குமாரபுரம் படுகொலைகள் – 25 வருடங்கள்


இலங்கைத் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளில் இதுவுமொன்று.

குமாரபுரம் படுகொலை அல்லது 1996 திருகோணமலைப் படுகொலை அல்லது 1996 கிளிவெட்டிப் படுகொலை என அழைக்கப்படும் இப் படுகொலை நடைபெற்று 25 வருடங்களாகின்றன.

பெப்ரவரி 11, 1996 அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்டன இப் படுகொலைகள்.

9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் அன்று படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர். 1995 ஏப்ரல் மாதத்தில் ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாகியதை அடுத்து இடம்பெற்ற மிக மோசமான தமிழ்மக்கள் படுகொலை இதுவாகும்.

இப்படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசு இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பலரைக் கைது செய்து, 2004 ஆம் ஆண்டில் விசாரணைகளை ஆரம்பித்தது. 2016 ஜூலை 27 இல் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 இராணுவத்தினரையும் நீதிமன்றம் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

படுகொலை செய்யப்பட்டவர்கள்

கொலைசெய்யப்பட்டவர்கள்

இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோர் விபரங்கள் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது: சி. சிவ­ராஜா (70), கி. கோவிந்தன் (72), சி. சின்­னத்­துரை (58), வ. நட­ராஜா (22), சு.லட்­சுமி (35), சு. கம­லா­தேவி (35), சு. பரமேஸ் (30), ச. பாக்­கியம் (29), வள்­ளிப்­பிள்ளை (28), செ. பாக்­கியம் (26), ஆ. அன்­னம்மா (25), து. கரு­ணா­கரன் (15), சு. தன­லடசுமி (15), க. சுவா­தி­ராஜா (15), வி. சுதா­கரன் (14), ரா. கம­லேஸ்­வரி (13), த.கலா (12), ச. நிஷாந்தன் (11), சு. பிர­பா­கரன் (11), தீ. பத்­மினி (09), சி. பிரசாந்தினி (06), பா. வசந்­தினி (06), சு. சுபா­சினி (03) ஆகி­யோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

இலங்கை அரசு விசாரணைகள்

மூதூர் – குமா­ர­புரம் வாசிகள் 24 பேரின் படுகொலை தொடர்பான நீதி­மன்ற விசா­ரணை 2013 ஜூலை 17, 18, 19 ஆம் நாட்களில் அனுராதபுரம் நீதி­மன்றில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்பதாக படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு நீதி­மன்­றினால் அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டது. ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போர்ச் சூழலில் எதிரிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்த வழக்கு விசாரணைகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. 2016 ஜூலை 27 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் விடுதலை செய்தார்.

இதில் கொலை செய்யப்பட்டவர்களதும், காயப்பட்டவர்களினதும் பெயர்கள் சரியானவையா எனச் சரிபார்க்க முடியவில்லை. தவறு இருந்தால் உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம் – ஆசிரியர், மறுமொழி

நன்றி: விக்கிபீடியா, Groundviews