கெஞ்சாதே -1…!

Spread the love
கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருநாள் 2019’
கனடா மூர்த்தி எழுதும் விமர்சனத் தொடர்…
கனடா மூர்த்தி ஜோன் ரோறியுடன்

உண்மையில் இந்த மார்க்கம் வீதி ரொறன்ரோ பெருநகரின் ஒரு விரைவு நெடுஞ்சாலையாகும். இதை ஹைவே 48 என்றும் அழைப்பர். இந்த விரைவுச் சாலையின் ஒரு பகுதி இரண்டு தினங்கள் போக்குவரத்திற்கு மூடப்படுகிறது. மூடப்பட்ட பகுதி ஒரு திறந்த வெளி அரங்கமாக மாறுகிறது.  தமிழர்களுக்கு பிரியமான உணவு அங்காடிகள் திறக்கப்படுகின்றன. கனடா பிரதமர் உட்பட பல்வேறு அரச நிலைப்பட்ட பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சி பேதம் இன்றி கனடாவின் பெரும் கட்சிகளின் அரசியல்வாதிகளும் கலந்து கொள்கிறார்கள்.

ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி (2018)

இரண்டு மேடைகள்.. ஒன்றில் தமிழரின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், பரதம், சிலம்பாட்டம் என்பவற்றோடு நவீன நடனங்கள், பல்கலாச்சார நிகழ்வுகள் தூள் கிளப்புகின்றன. மற்ற மேடையில் இசை நிகழ்ச்சி… இவற்றைக் காண உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கில் ஆம், இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் அங்கு வருகிறார்கள். தெருவெங்கும் தமிழ் முழக்கம். எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்… நம்ப முடிகிறதா?

தமிழர் தெருவிழா.. இந்த ஆண்டுஆகஸ்ட் 24, 25 திகதிகளில் தமிழர் தெருவிழா மார்க்கம் வீதியில் நடந்து முடிந்திருக்கிறது. ரொறன்ரோ பெருநகரின் நகரபிதா அங்கு வந்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இம்முறை மூன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கணிப்புக்கள் தெரிவிக்கினறன. 50 க்கும் மேற்பட்ட உணவு அங்காடிகள் இருந்தும்கூட அலை அலையாக வந்த மக்கள் வெள்ளத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவை இம்முறை திணறியிருக்கின்றன. மின்னொளி பிரகாசிக்கும் பிரமாண்டான அரங்கு.. அதில் கனடியப் பாடகர்களுடன், தமிழக பாடகர்களும், இலங்கையிலிருந்து சிறப்புடன் அழைக்கப்பட்ட பாடகரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். மேடையிலிருந்து இசை இடியாக இடித்து புயலாக சீறித் தென்றலாகக் குளிர்கிறது. மக்கள் வெள்ளம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ரசித்துக் கொண்டு இருக்கிறது. 

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ, கெரி ஆனந்தசங்கரி, பா.உ.

பிரமிக்க வைக்கும் இவ்விழாவினை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். ஆண்டுதோறும் கனடியத் தமிழர் பேரவை இந்த சாதனையை அமைதியாகச் செய்து காட்டி வருகிறது. இது ஐந்தாவது முறை! இந்த விழாவை வெறுமனே ஒரு பொழுதுபோக்கு விழா என்று சொல்லவிட முடியுமா? முடியாது. பணம் சேகரிப்பதை மட்டும் குறியாகக் கொண்டு நடக்கிறது என்று கொச்சைப்படுத்திவிட முடியுமா? செருப்பு பிஞ்சிடும். அப்போ? இந்த விழா குறித்து உயர்நிலையில் மட்டும் தொடர்ந்து பேச ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அவை குறித்து  நாம் பேசவேண்டும். அதற்காக விழாவை விமர்சிக்க அதில் குறைகாண எதுவுமே இல்லையா என்கிறிர்களா? இருக்கிறது. விழா மேம்பட இன்னும் பல செய்யப்பட வேண்டியும் உண்டு. அவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் இந்த விழா, தமிழர்கள் குறித்து ஏனையோர் பெருமதிப்புக் கொள்ள வைக்கும் ஒரு சாதனை விழா என்பதில் மறு கருத்து இருக்க முடியாது. 

