Spread the love

கனடா மூர்த்தி எழுதும் விமர்சனத் தொடர்…

தமிழர் தெருவிழாவில் வைத்து நண்பர் கேட்ட கேள்விக்கு (தொடர் 1) நான் என்ன பதில் சொல்வது?அவர் கேட்டது இதுதான்: ‘இவ்வளவு பணத்தைக்  போட்டு கனடியத் தமிழர் பேரவை Canadian Tamil Congress (CTC) ஒரு நிகழ்ச்சி செய்யுது.. இங்க இப்பிடி காச கொட்டுறதை விட இந்தக் காச ஊருக்கு அனுப்பி அங்க உள்ள முன்னாள் போராளியளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாந்தானே..”


ஈழ அரசியலும் கலந்திருக்கும் இந்தக் கேள்விக்கு என் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லலாம். ஆனால் அந்தப் பதில் இன்னும் பல விவாதங்களை தேவையில்லாமல் கிளப்பிக்கொண்டிருக்கும். ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல’ என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது. எனவே ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பதில் சொல்லும்போது குரலில் கொஞ்சம்  கடுமையையும் வரவைத்துக் கொண்டேன். 


இதுவே என் பதில்: ‘முன்னாள் போராளிகளுக்கும் கணவனை இழந்தவர்களுக்கும் அநாதைக் குழந்தைகளுக்கும் உதவுங்கோ உதவுங்கோ உதவுங்கோ என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் குறைந்த பட்சம் நாங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடியது என்ன? “உதவி செய் உதவி செய் உதவி செய் என்று யாரையும் பார்த்துக் கெஞ்சாதே” என்ற பதில்தான்! உனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அதுவும் கனடியத் தமிழர் பேரவை தான் உதவ வேண்டும் என்றும் நீ எதிர்பார்க்கிறாயா? குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் டொலரோ அல்லது ஒரு பத்தாயிரம் டொலரோ நீ கொண்டு வந்து கனடியத் தமிழர் பேரவை யிடம் கொடுத்துவிடு. உன்னைச் சார்ந்த மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டு. பிறகு கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதை பேரவையினரோடு இணைந்திருந்து அவதானி.. இணைந்திருந்து கேள்வி கேள். இதற்கெல்லாம் நீ பேரவையின் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. உதவிகள் சரியாகச் செல்வதை உறுதி செய்.. அதை மற்றவர்களிடமும் சொல்லு.. அதை விட்டுவிட்டு ‘CTC உதவவேண்டும்’ , ‘CTC உதவவேண்டும்’ என CTCயை நோக்கி கோசம் இட்டுக் கொண்டிருப்பது ஒருவகையான ஏமாற்று வேலை.

இந்த வகையறாக் கோஷம் இடுபவர்கள் உண்மையில் நாட்டுக்காக (இப்போது) ஒரு சதமும் தரப்போவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நிறையப்பேர் இந்த வெற்றுக் கோசம் இங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மாதிரியே நீங்கள்..?” என கேட்டேன். ஆள் எஸ்கேப்.


இந்தத் தெருவிழா என்ற நிகழ்வு கனடாவில் நடத்தப்படுவது! கனடாவின் தமிழ்ச் சமூகத்திற்கு இலாப நோக்கற்ற ஒரு பிரமாண்ட நிகழ்வு தேவை என்பதால் பணத்தைக் கொட்டிச் செய்யப்படுவது. கலை கலாச்சாரம் பண்பாட்டினை வளர்க்கவே இது செய்யப்படுவதாக CTC யினால் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டிய ஒரு குறிக்கோளும் இதற்கு இருப்பதாகவும் எனக்குப்படுகிறது. அது என்ன? “கனடாவிலிருக்கும் பிற சமூகத்தினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கும் சமூக நிலைப்பட்ட ஒற்றுமையைக் காட்டி தெருவிழா குறித்த பிரமிப்பையும் நல்லபிமானத்தையும் உருவாக்குவதற்கெனச் செய்யப்படுவதுதான் இந்த நிகழ்வு” என்பது எனது முடிபு. 


