கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்!

Spread the love

ஜனவரி 26, 2020

பிறையாண்ட் கோபி மகள் ஜியன்னாவுடன்

எல்.ஏ.லேக்கர்ஸ் கூடைப்பந்து விளையாட்டுக்கழகத்தின் பிரபல ஆட்டக்காரரான 41 வயதுடைய கோபி பிறையாண்ட் இன்று ஹெலிகொப்டர் விமான விபத்தில் மரணமானார். இவ் விபத்தில் அவருடைய 13 வயது மகள் ஜியன்னா உட்பட மேலும் 9 பேர் மரணமடைந்துள்ளனரென அறியப்படுகிறது.

கலிபோர்ணியாவிலுள்ள தவுசண்ட் ஓக்ஸ் என்னுமிடத்திலுள்ள மம்பா அக்கடமியில் கூடைப்பந்தாட்டப் பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தபோதே மேற்படி விபத்து நடைபெற்றுள்ளது.

மிகுதி 9 பேரிலும் பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்த இன்னுமொருவரும் அவருடைய தந்தையும் அடங்குவர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொருங்கியதாக அறியப்படுகிறது.


20 வருடங்கள் அமெரிக்காவின் ‘நாஷனல் பாஸ்கெட்போல் அச்சொசியேசன்’ (NBA) அமைப்பின் கீழ் 1346 ஆட்டங்களை ஆடியிருந்த கோபி 5 தடவைகள் தான் விளையாடிய அணியான லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கழகத்துக்கு NBA வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

கோபி பிறையாண்டுக்கு இறந்த ஜியான்னாவை விட மேலும் மூன்று பிள்ளைகள் உண்டு. மனைவிக்கு வனெஸ்ஸா லெய்ன் என்பது பெயர்.

இறந்த ஜியன்னாவையும் ஒரு கூடைப்பந்தாட்ட வீராங்கனையாக ஆக்கவேண்டும் என்ற கனவுடன் அவளைத் தான் செல்லும் விளையாட்டுக்களுக்கு எப்போதும் அழைத்துச் சென்று ஆட்டத்தின் நுணுக்கங்களைப் பற்றி அவளுக்குச் சொல்லிக்கொடுப்பாராம்.

மத்திய பாடசாலை மாணவர்களுக்கு சீன மொழியையும், கலாச்சாரத்தையும் கற்பிக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு அவரது தர்ம ஸ்தாபனமான ‘கோபி பிறையாண்ட் பவுண்டேசன்’ மூலம் பல முயற்சிகளையும் எடுத்து வந்தார்.

கனவு பாதியில் குழம்பி விட்டது.

Print Friendly, PDF & Email
Related:  ஒலிம்பிக்ஸ் 2020 பின்போடப்பட்டது!

Leave a Reply

>/center>