Sri Lanka

கேப்பாபுலவு மக்களை ஏமாற்றிய அனுர அரசு!

இராணுவத்தினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளின் உரிமையாளர்கள் முல்லைத்தீவுக்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து தமது குறைகளை ஒப்புவிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அமைச்சர் சந்திரசேகரனால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி மீறப்பட்டிருப்பதுமல்லாது பிரதமர் அம்மக்களை அவமானப் படுத்திவிட்டதாக அவர்கள் கருதக்கூடியாதவும் முடிந்திருக்கிறது.

கடந்த ஞாயிறு (16) அன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முல்லைத்தீவுக்கு வருகை தந்திருந்தார். இதன் போது கேப்பாப்புலவில் இரணுவதினரால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டிருக்கும் காணிகளின் உரிமையாளர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு தமது குறைகளை பிரதமருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனால் வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது.


இருப்பினும் பிரதமருடன் உரையாடுவதற்கு கேப்பாப்புலவு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதது மட்டுமல்ல இம்மக்களின் அவலங்கள் பற்றியோ ஆகிரமைக்கப்பட்ட அவர்களது நிலங்கள் பற்றியோ பிரதமர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது இம்மக்களை மிகவும் விசனத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

இச்சந்திப்பின் போது பிரசன்னமாகவிருந்த, தேர்தல் காலத்தில் இம்மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோரிய, தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவுமே பேசாது மெள்னமாக இருந்தமையும் இம்மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இதே வேளை ஆகிரமிக்கப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் இந்திராணி என்பவர் , பிரதமரது ஆசனத்துக்கு முன்பாலிருந்து பிரதமருடன் பேச முனையும்போது பாதுகாப்பு படையினரால் அவர் தடுக்கப்பட்ட விடயமும் இம்மக்களை ஏமாற்றத்துக்கும் கடும் மன உளைச்சலுக்குமுள்ளாக்கியிருக்கிறது.

தேர்தல் காலத்தில் பிரதமர் அமரசூரியா முல்லைத்தீவுக்கு வந்தபோதும், அதற்கு முன்னரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் சொந்தக்காரர்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரும் புகார்களை கொடுத்திருந்தனர். அப்படியிருந்தும் பிரதமர் இது பற்றி எதுவுமே பேசாதது இம்மக்களைக் கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ( Courtesy: Kumanan @kumanan93) (Image: Ilankai Tamil Sangam)