Entertainment

‘கூழாங்கல்’ – ஒஸ்காருக்குத் தெரிவாகிறது


ஒஸ்கார் 2022 திரைவிழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் படமாக ‘கூழாங்கல்’ தெரிவாகியிருக்கிறது.

முதல் முறை இயக்குனரான பி.எஸ்.வினோத்ராஜின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், றவுடி பிக்சர்ஸினால் வெளியிடப்படும் இப் படம் பல சர்வதேச திரைப்ப்டவிழாக்களிலும் பங்கேற்று, இவ்வருடம் றொட்டெர்டாம் திரைப்படவிழாவில் ‘ரைகர்’ விருதையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில், ‘ரைகர்’ விருதைப் பெறும் முதலாவது தமிழ்ப்படமென்ற புகழ் ‘கூழாங்கல்’ லைச் சேர்கிறது.

இப் படத்தில் அதிகமான காட்சிகள் மெளனமாகவே இருக்கின்றன. அதனால் subtitles அதிகம் தேவைப்படவில்லை. படத்தின் பெயரே கூழாங்கல்; நாகரீகத்தின் அலைகளில் தொலைந்துபோன ஒரு கூழாங்கல்லாக அக் குழந்தை இருக்கிறது. மெளனமே அங்கு மொழியாகவிருக்க முடியும்

ஷாகி என். கருண்

2022 இல் நடக்கவிருக்கும் ஒஸ்கார் விருது என அழைக்கப்படும் 94 ஆவது ‘அக்கடெமி எவார்ட்ஸ்’ நிகழ்விற்குபடங்களில் மலையாளப் படமான ‘நாயாட்டு’, யோகி பாபு நடித்த தமிழ்ப் படமான ‘மண்டேலா’, இந்திப்படமான ‘சர்தார் உதம்’ ஆகிய படங்கள் உள்ளிட்ட 14 படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

‘ஒஸ்கார்’ விழாவுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படத்தைத் தெரியவென நியமிக்கப்பட்ட யூரர் குழுவின் தலைவராக பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என். கருண் இருந்தார். இக்குழுவின் ஏகமனதான தெரிவான ‘கூழாங்கல்’ ஒஸ்கார் செல்வதாக இருக்கிறது.

இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்

மனிதத்தை அடிநாதமாகக் கொண்டது ‘கூழாங்கல்’

இப் படத்தைத் தெரிவு செய்த காரணம் பற்றி ஷாஜி கருண் தெரிவிக்கையில் ” ஒஸ்கார் விழா எனபது ஒரு ஒலிம்பிக் மாதிரி. அதில் போட்டியிடச் செல்லும் படங்கள் ஒப்பற்ற தரத்தில் இருக்க வேண்டும். பெரும்பாலான திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெறும்பலங்களைப் பார்த்தால் அவை எல்லாவற்றிலும் அடிநாதமாக இருக்கும் ஒரு பண்பு ‘மனிதம்’. அர்சியல் அல்லது ஒரு கலாச்சார அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படமொன்றைப் பார்வையிடும் தெரிவுக்குழுவினர் அக்குறிப்பிட்ட அரசியலிலோ அல்லது அக் கலாச்சார அம்சத்திலோ நாட்டம் இல்லாதவர்களாயின் அப் படத்தை அவர்கள் இலகுவாகக் கடந்துவிடுவார்கள். ஆனால் ‘மனிதம்’ எவ்வித பேதமுமின்றி சகலரது மனதையும் தொடக்கூடிய வல்லமையைக் கொண்டது.’கூழாங்கல்’ லில் அது இருக்கிறது. விடுதலை பெற்றதிலிருந்து மாற்றமடைந்துவரும் இந்தியாவின் யதார்த்தமான நிலையைச் சகல கலை வடிவங்களும் பிரதிபலிக்க வேண்டும். இப் படத்தில் அதிகமான காட்சிகள் மெளனமாகவே இருக்கின்றன. அதனால் subtitles அதிகம் தேவைப்படவில்லை. படத்தின் பெயரே கூழாங்கல். நாகரிகத்தின் அலைகளில் தொலைந்துபோன ஒரு கூழாங்கல்லாக அக் குழந்தை இருக்கிறது. மெளனமே அங்கு மொழியாகவிருக்க முடியும்” எனக் கூறினார்.‘கூழாங்கல்’ ஒரு சிதைந்த குடும்பம் பற்றியது. தாயின் நன்மைக்காக சிறுவனொருவன் தந்தையைக் கூட்டிவருவதுதான் கதையின் மூலம். இன்றைய சமுதாயத்தின் நிலையை இது எடுத்துக்காட்டுகிறது. நான்கு முக்கியமான பாத்திரங்கள். செல்லப்பாண்டி, கருத்தடையான் ஆகிய புதிய முகங்களைக்கொண்டு ‘தமிழ்நாட்டின்’ காணப்படாத பக்கங்களைக் காட்டுகிறது ‘கூழாங்கல்’. வழமையாக ‘வெள்ளைத் தோல்’ அழகிகளை இறக்குமதி செய்து படம் காட்டிப் பணம்பண்ணும் வியாபாரப் படங்களிலிருந்து தூர விலகி நிற்கிறது ‘கூழாங்கல்’. முழுக்க முழுக்க காட்சிகளால் மாத்திரமே கதை சொல்லப்படுகிறது. அதனால் மொழி தெரியாதவனுக்கும் subtitles இல்லாமலேயே கதை புரிந்துவிடும். வரண்ட நிலமும் எரிந்துபோன மனிதர்களும் வாழ்வுக்காக மட்டுமல்ல மன அமைதிக்காகவும் போராடும் ஒரு குடும்பத்தின் கதை. கல், காற்று, வெயில், வியர்வை, புழுதி எல்லாமே இங்கு பாத்திரங்கள் தான். தாகத்தைத் தீர்க்க கூழாங்கல்லைத் துடைத்துவிட்டுக் கொடுப்புக்குள் வைக்கும் அச் சிறுவனின் அற்புதமான நடிப்புக்காகவேநும் பார்க்கவேண்டிய படம்.

புதிய இயக்குனரானாலும் விக்னேஷ் சிவனிடம் காட்சியால் கதைசொல்லும் வித்தை கைவந்திருப்பது தெரிகிறது. ஒரு வகை creative genius. என்னவோ ஒரு மலையாளப்படத்தைப் பார்த்த அனுபவம். விஜய், ரஜினி படங்களிலிருந்து விடுதலை பெறும்வரை தமிழருக்கு விமோசனமில்லை என்னும் கருத்தை இன்னும் ஆழமாக்குகிறது ‘கூழாங்கல்’.