Health

கொறோணாவைரஸின் புதிய அவதாரம் ஆபத்தானதா? | ஒரு பார்வை


அகத்தியன்

பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகப் பரவிவரும் கொறோணாவைரஸின் புதிய ‘அவதாரம்’ உலக நாடுகள் பலதை அச்சம் கொள்ளவைத்துள்ளது. இரண்டாம் கொறோணாவைரஸ் தொற்று இப்போது அதிகமாகவுள்ள நாடுகள் இங்கிலாந்தும் தென்னாபிரிக்காவுமாகும். புதிதாக அறியப்படும் தொற்றுக்களில், இங்கிலாந்தில் 30% மானவர்களும், தென்னாபிரிக்காவில் 89-90% மானவர்களும் இருக்கிறார்கள். பிரித்தானியாவிலிருந்தோ, அல்லது அதனூடாகவோ மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களை இதுவரை 40 நாடுகள் தடைசெய்துள்ளன.

விளக்கம்

2019 டிசம்பர் மாத்தில் புதிதாக அறியப்பட்ட இக் கொறோணாவைரஸின் பிறப்பு பற்றிய மர்மம் போலவே இந்த அவதாரமும் ஒரு மர்மம் தான். ஆனால் உலகிலுள்ள சகல உயிரினங்களையும் போல வைரஸும் சதா மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இம் மாற்றங்கள் இரண்டு வழிகளில் ஏற்படுகின்றன. ஒன்று, தற்செயலான மாற்றம். மற்றது தேவை கருதிய மாற்றம்.

தற்செயலான மாற்றம்

ஒரு உயிர் கருவிலிருந்து உருவாகும்போது ஒரு கலப் பிரிவென்றொரு நிகழ்வு நடைபெறுகிறது. ஒரு கலம் இரண்டாகி, நான்காகிப் பல இலட்சங்கள், கோடிகளாகப் பெருகியதாலேயே ‘நாம்’ உருவாகியிருக்கிறோம். இப்படியான கலப் பிரிவுகளின்போது ஏற்கெனவே ‘எழுதி வைக்கப்பட்ட’ மரபணுக்களின் பிரதிகள் (DNA) ஒவ்வொரு கலத்திலும் வைக்கப்படுகின்றன. இப்படிக் கலப்பிரிவு ஏற்பட்டு பிரதிகள் உருவாக்கப்படும்போது தற்செயலான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பரம்பரை அலகுகள் எனப்படும் ஒருவரது (தாய் + தந்தை) பரம்பரைக் குணாதிசயங்களை அவரின் சந்ததிக்குக் கொடுக்கும் இந்த நிகழ்வின்போது ஏற்படும் தவறுகள் சில வேளைகளில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. இது தற்செயலான மாற்றம்.

தேவை கருதிய மாற்றம்

ஒரு இனம் தன் வாழும் சூழலுக்குத் தன்னை இசைவாக்கப் பழகிக்கொள்வது தேவை கருதிய மாற்றம் எனப்படுகிறது. இம் மாற்றங்கள் நிரந்தரமாக ஒரு இனத்தின் சந்ததிக்குக் கொடுக்கப்பட வேண்டுமானால் அது பரம்பரை அலகுகளில் ‘எழுதப்பட வேண்டும்’. உலகில் இன்று வாழும் அத்தனை இனங்களும் நீரில் வாழ்ந்த ஒரு கல உயிரினத்திலிருந்து ஆரம்பமாகி இப்படியான தேவை கருதிய மாற்றங்களைச் செய்த காரணத்தால் தான் நாம் இன்று உலகை ஆளும் உயிரினமாக இருக்கிறோம்.

‘இரண்டாம்’ கொறோணாவைரஸ்

தற்போது பிரித்தானியாவில் வந்திருப்பதாகக் கூறப்படும் இரண்டாம் கொறோணாவைரஸ் தற்செயலாகப் பிறந்ததா அல்லது கெட்டித்தனமாக இசைவாக்கமடைந்திருக்கிறதா என்பது பற்றிய விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. ஆனாலும் உலக சுகாதார நிறுவனம் முதல் பல அரசாங்கங்கள் வரை ‘இவ் வைரஸினால் ஆபத்துப் பெரிதாக ஒன்றுமில்லை எனக் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த இரண்டாம் கொறோணாவைரஸ் முதலாவதைவிட மிக வேகமாகப் பரவுகிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள்.முதலாம் கொறோணாவைரஸ் தொற்று வந்தபோது உலக சுகாதார நிறுவனம் முதல் மருத்துவ நிபுணர்கள்வரை ஒட்டுமொத்தமாக ஏமாந்து விட்டார்கள். இதுவும் ஒரு ‘சாதாரண வைரஸ்’ என்ற நினைப்பில் அவர்கள் அதிக தடுப்பு / பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. அதற்குக் காரணம் அதன் பரவும் வழி, நோயாளிகளில் அது வெளிக்காட்டும் அறிகுறிகள், உடலுக்குள் புகுவதற்கும், பரவுவதற்கும் அது எப்படியான ஏமாற்று வித்தைகளைப் பாவிக்கிறது எனபன பற்றி அறிய அவர்கள் தமக்கு இதுவரை தெரிந்திருந்த அளவுகோல்களையே பாவித்திருந்தனர். ஆனால் கொறோணாவைரஸ் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உலகமெலாம் அசுரவேகத்தில் பரவிவிட்டது. முகத்தில் கரிபூசப்பட்ட விஞ்ஞானிகள் அதற்கு ‘நொவெல் வைரஸ்’ (புதிய வைரஸ்) எனப் பெயரிட்டுவிட்டுத் தப்பிக்கொண்டனர்.

