எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோயப்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டமூதூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலி கான் தனியாளாகப் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையம் அவரது போட்டியை உறுதி செய்துள்ளது.
“தலைவர்களும் இதர அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டார்கள்; அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஒருபோதும் காப்பாற்றுவதில்லை” எனக்கூறும் அலி கான் ஏனைய ரசியல்வாதிகளைப் போலல்லாது மக்களோடு கலந்துறவாடிப் பேசி அவர்களது குறைகளை அறிந்துகொள்கிறார்.
வெள்ளியன்று அவர் தொண்டமூதூர் காந்தி பூங்காவில் தனது வழமையான தேகாப்பியாசத்தைச் செய்ததோடு அங்கு கரபந்தாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடியார்; நடையில் ஈடுபட்டுளோருடன் நடந்து பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுடன் சுய படங்கள் எடுத்து குதூகலப்படுத்தினார். சனியன்று பெரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உத்தியோகபூர்வமாகத் தனது தேர்தல் பரப்புரைரையை ஆரம்பித்த அவர் அங்குள்ள கடைக்காரர்களுடன் அளவளாவி மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்தார்.
அதன் பிறகு அவர் அங்கு நிரம்பிய நிலையில் இருந்த குப்பைக் கிடங்கொன்றின் அருகே இருந்து நாயொன்றுடன் விளையாடிப் பொழுதைக் கழித்தார். ஒரு குறிப்புப் புத்தகத்தில் மக்களது குறைகளைக் குறித்துவைத்துக்கொண்டார். தான் சட்டமன்றத்துக்குத் தெரிவாகினால் அக் குறைகளைத் தீர்த்துவைப்பதாக அவர் வாக்குறுதியளித்தார்.
தொண்டமூதுரின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த மாநகராட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியாவார். இந்தத் தடவை அவரோடு தி.மு.க. சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும் தனியாளாக மன்சூர் அலி கானும் போட்டியிடுகின்றனர்.