குடியுரிமைத் திருத்தச்சட்டம்: இலங்கைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் தவிர்ப்பது பாரபட்சம் காட்டுவதாகும் – தி.மு.க.
இந்திய குடியுரிமைத் திருத்தச்சட்டம் 2019 (CAA) இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைச் சீர்குலைக்கிறது எனக்கூறி திராவிட முன்னேற்றக்கழகம் நவம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களை துரிதப்படுத்தப்பட்ட முறையில் இந்திய குடிமக்களாக்கும் வகையில் டிசம்பர் 12, 2019 இல் மத்திய அரசினால வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம் தீர்மானிக்கிறது. இதில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் பாதிக்கப்பட்ட மதச் சிறுபான்மை இனங்களான இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பாரசீகர் ஆகியோர் அடங்குவர். ஆனால் இந்தியாவில் அகதிகளாக வந்திருக்கும் இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர்களோ அல்லது முஸ்லிம் மக்களோ சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது பாரபட்சம் காட்டுவதாக உள்ளது மட்டுமல்லாது மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புக்கு முரணானது எனவும் கூறி இச்சட்டத்தை நிராகரிக்கும்படி தி.மு.கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 14 ஆவது கட்டளை (சமத்துவத்துக்கான உரிமை) மற்றும் 21 ஆவது கட்டளை (உயிருக்கும் உடமைக்குமான பாதுகாப்பு உரிமை) ஆகியவற்றை குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீறுகிறது எனக்கூறி அதை முற்றாக நிராகரிக்கும்படி கேட்டு தி.மு.க. ஒழுங்கமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத் உச்சநீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறார்.
இலங்கையில் வாழும் இந்திய பூர்வீகத் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக பிரித்தானிய காலனி அரசினால் 1852 – 1930 காலப்பகுதியில் அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். இலங்கை அரசியலமைப்பின் 9 ஆவது உட்பிரிவு அங்குள்ள ஏனைய மதங்களை விட புத்த மதத்திற்கு விசேட அந்தஸ்தைக் கொடுப்பதனால் இதர மதங்களைப் பின்பற்றுபவர்கள் அங்கும் பாதிக்கப்படுகிறார்கள். அத்தோடு இந்திய பூர்வீகத் தமிழர்கள் இனரீதியாகவும் அங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் தற்போது அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இப் புதிய குடியுரிமத் திருத்தச் சட்டம் ஏனைய மதச் சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகைகளை வழங்கவில்லை. அதே போல வேறு நாடுகளில் மத ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் மக்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களையும் இப் புதிய சட்டம் புறக்கணிக்கிறது.
இச்சட்டம் பாரபட்சமானது என்ற காரணத்தால் அதை முற்றாக நீக்கக்கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த 1 கோடி பேர் கையெழுத்திட்டு அறிக்கையொன்றை தி.மு.க. தலைவரிடம் கையளித்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களின் இவ்விருப்பத்தை அனுசரித்து இச் சட்டத்தை நிராகரிக்கும்படி கோரி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.