Health

‘குடிலின்’ கதை: உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இடம்பெறும் யாழ்ப்பாண உளவள மறுவாழ்வு இல்லம்

மனநல சிகிச்சையில் பல படிநிலைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் மனநல மருத்துவர்களோ அல்லது மருத்துவ மனைகளோ தீர்வாகாது. இவ்வெவ்வேறு படிநிலைகளில் ஏதோ ஒரு காலகட்டத்தில் குடும்பம், சமூகம், சூழல் அனைத்தினதும் பங்கு அத்தியாவசியமாகிறது. போர்க்கால வடக்கு கிழக்கு பல்வேறு உளநோய்களின் வெளிப்பாடுகளைக் கண்டது. இதனை எதிர்கொள்ள சமூகம் தயாராக இருக்கவில்லை. சமூக அக்கறையும் நல்மனமும் கொண்ட சில தனிப்பட்டவர்களும் புலம் பெயர் அமைப்புகளும் தாமாக முன்வந்து பரிகார முயற்சிகளில் ஈடுபட்டன. இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ். சிவயோகன் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர். மனநல சிகிச்சை விடயங்களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் போதாமையை நேரில் கண்ட அவரது யோசனையில் உதித்ததே ‘குடில்’.

‘குடில்’ என்பது ஒரு எளிமையான வீடு என்ற கருத்தே எமது மனங்களில் தோன்றும். ஆனால் இதன் கருத்துருவாக்கத்தின் பின்னால் டாக்டர் சிவயோகன் போன்றோரது கடுமையான உழைப்பு இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

யதார்த்தத்திலிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் ( detachment from reality) தன்மை மனநலம் பாதிப்போருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு குணாதிசயம். இவர்கள் மனவள ஆலோசனைகள் மூலமும், மருந்துகள் மூலமும் சிகிச்சையளிக்கப்பட்டாலும் விடுபட்ட சமூகத்தோடு மீண்டும் இணைந்துகொள்வதில் பல சிரமங்கள் உள்ளன. சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவது முதல் பாதிப்புற்றோரின் உள்ளார்ந்த தயக்கம் வரை இம்மீளிணைப்புக்கு தடைகளாக இருக்கின்றன. இதைப் புரிந்துகொண்ட டாக்டர் சிவயோகன் போன்றோர் பாதிப்புற்றவர்கள் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வெளியேறியதும் உடனடியாக சமூகத்தில் இணைந்துகொள்ளாமல் ஒரு இடைத்தங்கு நிலையத்தில் வைத்து அவர்களை மறுவாழ்வுக்கான தயார்நிலைக்கு மாற்றி அவர்கள் இயல்புநிலையை எய்தியதும் சமூகத்துடன் மீளிணைக்கும் வகையில் உருவாக்கிய உத்தியே ‘குடில்’. இயற்கையான சூழலில் எளிமையான வாழ்வொன்றுக்குத் தயார் செய்யும் இவ்விடம் இன்னுமொரு மருத்துவ நிலையம் போல் மிரட்டும் (intimidating) தோற்றத்தில் இல்லாது நம் முன்னோருக்குப் பரிச்சயமான ‘குடில்’ ஆக இருக்கவேண்டுமென்பது டாக்டர் சிவயோகன் போன்றோரது அவா.

Dr.எஸ்.சிவயோகன்

இக்கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடாக உருவாகிய ‘குடிலை’ க் கட்டித்தர நல்மனமுல்ள ஒரு தனிக் குடும்பத்தினர் முன்வந்தமை மிகவும் எளிதாகப் போய்விட்டது. இக்குடும்பத்தின் கொடையைக் ‘குடிலாக’ மாற்றித் தந்த பெருமை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு நீண்ட காலமாக இலங்கையிலும் வேறு பல உலக நாடுகளிலும் மருத்துவ, சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பையே (IMHO USA) சாரும்.

தன் பணிகளை ஏற்கெனவே செயற்படுத்தி வரும் ‘குடில் ‘ பற்றிய செய்தி உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) மட்டும் எட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருவது. மனநலம் பாதிக்கப்பட்டோரை நிறுவன நீக்கல் செய்வது (Deinstitutionalization of People with Mental Health Conditions) என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 16, 17 மற்றும் 65 ஆவது பக்கங்களில் ‘குடில்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குடில்’ திட்டம் பற்றி மனநல மருத்துவர் டாக்டர் எஸ்.சிவயோகன் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இங்கே:

முக்கியமான பல மனநோய்கள் அவற்றின் நேரடி அறிகுறிகளையும் தாண்டி அவர்களது திருப்தியான வாழ்வைப் பாதிக்கின்றன. தமது சொந்த சுகாதாரச் செயன்முறைகளைக் கவனிக்கத் தவறுவதிலிருந்து இயல்பற்ற சமூக ஊடாடல்களை மேற்கொள்வது வரை இவர்களது குறைபாடுகள் பல வகைகளிலும் வெளிப்படுகின்றன. இவை சமூகப் பரிவை ஒதுக்கவும் சமூகத்திலிருந்து ஒதுங்கிக்கொள்லவும் காரணமாகி திருப்தியற்ற சுயவாழ்வை நோக்கித் தள்ளிவிட ஏதுவாகின்றன.