‘இவ்வளவு பணத்தைக்  போட்டு CTC ஒரு நிகழ்ச்சி செய்யுது.. இங்க இப்பிடி கொட்டுறதை விட இந்தக் காச ஊருக்கு அனுப்பி அங்க உள்ள முன்னாள் போராளியளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாந்தானே..”

-நிகழ்வில் பங்குகொண்ட ஒருவர்

என்னைக் கேட்டால் ஈழத்தமிழர்கள் தமது இருப்பினை புலம்பெயர் நாடுகளில் ஆழமாகப் பதிக்க செய்துவரும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களில் கனடியத் தமிழர் பேரவை நடத்தும் இந்தத் தெருவிழா முதன்மையான ஒன்று என்பேன். ஏராளமான மக்கள் திரள்வதை எதிர்பாத்த ஒழுங்கான திட்டமிடல், அரச திணைக்களங்களுடன் குறிப்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் இடைவிடாத பேச்சுவார்த்தை, நகர சபை அதிகாரிகள் அனுமதிகள், பொதுப்போக்குவரத்து அதிகாரிகளோடு இணக்கப்பாடு, சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு உறுதிப்படுத்தல்கள் என பல்வேறு விடயங்களை ஒரு அரச திணைக்களம் செய்வதுபோல கனேடியத் தமிழர் பேரவை செய்ய வேண்டியிருந்தது. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் இந்தவகை சேவைகளில் பலவற்றிற்கும் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டிய நிலையும் உண்டு. உதாரணமாக பாதுகாப்புக்காக போலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு நிற்கிறார்கள் என்றால் அதற்கும் கனடியத் தமிழர் பேரவை கட்டணம் செலுத்த வேண்டும். மேலதிக தனியார் பாதுகாப்பு சேவைகள்கூட கட்டணங்களுக்கு உட்பட்டவையே. அதைவிட அங்காடிகளுக்கான கூடாரங்கள், அதற்கான மின் வசதிகள் என்பனவற்றிற்குப் பெருந்தொகையாக பணம் செலவாகும். லட்சக் கணக்கில் மக்கள் கூடும்போது வருபவர்கள் வீதியில் குப்பைகளை வீசி எறிந்துவிட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. அதுவும் எங்கட ஆக்கள் குப்பை போடுற விதம் தனி ரகம்… உலகத் தரம்! அதனை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கும் பணம். 

இவை மட்டுமல்ல நிகழ்சியின் இதர செலவுகள், கலைஞர்களை வரவழைத்தல், ஒளி. ஒலி அமைப்பு உட்பட இன்னும் ஏராளமான செலவுகள் இருக்கின்றன. இதை ஒரு அரசாங்கத்தின் நிதியமைச்சர் போல பட்ஜட் போட்டு, விவாதித்துத்தான் செய்ய வேண்டும். ஒரு தனி நபர் நிகழ்ச்சி வைப்பதாக இருந்தால், தனி நிறுவனம் நிகழ்ச்சி வைப்பதாக இருந்தால் பணத்தைக் தாராளமாகக் கொட்டலாம். தமிழர் பேரவை ஒரு பொது அமைப்பு. இதன் வரவுசெலவை கவனிக்க கணக்காளர்கள் இருக்கிறார்கள். நிர்வாகக் குழு இருக்கிறது. எனவே சகலவற்றையும் எண்ணி எண்ணித்தான் கருமமாற்றவேண்டும்.

தெருவிழாவின்போது ஒருவர் என்னிடம் கேட்டார்: ‘இவ்வளவு பணத்தைக்  போட்டு CTC ஒரு நிகழ்ச்சி செய்யுது.. இங்க இப்பிடி கொட்டுறதை விட இந்தக் காச ஊருக்கு அனுப்பி அங்க உள்ள முன்னாள் போராளியளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாந்தானே..”

(தொடரும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>