“குருந்தூர்மலை விகாரையைக் கட்டியே தீருவேன்” – பா.உ. சரத் வீரசேகரா சபதம்!

நீதிமன்ற ஆணையை மீறி கட்டுமானம் தொடர்கிறது

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் கட்டப்பட்டுவரும் சட்டவிரோத புத்த விகாரயை எவ்விதத்திலும் கட்டி முடிப்பேன் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரா சபதம் எடுத்துள்ளார். இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது சிங்களத் தேசியவாதியும் இனத்துவேஷியுமான வீரசேகரா இதைத் தெரிவித்தார்.

தமிழ்மக்களுக்குச் சொந்தமான இந்நிலத்தில் புத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்து வருகிறாகள். சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்ததன் காரணமாக கட்டுமானத்தை நிறுத்தும்படி முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருந்தது. அதையும் மீறி இக்கட்டுமானத்தை தொடரப்போவதாக புத்த குருமார்களும் சிங்களத் தீவிரவாதிகளும் சூளுரைத்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக தண்ணிமுறிப்பு பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்த தமிழ் மக்களை காவல்துறையினர் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர் எனத் தெரிகிறது. (தமிழ் கார்டியன்)