எனவே இந்த இரண்டாம் வைரஸின் வருகை விடயத்தில் அவர்கள் அதீத கவனத்தை எடுக்கிறார்கள். முதல் வைரஸின் வருகையின்போது அவர்கள் செய்யத் தவறியது பயணத்தடை. அது இப்போது முதலாவதாக நடைமுறைக்கு வருகிறது.

வித்தியாசம்

இதுவரை அறியப்பட்ட தகவல்களிலிருந்து இரண்டாம் கொறோணாவைரஸ் முதலாவதைவிட மிக வேகமாகப் பரவுகின்றது எனவும் அறிகுறிகளைப் பொறுத்தவரையில் புதியதாக எதுவும் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கொறோணா வைரஸ் மனிதக் கலங்களுக்குள் புகுந்து தன்னை இனப்பெருக்கம் செய்துகொள்கிறது எனவும் இதற்காக அது பாவிக்கும் ஒரு கருவி கூர்ப் புரதம் (spike protein) எனவும் முன்னைய எமது கட்டுரைகள் மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது வந்திருக்கும் வைரஸின் இரண்டாவது அவதாரம் இந்த புரதத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது எனச் சில விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். மனிதக் கலங்களைத் துளையிடும் இக் கருவி மேலும் கெட்டித்தனமாகச் செயற்படக்கூடியதாக இசைவாக்கம் அடைந்திருக்கிறதா? (தேவை கருதிய மாற்றம்) அல்லது அது தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வா? என்பதுவே இப்போது நம்முன்னாலுள்ள கேள்வி.தடுப்பு மருந்துகள்

தற்போது உலகம் முழுவதும் ஆவலோடும் பரபரப்பாகவும் ஈடுபட்டு வரும் தடுப்பூசி இந்த இரண்டாம் வைரஸை எப்படிக் கையாளப் போகிறது என்பதற்கு ‘இப்படியான மாற்றங்களை எதிர்பார்த்தே இம் மருந்துகள் தயாரிக்கப்பட்டன” எனச் சில ‘நிபுணர்கள்’ அபயக் கரங்களை உயர்த்துகிறார்கள். அதில் உண்மையும் இருக்கலாம். ஆனாலும் அவசரப்படுகிறார்களோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஃபைசர் / பயோஎன்ரெக் , மொடேர்ணா தடுப்பு மருந்துகள் இரண்டும் mRNA தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது என

முந்திய கட்டுரைகள் மீது அறிந்தோம். இந்த mRNA தொழில்நுட்பத்தில் ஆய்வுகூடத்தில் மீள்வடிவு செய்யப்பட்ட, வைரஸின் கூர்ப்புரதத்தின் மரபணுவே பாவிக்கப்படுகிறது. இப்போதுள்ள கேள்வி, (இதை ‘அறிந்து’) வைரஸ் தன் கூர்ப்புரதத்தின் மரபணுவில் மாற்றம் செய்துகொண்டுவிட்டதா? அப்படியானால் இத் தடுப்பு மருந்துகள் எப்படி வேலை செய்யும்?

இரண்டாவது விடயம் வைரசின் கூர்ப்புரத வடிவத்தை (இது புரத மூலக்கூறுகளால் கட்டப்படுகிறது) உடலுக்கு அறிமுகம் செய்வதே தடுப்பூசியின் நோக்கம். அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் உடலின் பாதுகாப்புப் பொறிமுறை, உண்மையான வைரஸ்கள் இக் கூர்ப்புரதங்களுடன் உடலுள் புகும்போது அவற்றை உடனேயே அடையாளம் கண்டு அழித்து விடுகின்றன என அறிந்திருக்கிறோம். இந்த இரண்டாவது வைரஸ் தன் கூர்ப்புரதத்தின் வடிவத்தை மாற்றிக்கொண்டிருந்தால் உடலின் பாதுகாப்பு பொறிமுறைக்கு அதை அடையாளம் காண இயலுமா?

அதே வேளை புதிய mRNA தொழில்நுட்பத்திலுள்ள நன்மை என்னவென்றால் உஅடலுக்குள் அனுப்பப்படும் தடுப்பு மருந்தைச் சில மணித்தியாலங்களில் விரும்பியவாறு ஆய்வுகூடத்தில் மாற்றி வடிவமைத்துக் கொள்ளலாம். அதஹ்ற்குத் தேவை ‘புதிய’ வைரஸின் கூர்ப்புரதத்தின் மரபணு வரிசை. அதை அறிந்தபடியால்தான் இது முந்தியதிலிருந்து வேறுபடுகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே இப் புதிய வைரஸல்ல அதைவிட மேலும் பல உருவாகினாலும் அதற்கான தடுப்பூசிகளை அவர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.தீர்ப்பு

இதற்கான பதில் விரைவில் விஞ்ஞானிகளிடமிருந்து கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். தடுப்பு மருந்து எடுத்த ஒருவருக்கு இப் புதிய வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிந்தால் மட்டுமே அடுத்த நடவடிக்கையில் விஞ்ஞானிகள் இறங்கலாம். அதுவரை இங்கிலாந்திலிருந்து மக்கள் வேறுநாடுகளுக்குப் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்துவதே.