யோசித்துப் பாருங்கள். பிரதமர் ஆன பிற்பாடு சென்ற ஆண்டு ஜஸ்ரின் ட்ரூடோ தெருவிழாவிற்கு வந்தார். ஏன் வந்தார்? லிபரல் எம்பி. கரி ஆனந்த சங்கரி அழைத்ததால் மட்டும்தான் வந்தாரா? கிடையாது. கனடியத் தமிழர் பேரவை குறித்து, தமிழர் தெருவிழா குறித்து ஒரு நல்லபிப்பிராயம் பிரதமருக்கு ஏற்கனவே இருந்தபடியால்தான் வந்தார்! தமிழ்ச் சமூகம் ஒற்றுமையுடன் கூடும் விழாதான் இந்தத் தெருவிழா என்பது நன்கு தெரிந்தபடியால்தான் வந்தார். மக்களோடு மக்களாக கலந்து அனைவரையும் கவர்ந்தும் சென்றார்.


இதே ஜஸ்ரின் முதல்முறை தெருவிழாவிற்கு வந்து கொத்துரொட்டி போட்டு சிலம்பம் ஆடியபோது அவர் வெறும் வேட்பாளர். (அப்போது தனது கட்சியை ஆட்சிக்கு அமர்த்தும் ஆவலும் + தன் கட்சி வேட்பாளரான கரி ஆனந்தசங்கரிக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கும்.) ஆனால் இப்போது பிரதமர்! “வேற லெவல்.” சும்மா எங்கும் போக முடியாது. அதுவும் ஏராளமான மக்கள் கூடும் இடங்கள் என்றால் பாதுகாப்பு விதிமுறைகள் மாறுபடும். உளவுத் துறையினர்  உன்னித்துக் கவனிப்பர். “ஏராளமான மக்கள் கூடினாலும் தமிழ் கனேடியர்கள் மத்தியில் கனடாப் பிரதமர் பாதுகாப்பாக இருப்பார்” என்ற நம்பிக்கையை உளவுத்துறையினர் உறுதி செய்ததால்தான் கனடாப் பிரதமர் விழாவிற்கு வந்தார். நுங்கு குடித்தார்; இளநீர் குடித்தார்; மேடைக்கு வந்து தமிழ் மக்களை புகழோ புகழ் என்று புகழ்ந்து சென்றார். உண்மையில் கனடாப் பிரதமர்  வரவுக்கு யார் காரணம்? கனடிய தமிழர் பேரவை! ஆம். இன்னும் சுருக்கமாக விளக்கிச் சொன்னால் கனடியத் தமிழர் பேரவை மீதான நம்பிக்கைதான் அதற்குக் காரணம். 


கனடியத் தமிழர் பேரவை தமிழ் கனடியர்களைப் ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.  இது தமிழ்ச் சமூகத்தின் அடித்தள மக்களோடும் இணைந்திருக்கிறது – தமிழ்ச் சமூகத்தின் மேல்மட்டக் குழாமோடும் இணைந்து வேலை செய்கிறது.  பேரவையின் இந்த நிலைப்பாடு கனடிய அரசாங்க இயந்திரத்தின் பல்வேறு நிலைப்பட்ட நிர்வாகங்களுக்கும் தெரிந்திருக்கிறது. குறிப்பாக அது அமைப்பின் தொடர்ச்சியான நேர்மையான செயற்பாடுகளால் உருவாக்கப்பட்டது. அது சகலருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து தெரிய வைத்துக் கொண்டே இருக்க, அடித்தள மக்களுக்காகச் செய்யப்படுகின்ற ‘ஊர் ஒன்றுகூடல்’தான் இந்தத் தமிழர் தெருவிழா. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?


