India

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), 2019 நடைமுறைப்படுத்தப்படக்கூடாது – தளபதி விஜய்யின் முதலாவது அரசியல் அறிக்கை

கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தேசிய அரசியல் குறித்து அதன் தலைவர் ‘தளபதி’ விஜய் தனது முதலாவது அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் நான்கு வருடங்களுக்கு முன்னர் பா.ஜ.க அரசினால் நிறைவேற்றப்பட்டு இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 ஐ நடைமுறைப்படுத்த மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதை முன்னிட்டே ‘தளபதி’ விஜய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து, டிசம்பர் 31, 2014 இற்கு முன்னர், அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்படவேண்டும் என்கிறது இச்சட்டம். இலங்கைத் தமிழர்கள் மீது இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. விஜய் யினால் தமிழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “சகல இன, மத மக்களும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் இப்படியான சட்டம் தேவையற்றது. இச்சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக் கூறுகையில், “மிகவும் சர்ச்சைக்குரிய இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுவதன் மூலம் பிரதமர் மோடி தனது ‘அமிழும் கப்பலைக்’ காப்பாற்ற முயற்சிக்கிறார். இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து வாக்குத் தேட முனையும் ஒரு முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.

“மனிதத்திற்கே ஒளி விளக்காக இருந்த நாட்டை இனம், மதம் என்னும் பாகுபாடுகளை முதன்மைப்படுத்தும் நாடாக மாற்றும் ஒரு கருவியாக இச்சட்டம் இருக்கப்போகிறது. இதன் மூலம் முஸ்லிம்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் பாரிய துரோகமிழைக்கப்படுவதுமல்லாது பிரிவுகளைத் தூண்டுவதற்கான விதைகளும் தூவப்படுகிறது. தி.மு.க. போன்ற கட்சிகளின் அதீத எதிர்ப்பின் மத்தியிலும் அ.இ.அ.தி.மு.க. போன்ற கைக்கூலிகளின் உதவியினால் தான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது” என மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.