Sri Lanka

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி- அகழ்வுகள் மீண்டும் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாயில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்யும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமானது. தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இவ்வகழ்வுக்கான அளவீடுகளை மேற்கொண்டார்.

இறுதிப் போரின்போது இலங்கைப் படைகளினால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மனித உடல்களின் எச்சங்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிர்மாணப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வகழ்வுக்கான கோரிக்கை தமிழர் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அரசாங்கமும், இராணுவமும் இவ்வகழ்வுக்கான அனுமதியை வழங்கத் தடையாக இருந்தன. இதைத் தொடர்ந்து தமிழ் செயற்பாட்டாளர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இதற்கான ஆணை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். முல்லைத்தீவு நீதிபதி இதற்கான ஆணையை வழங்கியுள்ளமையைத் தொடர்ந்து திரு ராஜ் சோமதேவா தலைமையில் அக்ழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி இதுகுறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பலரும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ஐ.நா. மற்றும் உலக மனித உரிமை அமைப்புக்களும் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து துரிதமாகப் பணியாற்றும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன். ஆனால் அரசாங்கமும் இராணுவமும் இப்படியான புதைகுழிகளை மறைத்து இல்லாமலாக்கிவிட முயல்கின்றன.

இலங்கையில், போதிய சட்ட நடைமுறைகள் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களின் இறப்புக்கான சூழ்நிலைகளைக் கண்டறியவும், குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும், தண்டனை வழங்கவும், சுயாதீனமான பாராபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகின்றது.

அரசியல் தலையீடு

2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டம் மிருசுவிலில் கிணற்றில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட எட்டு நபர்களை (மூன்று குழந்தைகள் உட்பட) கொன்றதற்காக 2015 இல் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், மேன்முறையீட்டில் ரத்நாயக்கவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.இருப்பினும், அவர் 2020 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இருக்கலாம் எனக் கருதி துரிதமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும்,இந்த ஆய்வில் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கேணல் கருணா) எதிராக ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே விசாரணையைத் தாமதப்படுத்தியதாக கருதப்பட்டது. அந்த ஆய்வுகள் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த இடத்தில் எந்த அகழ்வாராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நீதித்துறையில் தலையீடு

அகழ்வாராய்ச்சி செயல்முறையில் செல்வாக்கு செலுத்தும், மூத்த அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலும் நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகளை அல்லது பிற அதிகாரிகளை வெவ்வேறு பதவிகள் வழங்குதல் மூலமோ அல்லது அவர்களை வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்வதன் மூலமாகவோ தொடர்ச்சியாக மனித புதைக்குழி அகழ்வாராச்சிகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.

  • 2023 ஆம் ஆண்டு வரை தொடரும் மன்னார் மனித புதைக்குழி அகழ்வு வழக்கின் போது, ​​ஏழு நீதிபதிகள் முன்னிலையாகினர். சிலர் வழக்கமான சுழற்சியின் ஒரு பகுதியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக பணியிடம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 இல் மன்னார் புதைகுழியை கையாண்ட நீதித்துறை மருத்துவ அதிகாரி (JMO) 2019 இல் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.மேலும், இவ்வாறு அதிகாரிகள் அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்படுவதால் மனித புதைகுழியில் இருந்து எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றன. 2013 அகழ்வாராய்ச்சியில் இருந்து நீதித்துறை மருத்துவ அதிகாரி அனுராதபுரத்திற்கும் பின்னர் மாத்தளைக்கும் மாற்றப்பட்டதால் சிதைந்த உடல்களை பகுப்பாய்வு செய்வதில் தடை ஏற்பட்டது
  • மாத்தளை வழக்கில், காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் கண்டறிய மூன்று மொழிகளிலும் செய்தித்தாள்களில் அறிவிப்புகளை வெளியிடுமாறு CID க்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிபதி சதுரிகா சில்வா வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். புதிய நீதிபதி மேலதிக வாக்குமூலத்தை ஏற்க மறுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தார்
  • 1998 இல் செம்மணி மனிதப்புதைகுழிகளைக் கண்டுபிடித்த பின்னர், ஐந்து பேர் கொண்ட குழு நான்கு இராணுவ அதிகாரிகளை 15 காணாமல் போனவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என்று  கண்டறிந்தது. இருந்த போதிலும், முழுமையான இவர்கள் மீதான குற்ற அறிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. சட்டமா அதிபரது ஆலோசனையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் ஜூலை 2000 இல் பிணையில் விடுவிக்கப்பட்டனர், மேலும் நான்கு அதிகாரிகளும் பின்னர் பதவி உயர்வு பெற்றனர். அப்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் உதவி சட்டத்தரணியாக இருந்த பீட்டர் மொஹான் மைத்திரி பீரிஸினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட சட்ட ஆதரவு வழங்கப்பட்டது. பின்னர் பல தடவைகள் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், மொஹான் பீரிஸ் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டவுடன் செம்மணி மனித புதைகுழி வழக்குத் தூக்கி எறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள் சந்தேகநபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • செம்மணி விசாரணைகளில் காணப்படுவது போல், சட்டமா அதிபர் அலுவலக பிரதிநிதிகள் ஆரம்ப கட்டங்களில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றனர்.வழக்கை காலதாமதம் செய்வதற்காக அவர்கள் தொடர்ச்சியான மேற்கொண்ட கோரிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாஜிஸ்திரேட் மற்றும் வழக்கறிஞர்களை விரக்தியடையச் செய்தது.

அதிக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்று. கணக்கெடுப்பின் படி 60,000 க்கும் 100,000 இடைப்பட்டவர்கள் 1980ம் ஆண்டிலிருந்து காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, இலங்கை அரசாங்கமானது காணமல் போன உறவினர்களுடைய கோரிக்கைக்கு ஏற்ப, முழுமையான விசாரணை செய்து உண்மையை கண்டறிவது மட்டுமல்லாது, இவ்வாறான அடிப்படை மனித உரிமை மீறல்கள் புரிந்தவர்களை அதற்கு பொறுப்பேற்க வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் செய்ய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. கடந்த கால நிகழ்வுகளின்படி, சர்வதேச அழுத்தம் இல்லாமல் இலங்கை அரசு ஒருபோதும் இதற்கு பொறுப்பு கூறப்போவதில்லை. தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது, வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் இன்று வரை 2375 நாட்களாக தொடர்ந்த வண்ணமுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளில், தொடர்ச்சியாக தோண்டியெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழிகளினால் பல கவலைக்குரிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளது. இலங்கை அரசு மனித புதைகுழிகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை அறிய பாரபட்சமற்ற விசாரணை முடுக்கி விடுவதில் தனது விருப்பமின்மையை அல்லது இயலாமையைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. மேலும், பல தடைகளை உருவாக்கி உண்மையை உலகுக்கு அறிய விடாமல் மனித புதைகுழிகளை இலங்கை இராணுவம் தீவிரமாக மறைத்து வருகிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.