Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (10): கைலாசாவைக் கோதா வாங்கலாம்?

கிசு கிசு கிருஷ்ணாநந்தா

“என்ன கிருசு, பெற்றோல் கிடைச்சிட்டுது போல. கொஞ்சம் நெஞ்சை நிமித்திறது போலக் கிடக்கு”

“நல்லதொரு தொடர்பு கிடைச்சிருக்கு. நேவிக்காரன் ஒருவன். சைக்கிளைக் குடுத்தா நிரப்பிக்கொண்டு வந்து தருவான். கியூவும் மசி….ரும்”

“என்னடா கிருசு ஊழல் அது இது எண்டு அரசியல்வாதியளைப் பத்தி வகுப்பெடுப்ப. இப்ப நீயே…”

“அண்ணை, யூனிவேசிட்டியில இருக்கேக்க கொம்முனிசம் கதைக்காட்டி விலத்தி வைச்சுப் போடுவாங்கள். கலியாணம் கட்டினதோட “அது மனிசியின்ர ஆசை, அவவின்ர விசயங்களில நான் குறுக்கிடரேல்ல” எண்டு சொல்லித் தப்பிச்சுக் கொள்ளலாம். அரசியல்வாதியா வாறதெண்டா இப்பிடியெல்லாம் ட்றெயினிங் எடுக்க வேணும். கெதியெண்டு எலெக்சன் வரும்போலயிருக்கு. பழைய அரசியல்வாதிகளை எல்லாம் சனம் கலைச்சுப் போட்டு எங்களைப் போல ஆக்களைத் தான் முன்னுக்கு விடப்ப்போகுது பாருங்கோ இருந்து”

“நாடு திருந்த இடமேயில்லை. சரி சொல்லு என்ன நடக்குது கொழும்பில? உவன் ரணில் கெட்ட சாமான் போலத்தான் இருக்கு. ஒரு மாதிரி கோதாவை அனுப்பிப் போட்டான்”.

“”ஜே ஆர். இன்ர மருமகனில்லே. அவன்ர மூளையில காவாசியாவது இருக்காதா? பாருங்க கலிபோர்ணியாவில 711 கடையில வேலை செய்துகொண்டிருந்த கோதாவை இஞ்ச இழுத்துக்கொண்டு வந்து ஜனாதிபதியாக்கி ராஜபக்ச குடும்ப ஆட்சியையே நிர்மூலமாக்கிப் போட்டுது. மஹிந்த, நாமல், சஜித்தின்ர தலைகளில மண்ணை அள்ளிப் போடுறத்துக்கு இந்தாள் திட்டம் தீட்டிச் செய்திருக்கிறது போலவெல்லோ தெரியுது”

“ஏன் அப்பிடிச் சொல்லிற. சஜித் அப்ப அவரின்ர கட்சியாள் தானே?”

“கட்சித் தலைமை சாதி குறைஞ்ச பிரேமதாசவுக்குப் போகக்கூடாது எண்டதில ரணில் உறுதியாகவிருந்தவர். இதனால தான் மங்கள உட்படக் கனபேர் சஜித்தோட போனவங்கள். சஜித் ஜனாதிபதியாக்ப் போட்டிபோடப் போகுதெண்டு தெரிஞ்சவுடனே கோதாவை மனிசன் இறக்க யோசிச்சிட்டுது. அவரின்ர மருமகள் இஷினி இன்னுமொரு கெட்டாரக் கெட்ட சாமான். அதுதான் களவாக ஐ.டி., பாஸ்போர்ட் எல்லாம் செய்து குடுத்து இலங்கை சிற்றிசன்ஷிப்பையும் சரியான ரைமில எடுத்துக் குடுத்தது. “சித்தப்பாவின்ர கொள்கைகளில அப்பாவுக்கு உடன்பாடில்லை எண்டு இப்ப நாமலே ஒத்துக்கொண்டுவிட்டுது.”

“கொஞ்சம் பொறு. கோதா ஜனாதிபதியாக வாறதில ரணிலுக்கு என்ன நன்மை?”

