கேள்வி: வாகனத்தின் பின்னாலுள்ள Spoiler இன் பயன் என்ன?

பதில்:

பல வாகனங்களில் ட்றங்கிற்க்கு மேல் ஒரு விசித்திரமான அம்சம் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் தமது வாகனங்களை அழகுபடுத்துவதற்காக இதைப் பொருத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த spoiler இன் பின்னால் ஒரு முக்கிய விடயமிருப்பது பலருக்குத் தெரியாது.

Spoiler என்ற சொல்லுக்கு ‘குழப்பி’ எனத் தமிழில் பொருள் கொள்ளலாம். வாகனத்திலும் இதே வேலையத்தான் அது செய்கிறது. உண்மையில் இதன் பயன்பாடு விமானங்களில் தான் ஆரம்பமானது. பின்னர் அதிவேக ஓட்டப்பந்தய வாகனங்களிலும் அதைத் தொடர்ந்து சாதாரண பயண வாகனங்களிலும் இது ஒட்டிக்கொணடது.

விமானங்கள் அதி வேகத்தில் பயணிக்கும்போது அது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கின்றது. காற்றின் எதிர்ப்பைக் (உராய்வு விசை) குறைப்பதற்காக அதன் வடிவத்தை மீன் போல வடிவமைத்தார்கள். உராய்வு அதிகரிக்க அதற்கு எதிராக விமானம் பயணிக்க வேண்டுமானால் போதுமான உந்துவிசை வேண்டும். இதை உருவாக்க அதிக எரிபொருள் தேவை. எனவே எரிபொருட் தேவையைக் குறைக்க விஞ்ஞானிகள் பலவித வழிகளையும் கையாண்டார்கள். முதலாவது வடிவம். இவ்வடிவ உருவாக்கத்தை aerodynamic design என அழைத்தார்கள். இதன்போது விமானங்களின் கூரான மூக்கு காற்றைக் கிழிக்க அது விமானத்தின் ‘உடலோடு’ ஒன்றிப்போய் மீண்டும் வால் பகுதியின் பின்னால் ஒன்று சேர்கிறது.

ஆனால் இப்போது இன்னுமொரு பிரச்சினை உருவாகியது. கிழிக்கப்பட்ட காற்று பின்னால் ஒன்றுசேரும்போது விமானம் முன்னகர்ந்து விடுவதால் விமானத்திற்குப் பின்னால் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இது விமானத்தைப் பின்நோக்கி இழுக்க (drag) ஆரம்பிக்கிறது. இதனால் அதையும் மீறி விமானத்தை முன்தள்ள (thrust) மேலும் எரிபொருள் செலவாக நேரிடுகிறது.

இந்த பின்னிழுப்புக்குக் (drag) காரணமான வெற்றிடத்தை உடைக்க, வாலின் பின்னால் ஒன்றுகூடவிருக்கும் காற்றைக் ‘குழப்பி’ அல்லது பலதிசைகளிலும் திசை திருப்பி விடுவதற்காக உருவாக்கப்பட்டதே விமானத்தின் பின்னாலிருக்கும் (மீனில் உள்ளதைப்போன்ற) மேல் நோக்கிய சிறகு (spoiler).

மோட்டர் வாகனங்களில் spoiler ஐப் பாவிக்கும் வழக்கம் 1960 களில் ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஓட்டப் பந்தயங்களில் பாவிக்கப்படும் வாகனங்களில் இது பொருத்தப்பட்டது. ஆனால் இவற்றின் spoiler கள் மீன் சிறகுகள் போலன்றி ட்றங்க்குகளின் மேல் குறுக்குப்பாடாக இருக்கும். இவ் வாகனங்களில் இது இரண்டு பணிகளைச் செய்கிறது. ஒன்று: அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வெற்றிடப் பின்னிழுப்பைக் குழப்புகிறது. மற்றது: வாகனத்தின் கூரைமீதாகப் பயணிக்கும் காற்றை இக் ‘குழப்பிகள்’ நிலத்தை நோக்கியும் அதே வேளை ஆகாயத்தை நோக்கியும் பிரித்துத் திசை திருப்பிவிடுவதால் நிலத்தை நோக்கிப் பயணிக்கும் காற்று வாகனத்தின் பின்பக்கத்தைக் கீழே அமுக்கி, பின் சில்லுகளைத் தரையில் இறுக்கமாகப் பதிப்பதன் மூலம் (traction) வாகனம் வேகமாகப் பயணிக்க உதவுகிறது.

ஆனால் உள்ளூர்த் தெருக்களில் 40/40 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வாகனங்களில் இந்த spoilers எந்தவித பயனையும் தரப்போவதில்லை. வேண்டுமானால் நண்பர்களுக்குப் ‘படம்’ காட்டவோ அல்லது தோழிகளை மகிழ்விக்கவோ பாவிக்கும் அழகு ஆபரணமாக வைத்துக்கொள்ளலாம்.