Columnsகனடா மூர்த்தி

“கொஞ்சாதே..! கெஞ்சாதே.. !!” என்று சென்றது 2019

கனடா மூர்த்தி
கனடா மூர்த்தி

“பல அரசியல் திருப்பங்களை 2019இல் கண்டோம். CTCஐ ஒரு பக்கம் வைத்துவிட்டு,  நாம் கண்ட அரசியல் திருப்பங்களை இம்முறை  உமது ‘கெஞ்சாதே..’ பத்தியில் விரிவாக அலசலாம்தானே” என்றார் மறுமொழி ஆசிரியர்.  

CTCயை விட்டுட்டோ?”  என்று இழுத்த நான், “பலரும் பலவித மதிப்பீடுகளோடு இரண்டாயிரத்துப் பத்தொன்பதை வழியனுப்பி ஏற்கனவே எழுதிவிட்டார்களே. நடந்தவை – நடப்பவை – நடக்கப் போகிறவை எல்லாமே நல்லதே என்ற கீதை வாசகத்துடன் 2019ஐ காண்கிறேன்

சிவாஜிலிங்கம்

அதற்கொப்ப 2019ம் ஆண்டானது சிறீலங்கா ஜனாதிபதியாக ஆக்கித் தந்திருக்கும் கோத்தபாயா ராஜபக்சே குறித்தும்; 2019 வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கும் கனடாவின் எதிர்கட்சித் தலைவர் அன்ரூ ஷ்ர்  குறித்தும் மட்டுமே கொஞ்சம் அலச விழைகிறேன்  பாஸ்…” என்றேன் பதிலுக்கு. “சரி.. என்னவோ செய்யும்…” என்றார் அவர். ஆதலால் முதலில் இலங்கை:

அண்ட்ரூ ஷியர்

புலி வருகுது புலி வருகுது என்று சொல்லி கடைசியில் புலி வந்தே விட்டது. ஆம். புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஸபக்ச ஆட்சிக்கு வந்துவிட்டார். வந்தது மட்டுமல்ல “தமிழர்அரசியல் அபிலாஷைகளை அவமதிக்கும் செய்கைகளையும் ஆரம்பித்துவிட்டாரோ” என சொல்லக்கூடிய வகையில் கருமமும் ஆற்ற ஆரம்பிக்கிறார். தனது ஆட்சியில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து பேசத் தேவையில்லை என்று சொன்னாரே அதைத்தான் சொல்லுகிறேன்.

தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்த இந்த எதிர்மறை நிலைப்பாட்டை“ஈழநில பகுதிகளில் வாழ்பவர்கள் தனக்கு ஏகோபித்து வாக்களிக்கவில்லை” என்பதற்காக கோத்தா எடுத்திருப்பார் என நான் நம்பவில்லை. உண்மையில்  “ஏன் தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை” என்பதை அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்றுதான் கருதவேண்டியிருக்கிறது.

கோத்தபாயாவை ஒரு இனவாதி என்று சொல்வதை விட அவர் ஒரு சிங்கள பிரபாகரன் என்று சொல்லலாம். தனது இனத்தின் மகிமைக்காக அவர் கருமமாற்றுகிறார். (1) ‘முழு இலங்கைக்கும்’ தானே ஜனாதிபதி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். (2) சிங்கள பௌத்தர்களால் ஏற்க முடியாத ஒரு தீர்வை தமிழர்களுக்குத் தரமுடியாது என்றும் வெளிப்படையாக சொல்கிறார். இவை இரண்டையும் பொருத்திப் பாருங்கள்: ‘சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்ற நிலைப்பாட்டையே முழு இலங்கைக்கும் நான் அமுல்படுத்துவேன்’ எனச் சொல்லாமல் சொல்வது போல அவரது நிலைப்பாடு இருக்கிறதல்லவா…! சிங்கள பௌத்த மேலாண்மையை உறுதிப்படுத்த அவர் தன் வேலைகளை ஆரம்பிக்கிறார். அதுதான் கோத்தா!

கோதாபய ராஜபக்ச

நாட்டில் வாழும் தமிழர்களுக்கு கோத்தாவின் இந்தப் பேச்சு + செயல் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் புலம்பெயர் தமிழருக்கு அவை ஏமாற்றத்தைத் தரவில்லை. மாறாக கையறு நிலையில் ஏற்படும் கோபத்தையே ஏற்படுத்துகிறது. “பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுகிறோம்” எனச் சொல்லி நடந்த 2009 போரில் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கான முறையான பொறுப்புக்கூறல்கள் எதுவும் நடக்காத நிலையில் (அல்லது ஆரம்பிக்காத நிலையில்), அவரது கையில் தமிழரின் இரத்தக்கறை இருப்பதாக உலக அரங்கில் சொல்லப்படும் நிலையில் ஜனாதிபதியாக வந்திருக்கும் அவர் இப்படியான கருத்தினை தெரிவித்திருப்பதை கோபப்படாமல் வேறு எப்படித்தான் அவர்கள் எடுத்துக் கொள்வது?