“அண்ணை, இப்பிடிப் பாருங்கோ. கோதா ஒருக்காலும் அரசியலுக்கு வாறதுக்கு நினைச்சிருக்கேல்ல. தன்ர பிள்ளையளையும் இதுக்க கொண்டுவர அந்தாள் முயற்சிக்கேல்ல. அப்பிடியிருக்கேக்க அந்தாள் இப்பிடியெல்லாம் திட்டமிட்டிருக்குமோ? அந்தாள் ஒரு மொக்கன் எண்டிறதை நான் ஒத்துக்கொள்ளிறன். ஆனா ஒரு அரசியல்வாதியல்ல. அதுதான் ஒரு ஆள் ருவிட்டரில பதிஞ்சிருந்திது: கோதா ஒரு Terminator, மஹிந்த ஒரு Godfather, பசில் ஒரு Mastermind, நாமல் ஒரு Clown Prince எண்டு. மகிந்தவின்ர பிளான் எல்லாம் நாமலுக்கு ஆட்சி போகவேண்டுமெண்டிறது தான். அப்பிடியே மற்ற மக்களையும் முக்கிய பொறுப்புகளில இருத்திவிடலாமெண்டு அந்தாள் வேலை செய்தது. பசில் ஒரு காசுப் பிசாசு. நீ அடிக்கிறதை அடி எண்டு ஒரு ஃபிறீ ஹாண்ட் குடுத்து விட்டிட்டுது. பசில் ஒருநாளும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வர விருப்பம் காட்டேல்ல. மகிந்தவின்ர இந்தக் கனவைக் குழப்பினது ரணில் தான். பாருங்க மக்களால தெரியப்படாத ஒரு மனிசன் எப்பிடி பிரதமராகவும் இப்ப பதில் ஜனாதிபதியாகவும் வந்திட்டுது. ஜூலை 20 பாராளுமன்றத் தேர்தலில மொட்டுக் கட்சிக்காரர் தங்கட வேட்பாளர் டலஸ் அளகப்பெருமாவை ஓரங்கட்டிவிட்டு ரணிலுக்கு வாக்களிக்கப் போறாங்களெண்டால் இந்த ஒட்டுண்ணி எப்பிடியான கெட்டித்தனம் கொண்டது எண்டு பாருங்கோவன்”

“அப்ப 2024 வரைக்கும் ரணில் தான் ஜனாதிபதி எண்டு சொல்லுறியோ?”

“வேற வழியே இல்ல அண்ணை. பாருங்க அவரோட ஆரு போட்டி போடுறாங்கள்? ஒண்டு சஜித் மற்றது டல்லஸ். சஜித் தகப்பன மாதிரி இருந்தா பலர் பயத்திலயெண்டாலும் வோட்டுப் போடுவாங்கள். சஜித்திட்ட அந்த ஆளுமை இல்லை. டலஸுக்கு சுதந்திரக் கடசி வாக்குகள் தான் கிடைக்கும். அதுகூட ரணிலின்ர செற்றப் ஆக இருக்குமெண்டுதான் நான் நினைக்கிறன். ஏற்கெனவே மொட்டுக் கட்சியின்ர வாக்குகளே ரணில் வெல்லிறதுக்குப் போதும். மிச்ச சில்லறையள ஒண்டு சேராமப் பார்த்திட்டாப் போதும். சுதந்திரக் கட்சியிட்ட பதினைஞ்சோ பதினாறோ இருக்கு. அது சஜித்திட்டப் போகாமப் பாத்துக்கொண்டாச் சரி. பாருங்க ரணில் ஜனாதிபதியா வந்த உடனே அளகப் பெருமாவுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் ஒரு கல்லில இரண்டு மாங்காய். தானும் ஜனாதிபதியாகியாச்சு, சஜித்தையும் பழிவாங்கியாச்சு.”

“ரணில் ஒரு கெட்ட சாமான் தான். இப்ப விளங்குது. சரி அப்ப ரணில் ஜனாதிபதியாக வந்தவுடனே இந்த ‘பிரியாணிப் பெடி பெட்டையளுக்கு’ என்ன நடக்கப் போகுது?”

