்களில் 1,895,267 பேர் மரணமாகியுமுள்ளனர்.