Sri Lanka

குருந்தூர்மலை விவகாரம்: இனப்பிரச்சினை வெடிக்கலாமென இந்திய புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழர்கள் பொங்கல் நிகழ்வு செய்வதை இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் துணையோடு தடுத்த தென்னிலங்கை புத்த பிக்குக்ள மற்றும் சிங்கள மக்கள் இப்பிரதேசத்தில் தமிழ் – சிங்கள மக்களிடையே இன மோதல்கள் உருவாகுவதற்குக் காரணமாக அமைய வாய்ப்புகளுண்டு என இந்திய புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து அதீத விழிப்புடன் இருக்கும்படியும் உள்ளூர் அரசியல் கட்சிகள், பெளத்த, இந்து செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கும் படியும் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் 2019 தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற இனமோதல்களையும் மீறக்கூடிய அளவில் அவை இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்ற வெள்ளி முதல் தென்னிலங்கையிலிருந்து புத்த பிக்குகளும் பொதுமக்களும் குருந்தூர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அங்கு ஏற்கெனவே பொங்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வரும் இந்துக்களைக் குழப்புவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதென்றும் இதனால் இரண்டு இனங்களிடையேயும் மோதல்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகி வருகிறதென்றும் கூறப்படுகிறது.