“விளங்கேல்லை”

“அட உனக்குத் தெரியாதே?. நம்ம டக்ளஸ் இந்திய ஊடகத்துக்கு குடுத்த பேட்டியில இந்த அரகாலயாப் பெடியள ‘பிரியாணி சாப்பிடப் போறவங்கள்’ எண்டெல்லோ சொல்லியிருக்குது”

“அப்பிடியோ. எனக்குத் தெரியாது. அந்தாளின்ர வீடு இப்பவும் அப்பிடியே இருக்குதோ. இக்கணம் கொழுத்தித் துலைக்கப் போறாங்கள். கோதா இல்லயெண்டு தெரிஞ்சப்பிறகும் கொஞ்சம் அமத்தி வாசிக்கவேணுமில்லே. அது சரி, நீங்க கேட்டபடி, பாருங்கோ ஜூலை 20 எலக்சன் ‘அமைதியாக நடக்க வேணும் எண்டிறதுக்காக பாதுகாப்பு படையளைத் தயாராக வைச்சிருக்கிறன் எண்டு ரணில் சொல்லிப் போட்டுது. ஏற்கெனவே முப்படையளையும் அந்தாள் பஸ்களில கொழும்புக்கு கொண்டு வந்திட்டுது. அதை விட “இந்தப் பெடியளை ‘பாசிஸ்ட்டுகள்’ எண்டு அடையாளப்படுத்த வெளிக்கிட்டிட்டுது. அரகாலயாப் பெடி பெட்டிகளிடையே ஏற்கெனவே பிளவுகளை உண்டாக்கியிருக்குது. பாராளுமன்றத்துக்குள்ள எங்கட ஆட்கள் போகவில்லை எண்டு இந்தப் பெடியங்கள் சொன்னபோதும் அங்க கொஞ்சப் பேர் நிண்டு சண்டை பிடிச்சு ஒரு ஆமிக்காரனிட்ட இருந்து T56 ரைபிளையும் குண்டுகளையும் பறிச்சிட்டாங்கள். ஏழெட்டு ஆமிக்காரர் காயப்பட்டு ஆஸ்பத்தியில இருக்கிறத கொமாண்டர்கள் போய்ப் பாக்கிறதையும் ஊடகங்கள் பிரபலப்படுத்துகின்றன. இதெல்லாம் ரணிலின்ர திட்டம். ஜூலை 20 ஜனாதிபதியாக வந்தவுடன் பாருங்க இந்த அரகாலயாப் பெடியளைச் சனத்திடமிருந்து அப்புறப்படுத்த அந்தாள் நடவடிக்கை எடுக்கும். இந்தப் பெடியளும் இடதுசாரிக் கோஷங்களைப் போட்டால் அது அந்தாளுக்கு உதவியாக இருக்கும். யூக்கிரெயினில புட்டின் மற்றப் பாட்டியை நாஜிகள் எண்டு சொன்னது போலத்தான் இந்தாள் ‘பாசிஸ்ட்’ எண்ட சொல்லை எடுத்திருக்குது.. எனக்கு என்னவோ கொஞ்சம் பயமாகத்தானிருக்கு. ரணில் கோதாவில்லை. கெட்ட சாமான். அரகாலயா 2.0 வன்முறையை நோக்கித் தள்ளப்படும். அதில படையளின்ர கை ஓங்குமானா ஜே.வி.பி. தோழர்களுக்கு இது மூண்டாவது வருகையும் தோல்வியுமாக ஆகும். முன்னணி சோசலிஸ்ட் கட்சித் தலைவர் குமார் குணரத்தினம் ஒரு முற்போக்குத் தலவராக இருந்து திடீரென்று ஒரு வெறும் தமிழராக்கப்படுவார். அதோட அரகாலயாவின்ர கதை சரி”

“ஏன் பெடியளின்ர கை ஓங்கச் சாத்தியமில்லையா?”

