Spread the love
கனடா மூர்த்தி எழுதும் விமர்சனத் தொடர்….

தெருவிழாவின் பரபரப்புக்கு இடையே அந்த அங்காடி மட்டும் மிக அமைதியாக இருந்தது.

உள்ளே ஒரு வெள்ளை இனப் பெண்மணி உட்காந்திருந்தார். பெண்மணிக்கு உதவியாக மிகச் சிறிய எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்கள் அங்கிருந்தார்கள் – தெருவிழா பார்வையாளர்களிடம் கெஞ்சிக் கெஞ்சி எதையோ கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

யார் அவர்கள்?

2009 இறுதியுத்தத்திலும், அதற்கு முன்னரும் இலங்கையில் காணாமல் போனவர்களைக் குறித்த ஒரு நம்பகமான விபரத்திரட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கும் இரண்டு சர்வதேச அமைப்புக்களைச் சார்ந்த தொண்டர்கள்தான் அவர்கள். (1) அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு (ITJP), மற்றது, (2) மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வுக் குழு. (HRDG). அமெரிக்காவிலிருந்து இயங்கும் இந்த இரண்டு அமைப்புக்ளும் நமக்காக தெருவிழாவில் தமது அங்காடியைத் திறந்திருந்தார்கள்.

தமது வேலைத்திட்டங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கா-ஈழப்படைகளின் மோதல் காலத்தில் நாட்டில் இறந்தவர்களைப் பட்டியலிட்டு, பெயர்களைத் தொகுத்து, அந்த எண்ணிக்கையை நம்பகமாகப் பகிரங்கப்படுத்தவெனச் செயற்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே மற்றவர்களால் தொகுக்கப்பட்ட பட்டியல்களை இணைத்துக் கொள்வதற்கும் ஆர்வமாக உள்ளார்கள்.

‘இயன்றவரை – எவரையும் தவறவிடாமல்- பெயர், காணாமற்போன காலம் போன்ற அத்தியாவசிய விபரங்களைச் சேகரித்து சர்வதேசத்தின் முன் நம்பகமான தொகையினை முன்வைப்பதே எங்கள் நோக்கம்” என்றார்கள் இம்முயற்சியில் உதவிடும் அந்த இளம் தொண்டர்கள். மேலும் “தெருவிழாவிற்கு வந்திருக்கும் தமிழ் மக்களுக்கு நோக்கத்ததைப் புரியவைக்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும், சமூக குழுக்கள் மற்றும் தமிழ் அரசியல் ஆர்வலர்களின் உதவியை வேண்டி நிற்கிறோம்” எனவும் கூறினார்கள்.

“உன்னதமான பணியல்லவா இது!” என்று நினத்துக் கொண்டேன்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தேவையான விபரங்களைத் தந்து உதவிகரமாக இருக்க வேண்டியவர்கள் யார்? சிங்களவரா? இல்லை. நாம்தானே.. ஆனால் தெருவிழாவிற்கு வந்த நம்மவர்களோ அவர்களைக் கவனிக்காது கடந்து அலை அலையாகப் போய்க் கொண்டிருக்கிறோம்.

லட்சக்கணக்கில் திரண்டிருக்கிறோம். கொத்துரொட்டிக்கடைகளும், ஐஸ்கிரீம் கடைகளும் மக்கள் வெள்ளம் தாளாமல் அலைமோதுகின்றன. மேடையில் பாடப்படும் சினிமாப்பாடல்களை கேட்கவும் உட்கார்ந்தாயிற்று. ஆனால் காணாமல் போனவர்கள் குறித்த விபரத்தைத் தரக்கூடியவர்களாக அல்லது அந்தப் பணி பரிபூரணமடைய செய்ய உதவிடும் ஆர்வத்தோடு எத்தனை பேர் அங்கு இருந்திருக்கிறோம்?

அட.. ஒருவேளை அப்பேர்ப்பட்ட விபரங்களைத் தெரிந்தவர்கள் எவரும் தெருவிழாவிற்கு வரவே இல்லையோ..? இருக்காது.

