Arts & EntertainmentIndia

குஷ்பூ சேரியில் குழப்பம்

‘பத்த வைச்சிட்டையே பரட்டை’ என்று ரஜினி ஸ்டைலில் நாலு பேர் மன்சூர் அலிகானைத் திட்டினால் அதற்கு அவர் பொறுப்பேற்கத்தான் வேண்டும். பாவம் குஷ்பு சேரி எரிகிறது. தீயை அணைக்காமல் தளபதி கோட்டைக்குள் முடங்கிக்கொண்டு விட்டார்.

லியோ திரைப்படத்தில் திரிஷாவில் மையல் கொண்ட மன்சூர் அலிகான் படுக்கையறைக் காட்சியில் நடித்தாவது மோகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தது கைகூடாமையால் வாயால் ‘பத்த வைச்சது’ இப்போ குஷ்பு சேரியை விழுங்கிக்கொண்டிருக்கிறது.

மன்சூர் அலிகான் திரிஷாவுடன் படுக்கையறைக் காட்சியில் நடிக்க முடியவில்லையே எனப் பொதுவெளியில் புழுங்கித் தள்ளியது கேட்டு பெண்ணுலகத்தில் பொறி பறக்கத் தொடங்கியது. திரிஷா நாகரிகமாகத் தனது கவலையைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் சின்மயி, குஷ்பூ போன்ற புரட்சித் தோழிகள் திரிஷாவுக்காக மாரடிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணாதிக்க இந்தியாவில் இவர்களது ஓலங்கள் இலகுவாகப் புதைக்கப்படுமென்பதை கவிப்பேரரசர் மூலம் சின்மயி போன்றோர் உணர்ந்திருக்க வேண்டும். மன்சூர் அலிகான் ஒரு தி.மு.க. ஆதரவாளர் என்பதற்காகவோ அல்லது குஷ்பூ சங்கிகள் சேரியைச் சேர்ந்தவர் என்பதற்காகவோ ‘தொண்டர்கள்’ சமூக வலைத் தளங்களைச் சூடேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

குஷ்பூவிற்கு பதிலளிக்கும் பாணியில் சண்முகம் சின்னராஜ் என்ற ஊடகப் போராளி தனது X பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

இதற்குப் பதிலாக குஷ்பூ பின்வரும் பதிவினை இட்டிருந்தார்:

கிழிஞ்சுது போ. உடனே திராவிடர் கூடம் பொங்கியெழுத்துவிட்டது. “சேரி” ப் பாஷை என்று குஷ்பூ சொன்னது கூடத்தின் படக் கூடாத இடத்தில் பட்டுவிட்டது. திரிஷாவும் மன்சூர் அலிகானும் கூடவே தளபதியும் தப்பிக்கொண்டுவிட்டார்கள். சேரி மக்களை குஷ்பூ இழிவுபடுத்தி விட்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. உண்மையில் சண்முகம் சின்னராஜ் என்பவரின் பதிவு அடி மட்டத் தூஷணம் தான். இரண்டாம் மொழியாகத் தமிழைப் பேசும் குஷ்பூவிற்குக்கூட அது புரிந்துவிட்டது ஆனால் கூடத்தின் புதல்வர்களுக்கு அது புரியவில்லை. அதுவல்ல இங்கு முக்கியம். சேரி என்றால் என்ன என்பது பற்றி இரண்டு பகுதியினருக்குமே தெரியாமல் போய்விட்டது என்பதுதான் பிரச்சினை.

சேரி என்பது குறிப்பிட்ட மக்கள் குழுமம் வாழ்கின்ற இடங்களை அடையாளப்படுத்தும் சொல். அது எந்த வகையிலும் இழிவான சொல்லாகச் சங்க காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்திலிருந்து நல்லூர் ராஜதானி வரை அரசர்கள் அல்லது நகராட்சியினர் வதியும் இடங்களைச் சுற்றி கம்மாளர் சேரி, மள்ளர் சேரி என்பது போன்ற தொழில் வாரியான மக்கட் கூட்டங்கள் வாழ்வதற்கென கோட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தூங்கா நகரம் மதுரையில், காவிரிப்பூம் பட்டினத் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில், யவனர்கள் (கிரேக்கர்கள்) வாழ்ந்த இடங்கள் யவனர் சேரிகள் என அழைக்கப்பட்டன. இப்போது கூட உலகம் முழுவதும் சீனர்கள் வாழும் இடங்கள் (Chinatown) என்றே அழைகப்படுகின்றன. அதற்காக ஸ்காபரோவில் தமிழர் வாழும் ஸ்ரெய்ன்ஸ் பகுதியை தமிழர் சேரி என அழைக்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. மொத்தத்தில் சேரி என்னும் சொல் ஒரு இழிவான சொல்லே அல்ல. ஆனால் அதை விளங்கிகொள்ளும் தகைமை இரண்டாம் மொழிக்காரியான குஷ்பூவிற்கு இருக்கமுடியாது தான் ஆனால் கூடக் காரருக்கு?

குஷ்பூ சங்கிகள் சேரிக்குப் போகாமல் திராவிடர் சேரியில் இருந்திருந்தால் அவர் மீது வசை மாரி மொழிந்திருக்குமோ தெரியாது. என்னவோ குஷ்பூ கண்ணகியாக மாறினாலும் மதுரை ஒருபோதும் எரியாது என்று சிலர் நினைக்கலாம். ஒரு காலத்தில் கோவிலுக்குள் குடிவைத்துக் கும்பிட்ட தெய்வம் அது. எதுவும் நடக்கலாம்.