Columnsசிவதாசன்

கூலிக்கு மாரடித்தல்: ஜனநாயக கட்டமைப்பின் ஒரு அங்கம்

ஜனநாயகத்தின் காவலாளிகள் என தம்மைத் தாமே விதந்துரைப்பதுடன் இரண்டாம், மூன்றாம் உலக நாடுகளுக்கு வகுப்பெடுக்கும் ‘ முதலாம்’ உலக நாடுகளின் தலைவனான அமேரிக்காவிலிருந்து கிடைத்த ஒரு செய்தி இலங்கை சாராய மற்றும் தமிழ்நாட்டு பிரியாணி கூலிகளுக்கு மிகவும் தித்திப்பானது.

ஜனாதிபதி ட்றம்பர் வெள்ளை மாளிகையிலோ அல்லது மார்-எல்-லாகோ விடுமுறை மாளிகையிலோ வதியாது எங்காவது ‘ரவுண் ஹோல்’ சந்திப்புக்களைச் செய்வாராகில் அவரைச் சுற்றி ஒரு கொஞ்ச ‘கிராமப்புறத்தார்’ கொடிகள், பதாகைகளுடன் பற்காட்சி அருள்வார்கள். ட்றம்பர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்கள் கைகளாலோ, உடலலசைவுகளாலோ, கண்களாலோ அல்லது வாய்களினாலோ ‘ஆமா’ போடுவார்கள். காதில் வெடி விழுந்த பின்னரும் ட்றம்பர் அச்சம் ஏதுமின்றி சாமானியர்கள் புடைசூழ காட்சி தருவது எப்போதுமே ஆச்சரியம் தருவது. அச்சமில்லாது அவர் பவனி வருவதன் பின்னணிக்கான விடை இப்போதுதான் கிடைத்திருக்கிறது.


அடம் ஸ்வார்ட் என்பவர் அமெரிக்காவின் பிரபல மக்கள் தொடர்பு நிறுவனமொன்றின் முதன்மை நிர்வாகப் பணிப்பாளர். இவரது நிறுவனம் செய்யும் தொழில்களில் ஒன்று கூலிப் பார்வையாளரை / கை தட்டுபவரைத் திரட்டுவது. ‘Crowds on Demand’ எனும் பெயரில் 2012 முதல் இவர் நடத்தி வரும் நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ‘மக்கள் போராட்டங்களுக்கும்’, கோர்ப்பரேட் நிகழ்வுகளுக்கும் தேவையான வடிவங்களில் மனிதர்களை சப்ளை செய்கிறது. இவ்வுழைப்பிற்காக ‘இப் பொதுமக்களில்’ பெரும்பாலோருக்கு நாளூதியம் வழங்கப்படுகிறதென்றாலும் சிலர் வெவ்வேறு ‘சேவைகளையும்’ , தொடர்புகளையும், உதவிகலையும் பெறுவதற்காகவும் இக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

ஜூலை 15, 2025 அன்று அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான ‘ஃபொக்ஸ்’ நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஸ்வார்ட் தன்னுடைய தொழில் இரகசியங்களை வெளிப்படுத்தியிருந்தார். “Crowd on Demand கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாகத் தமது சமூக, அரசியல் சித்தாந்தங்களுக்கமைய, தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக வருபவர்களல்ல. இதர நாட் கூலித் தொழில்களுக்கு வழங்குவது போல அவர்களுக்கும் ஏற்ற ஊதியத்தை நான் வழங்குகிறேன். அது சட்ட விரோதமானதோ அற முரண்பாடு கொண்டதோ அல்ல. எனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர்களது உழைப்பை நான் பெறுகிறேன். அவ்வளவுதான்” என்கிறார் ஸ்வார்ட்.

“2020 இல் நாடெங்கும் நடைபெற்ற Black Lives Matter (BLM) ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த பல குடும்பப் பெண்கள் பலர் இனவாதத்திற்கு எதிராகவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காகவோ திரண்டு வந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அதே போன்று தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பலரும் தமது சங்க நிபந்தனைகளுக்கிணங்க ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்கிறார்களே தவிர தத்துவார்த்த ரீதியில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவல்ல” என மேலும் கூறுகிறார் ஸ்வார்ட்.

இழப்பு வீடுகளில் கூலிக்கு மாரடிக்கும் தொழில் பல்லாயிரமாண்டுகளாக நடைபெற்றுவருமொன்று. அரசியல்வாதிகளின் பின்னால் நின்று தலையாட்டுபவர்கள் முதல் தமது எஜமான்களுக்காகக் கூக்குரல் வைக்கும் ஊடகவியலாளர் வரை பரிணாம வளர்ச்சி பெற்ற இக் ‘கூலிக்கு மாரடித்தல்’ இப்போது public relations, marketing எனப் பலவகைகளிலும் வியாபாரமாகி ‘Rent-A-Crowd’, ‘Crowds on Demand’ எனப் பலவழிகலிலும் franchise operations ஆக வந்து நிற்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பிற்கு எதிரான ஒரு அரசியல் கட்சி தமக்காகக் கூலிக்கு மாரடிப்பவர்களை ஒழுங்கு செய்து தருமாறு $20 மில்லியன் தருவதாகக் கேட்டதாகவும் தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் ஸ்வார்ட் இந்த நேர்காணலிலின்போது தெரிவித்துள்ளார். தனது மறுப்பு கருத்தியல் காரணமானதல்ல எனவும் இவ்விடயத்தில் போதுமான மக்கள் பங்குபற்றாமல் விட்டால் தனது நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுவே முக்கிய காரணமெனவும் அவர் தெரிவித்தார். “பிரச்சினை என்னவென்றால் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் போன்றவர்கள் 2024 தேர்தலில் படுதோல்வியடைந்ததற்கும் அதன் பின்னர் ட்றம்ப் மீதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நிகழ்வுகள் நாளும் பொழுதும் தோல்விகண்டு வருவதற்கும் பின்னால் ஒரே நிறுவனம் தான் ‘மாரடிப்பவர்களை’ ஒழுங்கு செய்து வருகிறது” என்கிறார் ஸ்வார்ட்.

ஒவ்வொரு தடவையும் பைடன், ஹரிஸ், ட்றம்ப் என மேடையில் வந்து நிற்கும்போது பின்னால் வரிசையில் நிறுத்தப்பட்டு கைகளில் பதாகைகளுடன் இளித்துக்கொண்டு நிற்பவர்களைப் பார்க்கும்போது ‘இவர்களால் ஏப்படி இங்கு நிற்க முடிகிறது’ என்று யோசித்ததுண்டு. இப்போதுதான் புரிகிறது இவர்கள் எல்லோரும் நாட் கூலிகள் என்று. அதே வேளை கோட்டு சூட்டு மினுங்கல் துலுக்கல்களுடன் முன்சபையில் அடிக்கடி இருந்தும் எழுந்தும் கைதட்டல்களைத் தரும் மாதக் கூலி அரசியல்வாதிகளும் இதே ரகம் தான்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கட்சித் தொண்டர்கள் என்ற பெயர்களில் பார வண்டிகளிலும் பஸ், ரயில் வண்டிகளிலும் அடுக்கப்பட்டு அரசியல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள், வீடெரிப்புக்களுக்காகக் கொண்டுவந்திறக்கப்படும் கூலிகளும் இந்த crowd-on-demand வியாபார மாடலுக்குள்தான் அடங்குவர். இதையே ‘ஜனநாயகம்’, ‘மக்கள் விருப்பு’ என அரசியல் முதலாளிகள் சார்பில் ஊடகங்கள் இதர மகாஜனங்களுக்கு வகுப்பெடுத்து ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே மோசமான இனவாதி, ஏழைகளை வெறுப்பவர், முதலாளிகளின் செல்வர் ட்றம்பர் போன்றவர்களின் பின்னால் ஏனிந்த இலத்தீனோ பெண் மகிழ்ச்சியுடன் நிற்கிறாள் எனக் கண்களைக் கசக்க வேண்டாம். இனவாதம், சமத்துவம் என்பனவற்றுக்கப்பால் அவளது குழந்தைக்கு ஒரு கவளம் உணவைக் கொண்டுபோவதுவே அவளது நாட் தேவை. ட்றம்பர் யார் என்பது இப்போதைக்கு அவளுக்கு அவசியமல்ல. (Image Credit: New Jersey Mirror)