சரி.. இனி நிகழ்ச்சிக்கு வருவோம். இம்முறை தெருவிழாவில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கண்காட்சி இருந்தது. கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய காலகட்டம் வரை தமிழர் வரலாற்றின் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கண்காட்சி கண்காட்சிதான் அது. ஒரு தமிழ் வரலாற்றுக் கண்காட்சி இது. கிறிஸ்து பிறக்க நானூறு – ஐந்நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கண்காட்சியின் கதை ஆரம்பிக்கிறது. “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம்” என பழம் பெருமை பேசுவோம். ஆனால் அந்த ‘முதல் சங்கம்’, ‘இடைச்சங்கம்’, ‘கடைச்சங்கம்’ என்பன குறித்த பூரண விளக்கமோ அல்லது அந்தக் காலத்தின் தமிழ்ப் பிரபலங்கள் யார் என்பது  எமக்குத் தெரிவதில்லை. இது குறித்து – வரலாறு சார்ந்த விளக்கங்கங்களை – பல்கலைக்கழகத்தினர், தமிழ்ப் பண்டிதர்கள் தொகுத்துத் தந்தால் மட்டுமே ஏதோ விளக்கம் நமக்கும் கிடைக்கும். ஆனால் இந்தக் கண்காட்சியில் தமிழ் வரலாறு சகலருக்கும் புரியும் வகையில் ஒரே கால நேர வரிசையில் (Timeline ) பார்வைப் பயணமாகத் தொகுத்துத் தரப்பட்டிருந்தது.

இரண்டு வரிசையில் அதில் வரலாறு போகிறது. தமிழ்நிலைப்பட்ட விடயங்கள் – விளக்கங்கள் கி.மு. 400 வருடங்களுக்கு முன்பிருந்து ஒரு வரிசையில் ஆரம்பிக்க அதற்குச் சமாந்தரமாக மேலை நாடுகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களும் அதே கால நேர வரிசையில் Timeline தரப்பட்டிருந்தன. இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் உருவாக்கிய தமிழ் நிலைப்பட்ட கண்காட்சியாக எனக்கு அது இருந்தது.


அடுத்து நான் தனித்துக் குறிப்பிட விரும்புவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் அங்கு வைத்திருந்த சாவடி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாவில் இருந்து இயங்கும் உறுப்பினர்கள் பலரும் அங்கிருந்தார்கள். குறிப்பாக இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் இளைஞர்களையும் விஞ்சும் உற்சாகத்துடன் அங்கு ஒடி ஓடி இயங்கிக் கொண்டிருந்தார். ஸ்ரீலங்கா அரசிற்கு இன்னம் ஒரு தலையிடியாகவே தென்படும் நாடுகடந்த அரசாங்கத்தை தனது தெருவிழாவில் ஒரு சாவடிவடி அமைத்துக் கொள்ளவும் கொள்கை விளக்கமளிக்கவும் இடமளித்த கனடியத் தமிழர் பேரவையின் ஜனநாயகத் தமிழுணர்வுக்கு தனியாக ஒரு ஸல்யூட்.


இன்னொரு கண்காட்சி: யுத்த காலத்தின்போது ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கணிக்கும் விபரத் தொகுப்பு ஒன்றைப் பூரணப்படுத்தும் விபரச் சேகரிப்பு நிலையம்! அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் HRDAG  என்ற மனித உரிமைகள் அமைப்பும் அனைத்துலக உண்மை, நீதிக்கான செயற்திட்டம் (International Truth and Justice Project – ITJP) என இரு அமைப்புகள் இணைந்து தெருவிழாவிற்கு வந்து  “படுகொலை செய்யப்பட்டவர்களைக் கணக்கெடுத்தல்” ‘Counting the Dead’   என்ற தலைப்பிலான இந்த விபரச் சேகரிப்புத் திட்டத்தை  நடத்தியிருந்தன.  

ஜஸ்மின் சூக்கா


அந்தக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்ட விதம் குறித்து ஊடகம் சார் நண்பர் ஒருவர் கடுமையாகக் குறை கூறினார். அவர் சொல்லவந்ததில் இருந்த நியாயக் கருத்தில் எனக்கும் உடன்பாடு இருந்தது. அவரோடு சேர்ந்து நானும் கனடியத் தமிழர் பேரவையைக் குற்றம் சொல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தது.  
 CTC குறித்து என் மனக்குறை… அடுத்த கட்டுரையில்…  (தெருவிழாவிற்கு  வந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் உண்டு என்பதையுமறிக..) (தொடரும்.)

Print Friendly, PDF & Email