இவர்களது பணி குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவர்களுக்கு உதவிட நமது தமிழ் மக்கள் என்றும் பின்தங்கியிருந்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால் இவ்விரு அமைப்புக்கள் குறித்தும், அவர்கள் நோக்கம் குறித்தும் கனடா தமிழர்களுக்கு முன்கூட்டியே பரப்புரை செய்யப்பட்டு அவர்களுக்கான ஆக்கபூர்வ உதவிகள் மக்களிடம் இருந்து கிடைக்க வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதனால் வந்திருந்த பலருக்கும் இதைப்பற்றித் தெரியவில்லை. ஏதோ ஒரு அரசியல் அமைப்பின் சாவடி என்பதுபோல அனைவரும் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

இங்குதான் கனடியத் தமிழர்பேரவை மேல் ஒரு விமர்சனம் வைக்க என் மனம் நாடுகிறது. “இப்படிப்பட்டதொரு பெருமுயற்சி தனது தெருவிழாவில் நடக்கிறது என்பதை சரிவரப் பொதுமக்களுக்குத் முன்கூட்டியே தெரிவிக்க கனடியத் தமிழர் பேரவை தவறிவிட்டது” என்று அவர்கள்மேல் குற்றம் சாட்டத் தோன்றுகிறது.

இந்த அங்காடிக்கு அதிகம் பேர் வராததை கவனித்தவர்களுள் ஒருவர் என்னிடம் வந்தார்.  ‘ஒருவேளை கனடியத் தமிழர் பேரவையால் தனியே பரப்புரையை செய்ய முடியாவிட்டால் இங்குள்ள ஊடக நடத்துனர்களிடம் அதைச் சொல்லி பொறுப்பையும் கொடுத்திருக்க வேண்டும்” என்றார் வந்த அந்த உள்ளூர் ஊடக நண்பர். சர்தான்.. ஆனால் கனடியத் தமிழர் பேரவை கேட்டிருந்தால் எத்தனை ஊடகங்கள் பொறுப்புடன் அதை எடுத்து செய்திருக்கும் என்பது இன்னொரு மில்லியன் டொலர் கேள்வி. ‘ஓகே.. பரப்புரை செய்யிறம்.. விளம்பரமும் போடுறம். ஆனா காசு தருவீங்கள்தானே..?” என்று கேட்காத தமிழ் ஊடகம் கனடாவில் இருக்கிறதா என்ற இன்னொரு ஆராய்ச்சிக்கும் இவ்விடத்தில் இடம் உண்டு.

நான் எதுவும் பேசவில்லை. “எங்களிடம் விட்டிருந்தால் நாம் இதை ஒரு சமூகக் கடமையாக எடுத்து செய்து கொடுத்திருப்போம்” என்றும் சொன்னார் அந்த ஊடக நண்பர். உண்மைதான். அவர் சொன்னதுபோல இது ஒரு சமூகக் கடமை தான்.

மோதல் காலத்தில் இறந்தவர்களைக் கணக்கெடுப்பது எத்துணை அத்தியாவசியமானது. அதை நம்பகமாக எப்படி முன்னெடுப்பது?

இதற்கு இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் ஒரு சுலபமான வழியை சொன்னார்: “அரசாங்கம் அல்லது மாகாணசபைகள்  நினைத்தால் செய்யலாம். 2009க்கு முன்பு இருந்த குடும்ப அட்டைகளின் பட்டியலையும் தற்போது உள்ள குடும்ப அட்டைகளின் பட்டியலையும் கையில் எடுத்து, அவற்றிற்கிடையேயிருக்கும் வித்தியாசத்தைக் கணக்கெடுத்தாலே போதுமே.. காணாமல் போனவர்களின் முதல்கட்ட பட்டியலை சுலபமாகத் தயாரிக்கலாம்..” என்றார்.

“ஆனல் இங்கு இன்னொரு பிரச்சனையான பகுதியும் இருக்கிறது” என்றும் அவரே சொன்னார். “2009க்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ்ப்படையின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்காவிடமிருந்து உணவுகள், மற்றும் நிவாரணப் பொருட்களை அதிகமாகப் பெற வேண்டியிருந்தது. அதனால் அதிக மக்கள் வாழ்வதாக காட்ட போலியாக குடும்ப அட்டைகள் தமிழ்ப்படையின் ஆசீர்வாதத்துடன் நடமாட விடப்பட்டதாகவும் கேள்விப்பட்டதுண்டு” என்றார். சிக்கல்தான்.

