கீழடி | ஆறாவது கட்ட அகழ்வு – 3,000 வருடங்களுக்கு முன்னரே தொழில்துறை வல்லமை இருந்ததற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது
கீழடி - 6 வது கட்ட அகழ்வு நிறைவு

கீழடி | ஆறாவது கட்ட அகழ்வு – 3,000 வருடங்களுக்கு முன்னரே தொழில்துறை வல்லமை இருந்ததற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது

Spread the love

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அயல் கிராமங்களான அகரம், கோந்தை, மணலூர் ஆகியவற்றில் பெப்ரவரி 2020 இல் ஆரம்பித்த அகழ்வுகள் முடிவுக்கு வந்துள்ளன.

இவ்வகழ்வுகளின்போது, மனித எலும்புக்கூடுகள், நிறுக்கும் படிகள் (weighing measures), இரத்தினக் கற்கள் ஆகியவற்றை நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர். அத்தோடு, மோதிர வளையங்களைப் போன்ற கட்டமைப்புகள் (நீர் சேகரிப்பு), எரி உலைகள், பாத்திரங்கள் ஆகியனவும் கீழடியின் ஆறாம் கட்ட அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3,000 வருடங்களுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த மனிதர்கள் தொழில்துறை வல்லமை (industrial capability) கொண்டவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு இவ்வகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. குறிப்பாக ஆடையணி பற்றிய உயரறிவு கொண்ட மக்கள், வைகைக் கரையில் பணிகளை மட்டுமல்ல பொழுது போக்குகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என அகழ்வு நிபுணர் ஒருவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

கோந்தையில், ஒரு முதியவருட்பட, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாநில அகழ்வாய்வுத் திணைக்களத்துடன் இணைன்ந்து பணியாற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், இவற்றின் மரபணு வரிசையைக் (DNA sequence) கண்டுபிடிப்பதில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம், தற்போது இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் எப்படியான மாற்றங்களை அடைந்திருக்கிறார்கள் என அறிய முடியும்.



கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் மூன்று கட்ட அகழ்வுகளும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகான ஆய்வுகள் அனைத்தையும், தமிழ்நாடு தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. நான்காவது, ஐந்தாவது கட்ட அகழ்வுகள் இன்னும் தொடர்ந்தவண்ணமுள்ளன. 6 வது கட்ட அகழ்வுக்காகத் தமிழ்நாடு அரசு ரூ. 40 இலட்சத்தை ஒதுக்கியிருந்தது. இக் கட்டத்தில், கோந்தை, ஆகரம், மணலூர் அகழ்வுகள் இடம்பெற்றன.

கோந்தை மக்கள் புதைக்கப்படும் இடமாகவும், அகரமும், மணலூரும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களாகவும் இருக்கலாம் என முன்னர் ‘தி இந்து’ பத்திரிகை அபிப்பிராயம் வெளியிட்டிருந்தது.

Print Friendly, PDF & Email