பரிந்துரைக்கப்படும் மருந்துகள் கடுமையான சில மனநோய்களிலிருந்து நிவாரணம் தருவதோடு நோயாளிகள் சில ஆபத்தான தேர்வுகளைத் தெரிவுசெய்வதினின்றும் அவர்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இருந்தாலும் நோயின் வளர்ச்சியை முற்றாகக் கட்டுப்படுத்துவதில் மருந்துகளுக்குள்ள வினைத்திறன் இன்னும் போதாததாகவே இருக்கிறது. இந்நிலையில் இயல்புநிலையை எய்துமட்டும் நோயாளிக்கான மறுவாழ்வுச் சிகிச்சை அவசியமென்பதை இன்றைய உளமருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. நோயாளிகள் நோய்க்கு முன்பான நிலைக்கோ அல்லது அதற்கு இணையானதொரு நிலைக்கோ செல்வதற்கு ஏற்ற வகையில் மறுவழ்வுச் சிகிச்சை முறைகள் செயற்படுத்தப்படுகின்றன.

சுயமான பராமரிப்பு (self care), சிறிய அளவிலான வீட்டு வேலைகளைச் செய்தல், திட்டங்களை ஒழுங்கமைத்தல், இலக்கு நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்தல், பயிற்சிப் பட்டறைகளை மேற்கொள்தல், உடல், மனப் பயிற்சிகளை மேற்கொள்தல், உணவு தயாரித்தல், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வாழ்வாதாரத்திற்கான சம்பாத்தியத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் ஆகியனவற்றின் மூலம் சுதந்திரமான வாழ்வொன்றுக்கு நோயாளி ஒருவரைத் தயார் செய்யும் முயற்சியை வீட்டை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுச் சிகிச்சை மூலம் நடைமுறைப்படுத்துவதே ‘குடில்’ போன்ற இடைத்தங்கு நிலையங்களின் நோக்கம்.

மனநோயாளிகளை இயலுமான காலத்திற்கு இடைத்தங்கு நிலையங்களில் வைத்துப் பராமரிக்கும் நடைமுறை யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் தொடங்கியது. இருப்பினும் முதலாவது இடைத்தங்கு நிலையத்தின் செயற்பாடு உலக மனநல நாளான அக்டோபர் 10, 2007 இல் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘குடில்’ (The Hut) என்ற பெயரில் “வாழ்வுக்கான படலை” (The Gateway to Life) என்ற சுலோகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இம்முயற்சிக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO), அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA), தெல்லிப்பளை மருத்துவ சேவைகள் (MHS) ஆகியவற்றின் அனுசரணை வழங்கியிருந்தன.

‘குடிலின்’ மாதிரி அமைப்பு தனித்துவமானது. மருத்துவ மனையிலிருந்து ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட குடிமனைகளால் சூழப்பட்டு அமைந்திருக்கிறது ‘குடில்’. இதன் மூலம் நோயாளிகள் இதர சமூகத்தினருடன் ஊடாடல்களை இலகுவாக மேற்கொள்ள முடியும்,ஒரு நேரத்தில் 6 ஆண் நோயாளிகளும் 6 பெண் நோயாளிகளும் 12 பணியாளர்களினால் பாராமரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு முகாமையாளர் என ஒழுங்குசெய்யப்பட்டு 6 மாதங்கள் சிகிச்சையளிப்பட்டது. சில வேளைகளில் சில நோயாளிகள் 4 முதல் 8 மாதங்கள் வரை தங்குவர். ‘குடில்’ மூலம் மறுவாழ்வு பெற்ற பல நோயாளிகள் வெற்றிகரமாகத் தமது வாழ்வைத் தொடர்கின்றனர் என்பது மகிழ்ச்சி.

இந்த பரீட்சார்த்த இடைத்தங்கு மறுவாழ்வு மையத்தின் சேவைகள் இலங்கையில் பல மருத்துவ நிபுணர்கள் மத்தியில் பிரபலமாகியது. உலக சுகாதார நிறுவனமும் (WHO), அனைத்துலக மருத்துவ நல அமைப்பும் (IMHO USA) ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கின. 2017 இல் ‘குடில்’ தனது 10 வருட நிறைவைக் கொண்டாடியது.