“காணாமல் போனவர்களில் பலர்  தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள்” என்று ஒரு சிங்கள செய்திக் குறிப்பு ஒன்றை யாரோ பகிர்ந்து அதை முகப்புத்தககத்தில் பார்த்த ஞாபகமும் வந்து தொலைத்தது. அதாவது இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் – குறிப்பாக விடுதலைப்புலிகள் அங்கத்தவர்கள் பலரும் – வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள் என்ற தொனியில் அந்தக் குறிப்பு சொல்லப்பட்டிருந்தது. இது எப்டி இருக்கு?

அந்த அங்காடிக்கு சென்றுவந்தபின்னர் ஒரு தோழர் பிறகு என் காதில் கிசுகிசுத்தார் “உவையை எப்பிடி நம்புறது, உவை கட்டாயம் சி.ஐ.ஏ. ஏஜன்டுகளாகத்தான் இருப்பினம்..” என்றார்.  இன்னொருவர் நைஸாக எனக்கு விச ஊசி போட்டார்: ‘உவங்கள் எங்களைக்களைக் காட்டி கனடா, அமெரிக்க அரசாங்கத்திட்ட காசு வாங்கிறவங்களாக இருப்பாங்கள்..” என்றார். இதுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது. டிசைன் அப்பிடி.

நன்நோக்கத்துடன் வரும் அந்நியர் வேண்டாம் என்கிறோம். அப்போ இதை யார்தான் செய்வது? யோசித்துப் பார்த்தேன்.

இந்த வகை வேலைத்திட்டங்களைச் செய்யவும் பரப்புரை செய்யவும் மிகப் பொருத்தமான அமைப்பு TGTE எனப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! ஆனால் நாடுகடந்த அரசாங்கத்திற்கு தமது இருப்பை தக்க வைத்திருப்பதே இன்று ஒரு பெரும் சவால். பாவம் அவர்கள்… பலவீனம் அவர்களோடு கூடப்பிறந்தது. அதனால் வேறெதுவும் செய்ய அவர்களால் முடியாது. மற்றது?

NCCT என்ற தேசிய அவையினர்!  செய்வார்களா? ‘செத்துப்போனவனை சிங்களவன் கொன்றானா தமிழன் கொன்றானா” என்ற கேள்வியே அவர்களுக்கு அலர்ஜியாகிவிடுமே..  இந்த விபரச் சேகரிப்பில் உதவ அவர்களுக்கு நிச்சயம் சில பிரச்சனைகள் இருக்கும். எனவே அவர்களாலும் முடியாது.

அடுத்து வருவது CTCC என்ற வர்த்தக சம்மேளனம். இங்கு பிரச்சனை என்னவென்றால் இவர்கள் ‘வர்த்தகம் தவிர்ந்த எந்த வித அரசியல் செயல்திட்டங்களிலும் வெளிப்படையாக ஈடுபடுவதில்லை” என்ற மாபெரும் அரசியலை கைக் கொள்பவர்கள். (நிர்வாக சபை அரசியல் தனி) எனவே அவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள்.

சரி.. இந்த பெரு முயற்சியில் CTC ஆகிய கனடியத் தமிழர் பேரவையேதான் முன்னின்று ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்கள்தான் இதற்குப் பொருத்தமானவர்கள்.. “ஏன் ஈடுபடவில்லை?” என பேரவையின் மெயின் சுவிச்சுக்களில் ஒன்றிடம் கேட்டுப் பார்த்தேன்.

“ஈடுபட்டிருக்கலாம்தான்.. ஆனால் அப்படி ஈடுபட்டால் ஒன்று நிச்சயம். நாம் செய்வதை விசமத்தானமாகக் குழப்பியடித்துக் கொண்டிருக்க நம்மவர்களில் ஒரு பகுதியினர் காத்துக் கொண்டு இருப்பார்கள் ஐஸே!” என்றார் அவர் ஆதங்கத்துடன். அடச் சே…

உண்மைதான்..  CTC எதைச் செய்தாலும் அதை காவல் நாய்கள்போல கவனித்து விமர்சிக்க ஒருசில நண்பர்கள் ரெடியாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். குரைத்துத் தள்ளிவிடுவார்கள். அதனால் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்று CTC ஓட வேண்டியிருக்கும்.

