கேரளாவில் விமான விபத்து-20 பேர் மரணம்
துபாயிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த எயர் இந்தியா விமானம் தரையிறங்கும் முயற்சியின்போது கடும் மழையில் சிக்குண்டது
ஆகஸ்ட் 8, 2020: துபாயிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த எயர் இந்தியா விமானமொன்று கேரளாவில், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வீழ்ந்து நொருங்கியது.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த எயர் இந்தியா எக்ஸ்பிரெஸ் விமானம் கொறோணாவைரஸ் காரணமாக துபாயில் வெளியேறமுடியாது முடக்கப்பட்டிருந்த 190 பயணிகள், பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தது. கோழிக்கோடு சர்வதேச விமான ஓடுபாதையில் அது தரையிறங்க முயற்சிக்கும்போது கேரளாவில் பெய்யும் அடைமழை காரணமாக 35 அடி உயரத்தை அண்மிக்கும்போது அது விழுந்து நொருங்கியதாக அறிவிக்கப்படுகிறது.
விமானம் இரண்டு துண்டாக உடைந்துவிட்டதென்றும், இதன்போது, இரண்டு விமானிகள் உட்பட, 20 பேர் கொல்லப்பட்டும், நூற்றுக்குமதிகமானோர் காயப்பட்டுமுள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தரையிறங்கும்போது விமானம் முழு வேகத்துடனேயே இறங்கியதென்றும் ஒடுபாதையின் எல்லையையும் மீறி ஓடி, அதற்கப்பாலுள்ள பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது என விசாரணை செய்யும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானிகள் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இறங்க முயற்சித்து முடியாதுபோய் மூன்றாவது முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ் விபத்து நடந்திருக்கிறது.