வழக்கம்போலவே இடைத்தங்கு மறுவாழ்வு இல்லத்தின் சேவைகளும் பல சவால்களை எதிர்கொண்டன. பணியாளர்களைத் தக்க வைத்தல், அவர்களுடைய மனவுறுதியைப் பேணுதல், இலகுவில் களைப்புறுதலிலிருந்து அவர்களைப் பேணுதல் போன்றவையே மிகுந்த சவால்களாக இருந்தன. இவற்றைச் சமாளிக்க நாம் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருந்தது. அதைத் தொடர்ந்து இடைத்தங்கலுக்காக பொருத்தமான வீடுகளை வாடகைக்கு எடுப்பது சிரமமாக இருந்தது. போருக்குப் பின்னான அபிவிருத்திகள் காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் ஆகியனவற்றினால் இது மேலும் சவால்களை எதிர்கொண்டது. இதனால் பணியாளர்களும், நாங்களும் நிரந்தரமான சில குடியிருப்புக்களைச் சொந்தமாகப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற எண்ணத்தை நோக்கித் தள்ளப்பட்டோம்.

2018 இல் ஒரு ஓய்வு பெற்ற மனநல மருத்துவரும், ஓய்வு பெற்ற உணர்விழப்பு மருத்துவருமான அவருடைய கணவரும் எமது மறுவாழ்வு இல்லத்திற்கு வர நேர்ந்தது. எமது இல்லத்திற்கு ஒரு நிரந்தர இடமொன்றின் தேவை பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் எந்தவித தயக்கமுமில்லாது அதற்கான காணியை வாங்கித் தருவதற்கு இணங்கினர். அவர்களின் உதவியுடன் 2019 இன் ஆரம்பத்தில் மறுவாழ்வு இல்லத்துக்கான ஒரு நிலம் வாங்கப்பட்டு மறுவாழ்வு இல்லம் அமைப்பதற்கென சுகாதார திணைக்களத்திற்குத் தானமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மையத்திற்கான கட்டிடத்தைக் கட்டுவதற்கான பணத்தை எப்படிப் பெறப்போகிறோம் என நாங்கள் அங்கலாய்த்து இறுதியில் தான தருமம் செய்ய விரும்பும் நல்லுள்ளங்களிடம் உதவி கேட்டு இறைஞ்சினோம். வழக்கம் போலவே அனைத்துலக மருத்துவ நல அமைப்பு எமது வேண்டுகோளைத் தமது கொடையாளர்களிடம் முன்வைக்க ஒரு குடும்பம் எம்மைத் தொடர்புகொண்டு எம்மை நேரே வந்து சந்தித்து அவர்களின் பெற்றோரின் ஞாபகார்த்தமாக கட்டிடத்திற்குச் செலவாகும் பணத்தைத் தானமாகத் தந்தார்கள். ஆண்டவன் கிருபையால் எல்லாமே விரைவில் கைகூடியது.

இதைத் தொடர்ந்து நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னேறின. ஒரு இளம் கட்டிடக் கலைஞர் கட்டிடத்துக்கான வடிவமைப்பைச் செய்து உதவினார். பணியாளர்கள் அறைகளுடன் கூடிய ஒரு அலுவலகம், இரண்டு ஓர் மாடி வீடுகள், இரண்டு இரட்டை மாடி வீடுகள் என குறைந்தது 18 நோயாளிகளைப் பராமரிக்கக்கூடிய ஒரு இல்லத்துக்கான வடிவமைப்பு எமக்குக் கிடைத்தது. இதைவிட பசுமையான மரங்கள் செடிகளுடன் இயற்கையான சூழலைத் தரவல்ல சுற்றுப்புறமும் இப்பணிமனைக்கு அமைந்தது. மாகாண சட்ட திட்டங்களுக்கு அமைய இக்கட்டிட உருவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (லங்கா) ( IMHO USA (Lanka)) மற்றும் வட மாகாணசபை ஆகியவற்றிடையே பெப்ரவரி 2020 இல் கைச்சாத்திடப்பட்டது. மார்ச்சில் ஆரம்பமாகவிருந்த அடித்தள வேலைகள் கோவிட்-19 இன் காரணமாகப் பின்போடப்பட்டுப் பின் ஜூலை முதல் வாரம் கட்டுமானம் வேலைகள் ஆரம்பமாயின.

ஊரே சேர்ந்து தேரிழுத்தது. சகல தரப்பிலுமிருந்து தாராள மனங்களும் ஏராளம் உதவிகளும் ஒன்றிணைந்து ‘குடிலை’ ச் சாத்தியமாக்கின. ஒரு தசாப்த உழைப்பாலும் வியர்வையாலும் உரம் கொடுத்த ‘குடிலின்’ குடிமக்களாக இதுவரை 400 நோயாளிகளும் அவர்களது உறவுகளும் கடந்து போயிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும் ‘குடிலின்’ குடிமக்களை நோயாளிகள் என்று அழைப்பது தவறு. அவர்கள் எல்லோரும் இங்கு சமமான மனிதர்களாவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் இங்கு தங்கிப் பலன்பெறும் வேளைகளில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தங்கிப் போக வசதியளிக்கிறது ‘குடில்’. அந்த வகையில் இது முதன் மாதிரி. உலகில் வேறெங்கும் இப்படியான மறுவாழ்வு இல்லத்தைக் காணமுடியாது என்பதே பெரும் செய்தி.