சிந்தித்துப் பார்த்தால், கனடியத் தமிழர் பேரவை பல விடயங்களில் மற்ற அமைப்புக்களிடமிருந்து சமூக இயக்கத்தில் வித்தியாசப்படுகிறது. அது எப்போதும் யதார்த்த அரசியலைப் புரிந்து வெளிப்படையாக இயங்குகிறது. எப்போதும் நாட்டில் பலமாக இருக்கும் தமிழர் அமைப்புக்கு பக்க பலமாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் மக்கள் ஆதரவுடன் பலமாக இருந்த தாலத்தில் விடுதலைப் புலிகளுக்கு கனடாவில் ஒரு அரண் போல நின்று கொண்டது. இன்று கூட்டமைப்பு மக்கள் ஆதரவுடன் பலமாக இருப்பதால் அவர்களை ஆதரிக்கிறது. (இதை சந்தர்ப்பவாதம் என்றும் சிலர் கிண்டலாகச் சொல்லலாம்.)

சிஐஏ ஏஜன்ட்டிலிருந்து இன்சூரன்ஸ் ஏஜன்ட் வரை யார் குத்தினால்தானென்ன, ‘அரிசி வரட்டும்’ என்பது CTCயின் நிலைப்பாடு. தம்மோடு சேர்ந்து இயங்குபவர்கள் எந்த கட்சிக்கு தாலி கட்டிக் கொண்டவர்கள் என்ற ‘பாக்கிரவுண்ட் செக்கிங்குகளோ’ முன்பு எந்த இயக்கத்தோடு சேர்ந்திருந்து இயங்கியவர்கள் என்ற பிரேத பரிசோதனைகளோ CTCயினர் செய்வதில்லை. ஆனால்  தமிழர் மேலாண்மை ஏற்பட விடாமல் நுண்அரசியல் செய்பவர்களை மட்டும் எப்படியோ இனங்கண்டு தவிர்த்துவிடுகிறார்கள். (வழக்குப் போடுவதாகவும் கேள்வி.)

அப்போ பூனைக்கு மணி கட்ட யாரும் இல்லையா?

புலிக்கு Money கட்டிய காலம் முடிந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னமும் இந்தவகைப் ‘பூனை’க்கு மணி கட்ட நம்மால் இன்னும் முடிவதில்லை. அதை வேற்றினத்தார் செய்தால்தான் உண்டு. அப்போ நாம்?? பெருமூச்சு மட்டும்தான் விடவேண்டும்.

கவனித்துப் பாருங்கள்.. மேற்கு நாடுகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டும் வரதராஜப்பெருமாளை ‘கொடும்பாவி’யாக்கி விளக்குமாற்று அடி கொடுத்துக் கொண்டும் இருக்கும் அபலைத் தாய்மார்களின் கண்ணீர்க் கூக்குரல் ஒருபுறம் கேட்கிறது..  மறுபுறத்தில், ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி வரப்போகின்ற கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் “இனப்படுகொலை என்று சொல்லும் வேட்பாளர்களுக்கு மட்டும்தான் தமிழர்கள் நாம் வாக்களிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் குறூப்கள் போடும் கோசங்கள் காதில் படுகிறது. ‘தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபாயாவை ஈழத்தமிழர் ஜனாதிபதி ஆக்கித் தெரிவு செய்துவிடக்கூடாது” என்று இன்னொரு குறூப் உரத்த குரலில் அரசியல் செய்கிறது. இதற்கிடையில் நவம்பர் மாதம் வந்துவிட்டால் ரொறன்ரோ முழுவதும் அஞ்சலிப் பாடல்கள் சோக மயமாக ஒலிக்கும்.

இந்தச் சத்தங்களுக்கு இடையில் மாண்டுபோனவர்களின் ஒற்றை ஆன்மா நம்மையெல்லாம் கெஞ்சியவாறு இடும் தீனக் குரல் கேட்கிறதா?

‘ஐயோ.. நீங்கள் செய்யிறதெல்லாம் சரிதான். ஆனா.. எங்கட போராட்டத்தில மொத்தம் எத்தனை பேர் செத்துப்போனனாங்கள் எண்டு சொல்லுற ஒரு நம்பகமான பட்டியல் உங்களிட்ட இருக்கா?”

(தொடரும்)

Print Friendly, PDF & Email