கேள்வி பதில்: Soverign Bonds என்றால் என்ன?
பதில்: பண முறி (bond) என்பது ஒருவர் வங்கிக்குப் பதிலாக இன்னுமொருவரிடம் கடனாகப் பெறும் தொகைக்கு கொடுக்கும் உத்தரவாதப் பற்றுச்சீட்டு என்று கூறலாம். இப்பத்திரத்தில் கடன் தொகை (முதல்), அதற்கான வட்டி (yield) , வட்டி வீதத்தைச் செலுத்தும் தவணை, முதலை மீளத் தரும் காலம் (term) ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய முதலீட்டுக்காகவோ அல்லது கடன்களை மீளச்செலுத்துவதற்காகவோ ஒரு நிறுவனம் பணம் தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட பெறுமதிக்கான பணமுறிகளை அச்சடித்து அவற்றை விற்பனை செய்யும். இந்நிறுவனம் ஸ்திரமானதும், நாணயமானதும், நீண்ட கால வரலாற்றைக் கொண்டதும் என பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்திடமிருந்து பணமுறிகளை வாங்குவார்கள். அதற்கான வட்டியை (yield) அன்நிறுவனம் குறிப்பிட்ட திகதியில் கொடுக்கும்.
பணமுறிகளை வழங்கும் நிறுவனம் நாணயமானதா என்பதை தீர்மானித்து எச்சரிக்கை செய்ய உலகெங்கும் rating agencies எனும் கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளன. Standard & Poors, Moody’s, Fitch Ratings ஆகியன இவற்றில் சில. பணமுறியை விற்ற ஒரு நிறுவனம் அதற்குரிய வட்டியை ஒழுங்காக மீளச் செலுத்த முடியாத போது பணமுறிகளை வாங்கியவர்கள் பதட்டமடைகிறார்கள். ஒப்பந்தத்தின்படி பணமுறிகளை விற்றவர்கள் தவணை முடிவில் முழுத் தொகையையும் மீளச் செலுத்த முடியாமல் கைகளை விரித்துவிடுகிறபோது பணமுறிகளை வாங்கியவர்கள் தமது முதலீட்டை இழக்க நேரிடுகிறது. இது default எனப்படுகிறது.
உலகில் பல்வேறு நாடுகளும் தமக்குப் பணம் தேவைப்படும்போது இப்படியான பணமுறிகளை விற்கின்றன. இவை ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் விற்கப்படுவதனால் அவை soverign bods என அழைக்கப்படுகின்றன. அரசாங்கங்களினால் இப்பணமுறிகள் விற்பனை செய்யப்படுவதனால் இவற்றுக்கு ஸ்திரத் தன்மை அல்லது நம்பகத் தன்மை அதிகம் என்பது பொதுவான அபிப்பிராயம். ஒரு நாட்டின் ஆட்சி நிர்வாகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவை சீரானவையாக இருப்பின், அந்நாட்டினால் விற்கப்படும் பணமுறிகளுக்கு கிராக்கி அதிகம் இருக்கும். இப்பணமுறிகளுக்கு risks குறைவாக இருப்பதனால் இவற்றினால் வழங்கப்படும் வட்டி (yield) குறைவாக இருக்கும். அதிக வட்டியைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் high risk அரச பணமுறிகளை நோக்கி ஓடுவது வழக்கம்.
நாடுகள் தமது பணமுறிகளை விற்கும்போது தமது நாட்டின் நாணயத்திலோ அல்லது அமெரிக்க நாணயத்திலோ (டொலர்) விற்கலாம். பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பணமுறிகளை சர்வதேச முதலீட்டாளர் (international investors) அவரவர் நாணயங்களில் வாங்குவதில்லை. மாறாக அவற்றை அமெரிக்க டொலரில் தான் வாங்க விரும்புவார்கள்.
2023 ஆம் ஆண்டு மட்டும் ஆர்ஜன்ரீனா, கானா, லைபீரியா, இலங்கை மற்றும் சூரினாம் ஆகிய நாடுகள் தமது பணமுறிகளுக்கான தொகைகளை முதலீட்டாளர்களுக்கு மீளச்செலுத்த முடியாமல் கைகளை விரித்துக்கொண்டன (defaulted). இதன் மொத்த தொகை 26.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள். Rating agencies இலங்கையின் நம்பகத் தரத்தைக் குறைத்துவிட்ட படியால் முதலீட்டாளர்கள் இலங்கையின் பணமுறிகளை வாங்க மறுத்துவிட்டார்கள். இதனால் இறக்குமதித் தேவைகள் மற்றும் இதர கடன்களைச் செலுத்துவதற்கு தேவையான பணத்தை இந்தியாவும் சீனாவும் தற்காலிகமாகத் தந்துதவின. ஆனாலும் தனது தரத்தை மீளவும் உயர்த்திக்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டது. இதைச் செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியது. இலங்கையை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுக்க அது மிகவும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும்வரை ரணில் விக்கிரமசிங்க அரசு அவற்றில் பலவற்றை ஏற்று ஆட்சியை நடத்தி வந்தது.
கனடா, அமெரிக்கா உட்படப் பல நாடுகளும் பணமுறிகளை விற்று முதலீடுகளைப் பெறுகின்றன. இவற்றில் வெளிநாட்டு மற்று உள்நாட்டு முதலீட்டாளர்களும் அடங்குவர். கனடாவில் கனடிய மத்திய வங்கியால் விற்கப்படும் இப்பண முறிகள் 1 வருடம் முதல் 10 க்கு மேற்பட்ட வருடங்கள் வரை தவணைகளைக் கொண்டதாகவும் அதற்கேற்ப வட்டி வீதங்களைக் கொண்டதாகவும் இருக்கும். 2 வருடப் பணமுறிகளுக்கான தற்போதைய சராசரி வட்டி வீதம் 4.00% ஆக இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலானால் 3.00% வரை போகிறது. இலங்கையின் 1 வருட பணமுறி வட்டி வீதம் 10.478% மாகும். இதன் மூலம் பெறப்படும் பணத்தையே மத்திய வங்கிகள் அடமானக் கடன்கள் மற்றும் சில்லறைக் கடன்களை அதிக வட்டியில் கொடுத்துப் பணமீட்டுகின்றன. (Image Credit: michelle-spollen-P22AFmgMuUc-unsplash)