சில புலம்பெயர் கோத்தா ஆதரவாளர்கள், “கோத்தா ஒரு யதார்த்தவாதி அவர் அப்படித்தான் சொல்வார்” என இன்னும் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். கோத்தா யதார்த்தவாதியா?? இல்லை. யதார்த்தவாதியாக இருந்திருந்தால் தனது நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை அவர் புரிந்தவராக இருந்திருப்பாரல்லவா. அப்படி இல்லையே…

எது யதார்த்தம்? முதலில் அரசியல் தீர்வு! அதாவது புரையோடிப்போயிருக்கும் இனப்பூசலுக்குத் தீர்வு!! அதன்பிறகுதான் மற்ற வாணவேடிக்கைகள் எல்லாம்… அதை கோத்தா புரிந்து கொண்டமாதிரி தெரியவில்லை. புலம்பெயர் தமிழர்களில் பலரும் ஆரம்பமுதலே கோத்தாவை சந்தேகமாகத்தான் பார்த்தார்கள். ஆனாலும்“மனுசன் நல்லவிதமாக எதையாவது செய்தாலும் செய்வார்” என டக்ளஸ், வரதராஜபெருமாள் போன்றோர் நம்புவதையொத்த நப்பாசையும் புலம்பெயர் சமூகத்திடம் இருந்தது. (இசைப்பிரியன் கேஸ் வேறு) அதனால் “கோத்தா இப்படித்தான் சொல்வார் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதானே” என புலம்பெயர் தமிழர்கள் இப்போது தமக்குள் ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். அதனால் புலம்பெயர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் ‘அதிகாரப்பகிர்வு தேவையில்லை’ என்ற கோத்தாவின் அதிரடிக் கருத்து பெரு வெடியாக இல்லாமல் புஸ்வாணமாகி போனது. 

“ஈழநிலப்பரப்பில் வாழும் தமிழர்கள் கோத்தாவிற்கு வாக்களித்திருந்தால் அதிகாரப்பகிர்வுக்கு கோத்தா இறங்கி வந்திருப்பார், கோத்தாவுடனான அதிகாரப்பகிர்வு உறவுகள் சுமுகமாக இருந்திருக்கும்” என்றும் புலம்பெயர் ஈழத் தமிழர்களில் ஒருபகுதி கருதுகிறது. அது சரியான கருத்தா? நிச்சயமாக இல்லை. தமிழர் பகுதி ஏகோபித்து ஆதரித்து வாக்களித்திருந்திருந்தாலும் இதே நிலைமைதான்  இருந்திருக்கும். காரணம் கோத்தாவின் ‘ஆதரவாளர் கியூவரிசையில்’ எங்கோ ஓரிடத்தில் ஏகோபித்து வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் நின்றிருப்பார்கள். “அப்பே ரட்டையில் எனக்கு வாக்களித்த எல்லோரும் எனக்குச் சமம். அப்படியிருக்க தமிழருக்காக என சில தனிச் சலுகைகளை ஏன் நான் கொடுக்க வேண்டும் கௌம்பு.. கௌம்பு…” என்று வடிவேலுபோல கோத்தபாயாவும் சொல்லிக்கொண்டே போயிருப்பார். நல்லவேளை. தமிழர்கள் கோத்தபாயாவை ஆதரித்து வாக்களிக்கவில்லை.

ஈழநிலப்பரப்பில் வாழும் தமிழர்களை கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தொலைநோக்குப் பார்வையையும் புலம்பெயர் தமிழ் அரசியல் அவதானிகள் தற்போது மெச்சிக் கொள்கிறார்கள். அரசியல் அவதானிகள் பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்தது ஒரு தமிழ்நிலைப்பட்ட நகர்வு. Yes..  சரியான நகர்வு.

அதேபோலவே தமிழ்நிலைப்பட்ட இன்னொரு வகையான நகர்வை – சரியான நகர்வை – முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்ந்து எடுத்து வருகிறார். இதுபோலத்தான்  ‘ஜனாதிபதி தேர்தலையே பகிஷ்கரிக்க வேண்டும்’ என எழுப்பப்பட்ட கோசங்களும், அதை மீறி ஜனாதிபதி தேர்தலில் தைரியமாகப் போட்டியிட்டு சிவாஜிலிங்கம் (அனந்தி சசிதரன்) ஆகியோர் செய்த சேவைகளும்… இவை எல்லாமே தமிழ் நிலைப்பட்ட சரியான நகர்வுகளே.

