LIFEகேள்வி-பதில்

கேள்வி: ‘இண்டக்‌ஷன் ஸ்டோவ்’ (Induction Stove) எப்படி இயங்குகிறது?

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல மில்லியன் மக்கள் தமது சமையல் தேவைகளுக்கு மின் அடுப்புக்களையும், எரிவாயு அடுப்புக்களையும் பாவிக்கிறார்கள். இவ்வடுப்புகளில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வெப்ப உருவாக்கத்துக்கு மின் சுருளையும் (electric coils), மூன்றிலொரு பங்கு எரிவாயுவையும், மிகவும் சொற்பமான பங்கு’இண்டக்‌ஷன்’ முறையயும் உபயோகிக்கின்றன. ‘இண்டக்‌ஷன்’ அடுப்புகள் தோற்றத்தில் மின் சுருள் அடுப்புக்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால் இயங்கும்போது இவற்றின் மீது கையை வைத்தால் மின்சுருள் அடுப்புக்களைப் போல் கையைச் சுட மாட்டாது. அதுவே தான் மற்ற அடுப்புக்களுக்கும் இண்டக்‌ஷன் அடுப்புக்களுக்குமுள்ள வித்தியாசம்.

எரி வாயுவில் இயங்கும் அடுப்புக்கள் மிக இலகுவாக ஆரம்பிக்கவும், அணைத்துக்கொள்ளவும் முடியுமானாலும் மூடப்பட்ட வீடுகளுக்குள் சமையல் செய்யும்போது இவற்றிலிருந்து வெளிவரும் கார்பன் வாயுக்கள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. அத்துடன் ஒப்பீட்டளவில் தீ விபத்துக்களை ஆரம்பிப்பதில் இவை முன்னணியில் இருக்கின்றன. முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால் இவற்றிலிருந்து கசியும் எரிவாயு வீட்டையே வெடிகுண்டாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.

மின் சுருள் அடுப்புக்கள் ஒப்பீட்டளவில் ஆபத்து குறைந்தவை. அவற்றிலிருந்து தீய வாயுக்கள் எதுவும் வெளியேறுவதில்லை. சுவிட்சைப் போட்டதும் மின்சுருள்களினூடு பாயும் மின்சாரம் இச்சுருள்களை வெப்பமாக்குகின்றன. இதற்குள் புகும் மின்சாரத்தின் அளவைக் கூட்டிக் குறைப்பது மற்றும் கால நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெப்பத்தையும் கட்டுப்படுத்தலாம். மின்சுருளில் இருக்கும் சில பதார்த்தங்கள் தம்மூடு மின்சாரம் (எலெக்ட்றோன்கள்) பாய்வதை எதிர்க்கின்றன அல்லது தடுக்க முற்படுகின்றன. இந்த ‘உரசல் புரசலால்’ வெப்பம் உண்டாகிறது. தாமதித்தாலும் புறப்பட்ட எலெக்ட்றோன்கள் சுருளினூடு சென்று தமது நோக்கத்தை முடித்து விடுகின்றன. இதனாலேயே சுருள் வெப்பமாகச் சில நிமிடங்கள் எடுக்கின்றன.

இண்டக்‌ஷன் அடுப்புக்களில் மின்சாரமே வெப்ப உருவாக்கத்துக்குக் காரணமாக இருப்பினும் அங்கு மின்சுருள்கள் பாவிக்கப்படுவதில்லை. மாறாக மின்காந்த அலைகளை மட்டுமே இவ்வடுப்புகள் வெளிவிடுகின்றன. வெளிவிடப்படும் மின்காந்த அலைகள் இரும்பினாலான சட்டிகளினூடு பாயும்போது அவற்றைச் சூடாக்குகின்றன. இரும்புச் சட்டிக்குப் பதிலாக அதன் மேல் கைகளையோ அல்லது அலுமினியச் சட்டிகளையோ வைத்தால் அவற்றை மின்காந்த அலைகள் சூடேற்றாது. மின்சுருள் அடுப்புக்களில் எப்படிச் சுருள்கள் வெப்பத்தை உருவாக்குகின்றனவோ அப்படி இங்கு இரும்புச் சட்டிகள் தம்மை ஊடறுத்துச் செல்லும் மின்காந்த அலைகளினால் சூடேற்றப்படுகின்றன. அலுமினியம், மனித உறுப்புக்கள் ஆகியன இந்த மின்காந்த அலைகளினால் சூடாக்கப்படுவதில்லை. மின்சுருள் அடுப்புக்களில் போலவே இங்கும் வெப்ப உருவாக்கத்தின் அளவைக் கூட்டிக் குறைக்கலாம். பார்வைக்கு மின்சுருள் அடுப்புக்களும் மின்காந்த அடுப்புக்களும் ஒரே போன்றவை போலக் காட்சியளிப்பதும் உண்மைதான்.

அடுப்புக்களின் வினைத்திறனை மதிப்பிடும் அமைப்பான Energy Star இன் தரப்படுத்தலின்படி இண்டக்‌ஷன் அடுப்புக்கள் தாம் பாவிக்கும் மின்சாரத்தின் 85 % த்தை வெப்பமாக்குகின்றன. மாறாக, மின்சுருள் அடுப்புக்கள் மின்சாரத்தின் 75-80% அளவையும், எரிவாயு அடுப்புக்கள் தாம் பாவிக்கும் வாயுவின் 32% த்தையும் வெப்ப உருவாக்கத்திற்காகச் செலவிடுகின்றன. மின்சாரமும் எரிவாயுவும் ஒரே விலைகளில் வழங்கப்பட்டால் நீங்கள் செலவழிக்கும் 100 டொலர்களில் இண்டக்‌ஷன் அடுப்பு 15 டொலர்களையும், மின்சுருள் அடுப்பு 20-25 டாலர்களையும், எரிவாயு அடுப்பு 68 டாலர்களையும் வீணடிக்கின்றன. எரிவாயுச் சமையல் சுவையாக இருக்கிறது என்பதிலும் உண்மை இருக்கிறது. (Photo by Sven Brandsma on Unsplash)