“இருக்கு. முப்படையளுக்குள்ளயும், பொலிசுக்குள்ளையும் எந்தளவுக்கு ‘பெடியளின்ர ஆக்கள்’ ஊடுருவியிருக்கிறாங்கள் எண்டதைப் பொறுத்துத் தான் மிச்சம். பாருங்கண்ண, இந்த அரகாலயாப் பெடியள் வெறும் குஞ்சு குருமான்கள். இன்னும் தாய்மார் தலை சீவி விடுகிற சைசுகள். அதாலதான் அதுகள் நீச்சல் குளத்தைக் கண்டவுடன் துள்ளிக் குதிக்குதுகள். ஜனாதிபதி மாளிகையில முதல் தரம் ஏ.சி. யைக் கண்டு புல்லரிக்குதுகள். இதுகள் ஜே.வி.பி. யின்ர இரண்டு தோல்விகளையும் காணாததுகள். பாவங்கள். அவங்களை சுனில் ஹந்துநெத்தி போல பழைய ஜே.வி.பி. காரங்கள் உசுப்பேத்தி விடுகிறாங்கள். அதுகளின்ர தாய் தகப்பன்மாரும் வேற வழியில்லாமல் கோதாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்புறாங்கள். அந்த 6.9 மில்லியன் வாக்குகளில அவையளின்ரதான் பெரும் பங்கு. ஆமிக்காரர் சுடலாமெண்டு வேற ரணில் ஓடர் போட்டிட்டுது. இது வெருட்டுக்கா இல்லையோ தெரியாது. ஆனா ரணில் ஜனாதிபதியாக வந்தவுடனே இரண்டில் ஒன்று நடக்கும். ரணில் மாலைதீவுக்குப் போய் அப்பிடியே சிங்கப்பூர் போய் அவரின்ர பெஸ்ட் ஃபிறெண்ட் மஹேந்திரன் வீட்டில சாப்பிட்டிட்டு அப்பிடியே அமெரிக்காவுக்குப் போகலாம். அங்க போய் அலுவல் பாத்து கோதாவுக்கு திரும்பவும் அமெரிக்க குடியுரிமையை எடுத்துக் குடுக்கலாம். அல்லது அரகாலயாவை வெற்றிகரமாக ஒழித்துவிட்டேன் என்று மார் தட்டிக்கொண்டு இந்தியாவின்ர உதவியோட கியூ வரிசையளைக் குறைத்து 2024 இல அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம்”

“அப்ப தமிழர் பழையபடி வானத்தைத் தான் பாக்கவேணும் எண்டிறியோ”

“தான் ஜனாதிபதியா வந்தவுடனே 19 ஆவது திருத்தத்தை முழுசாக நடைமுறைப்படுத்துவேன் எண்டு ரணில் நேற்றுச் சொல்லியிருக்கு. ஆனா இனப் பிரச்சினை பற்றி ஒண்டும் சொல்லேல்ல. சொல்லவும் ஏலாதுதான். இந்தாள் ஜனாதிபதியாக வந்த உடனே ஒதுங்கி நிக்கிற ஆமத்துறூக்கள் அலரி மாளிகையில தாமரை பூக்களோட காம்ப் அடிக்கப் போகிறாங்கள். ரணில் தமிழரைப் பத்தி ஏதாவது பேசினா அவங்கள் அரகாலயாப் பக்கம் போய்விடுவாங்கள். பழையபடி எல்லாம் கொட்ட உட தான். பாப்பம். ஜே.வி.பி. தன்ர சிவப்புச் சேட்டுகளைக் கழட்டி எறிஞ்சுபோட்டு வருவாங்களெண்டா அமெரிக்கா போருக்குப் பிறகு வியட்நாமோட கைகோத்த மாதிரி ஏதாவது நடக்க வாய்ப்புண்டு. ஜே.வி.பி. அதைச் செய்வாங்களெண்டு நம்பிக்கையில்லை”

“பாவம் கோதா. நித்திக்கும் சுகமில்லையெண்டு கேள்வி. கைலாசாவைக் கோதா வாங்கினாலும் வாங்கலாம். பசில் 10% வைச்சு வித்தாலும் வித்துப் போடும். எதுக்கும் அந்த நேவிக்காரன்ர நம்பரைப் பிறகு தா” வடிவேலர் பிரேக்கைச் சரிபார்த்துவிட்டுக் காலைக் கிளப்பினார்.