இந்த இடத்தில் “தனிநாடு கோரி ஒருகாலத்தில் அரசியல் செய்த;   ஆயுதப் போராளிகளாக ஒருகாலத்தில் இருந்த ஈபிடிபி டக்ளஸ் , ஈபிஆர்எல்எப் வரதராஜப் பெருமாள், எல்ரிரீஈ கருணாஅம்மான் ஆகியோர் கோத்தாவை ஆதரித்தது சரியான நகர்வா?” என்ற கேள்வி பலருக்கும் வரலாம். கேள்வி சிக்கலானதுதான். கோத்தாவை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் உண்டு.

புலிகளின் பல நேரடித் தாக்குதல்களிலிருந்து தப்பியவர் டக்ளஸ். வரதருக்கும் புலிகளின் மரணதண்டனை காத்திருந்தது. கருணாவும் புலிகள் மண்டையில் போடவிருந்து தப்பிப் பிழைத்தவர்தான். சரியோ தவறோ “துரோகி”, “துரோகி”, “துரோகி” என இவர்கள் பிரபாகரனால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். ஆக, இவர்கள் கோத்தாவை ‘ஆதரிப்பது’ என்பது தமக்கான உயிராபத்தை தரவிருந்த புலிகளை அழித்து தம்மைக் காப்பாற்றிய கோத்தாவை ஏற்றுக் கொள்வது ஆகும்.! அது இயல்பேயாம். அதைத் தவறு என்று எப்படி சொல்வது? 

கோத்தாவிற்கான ஆதரவின்மூலம் “தமிழருக்கு நன்மை செய்யலாம்” என அவர்கள் நினைக்கிறார்கள். (யாருக்குத் தெரியும்.. “தமிழில் தேசிய கீதம் பாட விடுங்கோ..” என டக்ளஸ் கோத்தாவிடம் நாளை கேட்கக்கூடும். கோத்தாவும் சரி என்று சொல்லிவிடவும் கூடும். “செய்வோம்.. செய்விப்போம்.” என்று டக்ளஸ் அதை ஒரு வெற்றியாக பிரகடனப்படுத்தக்கூடும்.) இதெல்லாம் அரசியல்.. அதனால்தான் மீண்டும் கேட்கிறேன் “டக்ளஸ், வரதர்,கருணா செய்வதில் என்ன தவறு இருக்கிறது?”

சிந்தித்துப் பாருங்கள்… தமிழர்களான நாங்களே எதிர்பார்க்காத நேரத்தில் சிங்கக் கொடியை தன் கையில் எடுத்து, “சிங்கள அரசியல்வாதிகளே.. மாற்றத்திற்கு நாம் தயார் நீங்கள் தயாரா” எனக் கேட்ட சம்பந்தன், தமிழருக்குச் சாதகமான அரசியல் அமைப்பை உருவாக்க சிங்கள அரசியல்வாதிகளிடம் நல்லுறவைப் பேணிக்கொண்டே “நாங்கள் தந்த ஆதரவினால் ஜனாதிபதியான நீ..” என மைத்திரியை ஏகவசனத்தில் பொதுமேடையில் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்த சுமந்திரன், “போங்கடா.. சிங்களவரான நீங்க எல்லாரும் இந்தத் தீவுக்கு வரமுன்னமே தமிழரான நாங்க வந்திட்டம்” என சிங்கள வெறியர்களுக்கு விடாமல் கடுப்பேத்திவரும் விக்கினேஸ்வரன், “நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்..” என சிவாஜி பாடல் ஒன்றைப் பாடாத குறையாக பேசிவரும் சிவாஜிலிங்கம், “கோத்தபாய மாத்தயாவிற்கு ஜயவேவ” என சிங்களத்தில் கோசமிடாமல் ஆதரவு காட்டி வரும் டக்ளஸ், வரதர், கருணா என நம் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தமிழ்நிலைப்பட்டு சரியாகத்தான் இயங்கியிருக்கிறார்கள் – இயங்கி வருகிறார்கள்! தமிழேன்டா… 

அதாவது அதிகாரப்பகிர்வினைப் பெற்றுக் கொள்ள தேர்தல் அரசியலில் தமிழ்நிலைப்பட்டு எத்தனை வழிவகைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் குறைந்த பட்சமாக ஒரு தமிழ் அரசியல்வாதியாவது தன்னை ஒரு பிரதிநிதிபோல தமிழர் பகுதியிலிருந்து வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள்  – காட்டி வருகிறார்கள்.

“ஆக மொத்தம் கொஞ்சாதே.. அதேசமயம் கெஞ்சாதே.. இரண்டும் நல்லதல்ல. தமிழர்களாக நாம் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம். பிரச்சனை சிங்களப்பகுதியிலேயே இன்னும் இருக்கிறது” என்று சொல்லிச் செல்கிறதோ 2019? !