குவைத் | 8 இலட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படலாம்
வெளிநாட்டுப் பணியாளர்களை, 70 இலிருந்து 30% மாகக் குறைக்க அரசு தீர்மானம்
குவைத் ஜூலை 06, 2020: குவைத்தில் தங்கிப் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டின் தேசிய சபையில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாகும் பட்சத்தில் அங்கு பணிபுரியும் 8 இலட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும் சாத்தியம் உள்ளது.
கோவிட்–19 இற்குப் பின்னரான உலக மீளொழுங்கில் பெரும்பான்மையான நாடுகள், மனித வளமுட்படச் சுய மூலவளங்களில் தங்கியிருத்தலுக்கான நகர்வுகளை ஆரம்பித்து வருகின்றன. குவைத் நாட்டின் சனத்தொகையில் 70% வெளிநாட்டவர்; பணியாட்களில் 84% வெளிநாட்டவர்; தனியார் துறைப் பணியாளரில் 94% வெளிநாட்டவர். இவர்களில் பெரும்பாலோர் கடைகளிலும், வீட்டு வேலைக்காரர்களாகவும் பணி புரிகிறார்கள். 2019 இல் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையின்படி 960,000 இந்தியர்கள் இங்கு பணி புரிகிறார்கள். 2017 தரவின்படி வருடமொன்றுக்கு US$ 4.68 பில்லியன் பணம் இங்கு வாழும் இந்தியர்களால் அனுப்பப்படுகிறது.
முன்மொழியப்பட்ட இச் சட்டமூலத்தின்படி, குவைத் நாட்டின் சனத்தொகையின் 15% த்துக்கு, இந்தியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குவைத்தின் வெளிநாட்டார் சனத்தொகையை 30% த்துக்கு குறைக்கவேண்டுமென அந்நாட்டின் பிரதமர் இந்த மாதம் தெரிவித்திருந்ததற்கு அமைய இம் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
கோவிட்-19 நோய்ப்பரவல் ஆரம்பித்ததன் பின்னர் குவைத்தில் வெளிநாட்டவருக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, குவைத்தில் 49,000 கொறோணாவைரஸ் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் 4.8 மில்லியன் சனத்தொகையில், 3.4 மில்லியன் வெளிநாட்டார் என உள்நாட்டுச் செய்தி ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன.