கீழடி அகழ்வாராய்ச்சி -

கீழடி அகழ்வாராய்ச்சி

Spread the love
. 2600 ஆண்டு காலத் தமிழர் வரலாறு வெளிவந்தது
. மதம் , கடவுள் சார்ந்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை

செப்டம்பர் 22, 2019 நன்றி: பி.பி.சீ. தமிழ்

PDF Embedder requires a url attribute
கீழடி அகழ்வாய்வு

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது என்றார்.

அதனை தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் இங்கு பல இடங்களில் தோண்டி பார்த்ததில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த சுவடுகளான உறை கிணறு, செங்கல் சுவர், எலும்பு கூடுகள் என பலவும் மண்ணுக்கு அடியில் இருந்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கீழடி அகழ்வாய்வு

“இந்த ஊர் இளைஞர்கள் இங்குதான் கிரிக்கெட் விளையாடுவோம். ஒரு நாள் செங்கல் சூளைக்காக மணல் தோண்டும்போது பழங்கால சுவடுகள் கிடைத்ததின் அடிப்படையில் இந்த பகுதியில் தொடர்ந்து தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தனர்.”

“இதில் தற்போது 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்தது தெரிவந்துள்ளது. இது எங்களுக்கு மிக பெரிய வியப்பை ஏற்படுத்தியது. காரணம் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த ஊரில் நாங்களும் வாழ்ந்து வருவதுதான்,” என்று பிபிசி தமிழிடம் கீழடி இளைஞர் கருப்பசாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி அகழ்வாய்வு

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், படிப்பறிவு பெற்றவர்களாக வாழ்ந்துவந்த பழங்கால தமிழர்களின், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை காண்பதற்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரலாறு பயின்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.

கீழடி அகழ்வாய்வு
கீழடியில் தொல்லியல் துறை கண்டெடுத்த பொருட்கள்

எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள்,ச துரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக 520க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள், தங்கம், இரும்பு, செம்பு உலோக தொல்பொருட்கள் கிடைத்தன. ஆனால் இதில் சமய சார்ந்த கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என அகழ்வாராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

உயர் கல்விக்கு உதவும் ஆய்வு
கீழடி அகழ்வாய்வு

கீழடி அகழ்வாய்வை காண வந்த கல்லூரி மாணவி பரமேஸ்வரி பிபிசி தமிழிடம் கூறுகையில், நான் தனியார் கல்லூரியில் வரலாறு பயின்று வருகிறேன். இங்கு கீழடியில் அகழ்வாரய்ச்சி நடைபெறுவதை அறிந்து அதனை பார்ப்பதற்காக இங்கு வந்தோம்.

அப்போது தொல்லியல் துறையால் கண்டு எடுக்கப்பட்ட பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களை பார்த்தோம் இந்த பொருள்களால் பழங்கால மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எந்த மாதிரியான ஆபாரணங்கள் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தெரிய வந்தது. இது எங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது இது எங்களுடைய உயர் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றார்.

Related:  Origin and History of the Tamils
நிலத்திற்கு கீழ் நீர் மற்றும் கனிம வளங்கள்
கீழடி அகழ்வாய்வு

கீழடியில் கிடைக்கப்பெற்ற நாணயங்களை வைத்து பார்க்கும்போது பழங்கால தமிழர்கள் வணிக தொடர்புடன் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இற்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், தமிழகத்தில் நிலத்திற்கு கீழ் கனிம வளங்கள் கிடைத்திருக்கிறது என்பதை காட்டுகின்றன.

தற்போதுள்ள சூழ்நிலையில் வைகை ஆற்றின் நீர் மட்டம் அதிக ஆழம் சென்றுள்ளதை சுட்டிக்காட்டுவதற்கு இதுவொரு சான்றாகும். அதேபோல இங்குள்ள சுவர் செங்கல் ஆகியவற்றை பார்த்தால் நிச்சயம் பழங்காலத் தமிழர்கள் கட்ட கலையில் சிறந்த திறமை படைத்தவர்கள் என்பது தெரிய வருவதாக பிபிசி தமிழிடம் கல்லூரி பேராசிரியர் செல்வி தெரிவித்தார்.

வகுப்பறைக்கும் கள ஆய்வுக்கும் உள்ள வேறுபாடு
கீழடி அகழ்வாய்வு

கீழடி அகழ்வாராய்ச்சியை காண வந்த பேராசிரியர் பத்மாவதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “நேரடியாக கள ஆய்வை பார்ப்பதற்கும், புத்தகத்தை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும் மிக பெரிய வேறுபாடுகள் உள்ளன. கீழடியின் அகழ்வாராய்ச்சியால் மாணவர்களுக்கு வரலாற்று பாடத்தில் விருப்பம் அதிகரிப்பதுடன் வரலாற்று துறையில் ஆராய்ச்சி செய்யவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். மொஹஞ்சதாரோ, சிந்துவெளி நாகரிகம் குறித்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்து இருந்தாலும் கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்தது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. உலக நாடுகளில் பல நாடுகளில் உள்ள பழங்கால மக்களை குறித்து படித்து வந்த நிலையில் கீழடியில் 2600 ஆண்டு பழமையான மனிதர்கள் வாழ்ததை நேரடியாக அறிய முடிந்தது என்றார்.புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS TAMIL

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக்கரை நாகரிகம்

இது குறித்து கீழடி அகழ்வாய்வு பொறுப்பாளர் ஆசை தம்பி பிபிசி தமிழிடம் கூறுகையில் “கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன,” எனத் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாய்வு

புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன என ஆசை தம்பி தெரிவித்தார்.

இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கரிம பகுப்பாய்வு முறைப்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு இடத்தில் உள்ள எலும்புத் துண்டுகள் மூலம், திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டன என தெரியவந்துள்ளது.

சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சமய சார்ந்த கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்த அடையாளப் பொருட்களும் அங்கு கிடைக்கவில்லை என கூறினார்.

கீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்

  • 20 செப்டம்பர் 2019
கீழடி ஆய்வு

“முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?”

மேலே இருப்பது சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் வரும் 136வது பாடல். “முத்துப் போன்ற மணலில் நீ தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் விளையாட்டில் பத்து எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். அவளை விட்டுவிட்டு நீ நீங்கியபோது அவள் தன் அங்கமெல்லாம் வாடி ஆயத்தாரின் தந்திரத்தால் தோற்றவர் போல துன்பத்தில் உழல்கின்றாள். இப்படி அவள் துன்பத்தில் உழலலாமா?” என்பது இந்தப் பாடலின் பொருள்.

கீழடியில் கிடைத்திருப்பது போன்ற ஆறு பக்கங்களைக் கொண்ட பகடைக் காய்கள் பத்து என்ற எண்ணைத் தரக்கூடியவை.
Image captionகீழடியில் கிடைத்திருப்பது போன்ற ஆறு பக்கங்களைக் கொண்ட பகடைக் காய்கள் பத்து என்ற எண்ணைத் தரக்கூடியவை.

தலைவியைத் தலைவன் பிரிந்துசெல்ல, தலைவி படும் துன்பத்தைக் கூறும் பாடல் இது. இந்தப் பாடலில், “பத்து உருவம் பெற்றவன் மனம்போல” என்ற வார்த்தைகள், தாய விளையாட்டில் பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது.

Related:  Origin and History of the Tamils

அப்படி பத்து என்ற எண்ணைப் பெறுவதற்கு உருட்டப்படும் பகடைக்காய்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை கீழடியில் கிடைத்திருக்கும் பகடைக்காய்கள் காட்டுகின்றன. தற்போது தாயத்தில் உருட்டப்படும் தாயக்கட்டைகள் நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை உருட்டுவதால் ஒருபோதும் பத்து என்ற எண்ணைப் பெற முடியாது.

ஆனால், கீழடியில் கிடைத்திருப்பது போன்ற ஆறு பக்கங்களைக் கொண்ட பகடைக் காய்கள் பத்து என்ற எண்ணைத் தரக்கூடியவை.

“சங்க இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகள் இங்கே கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க முடியும்” என்கிறார் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் இயக்குநரான ஆர். பாலகிருஷ்ணன்.

கீழடி 4ஆம் கட்ட அகழ்வாய்வில் மட்டும் இதுபோல 600 விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் விளையாடக்கூடியவை. விளையாட்டிற்கு நேரம் ஒதுக்கும் அளவிற்கு வேலைகளை நேரஒதுக்கீடு செய்துகொண்ட சமூகமாக அங்குள்ளவர்கள் இருந்திருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரமாக இந்த காய்கள் இருக்கின்றன.

கீழடி ஆய்வு

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் மதுரை நகரம், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் வெகுசில நகரங்களில் ஒன்று. மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள் இப்போதும் இருந்துவருகின்றன.

மதுரையைச் சுற்றியுள்ள சமணர் படுகைகளில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல எழுத்துகள் காணப்படுகின்றன. மதுரைக்கு வடக்கில் சில கற்காலக் கருவிகளும் ஆவியூரில் பழங்கற்காலக் கருவி ஒன்றும் பிரிட்டிஷ் காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை உத்தமபாளையத்தின் எல்லப்பட்டி என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வில் இரும்பு உருக்கும் தொழிற்கூடப் பகுதி இருப்பது வெளியில் கொண்டுவரப்பட்டது.

இந்திய விடுதலைக்கு முன்பாக அலெக்ஸாண்டர் ரீயா மதுரைக்கு அருகில் உள்ள பரவை, அனுப்பானடி பகுதிகளில் அகழ்வாய்வு நடத்தினார். 1976ல் டி. கல்லுப்பட்டியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல், அழகன் குளம், மாங்குளம் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியத் தொல்லியல் துறை வைகை நதிக்கரையின் இரு பக்கங்களிலும் உள்ள 293 இடங்களில் கள ஆய்வு நடத்தி, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள், பண்டைய வாழ்விடப் பகுதிகள் கண்டறிந்தது. இதில் ஒரு இடம்தான் கீழடி.

கீழடி ஆய்வு

இந்த அகழ்வாய்வுப் பகுதி 110 ஏக்கர் பரப்பளவுள்ள, அதிக சிதைவில்லாத ஒரு தொல்லியல் மேடு. இங்கே இந்திய தொல்லியல் துறை 2015, 16, 17ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு மேற்கொண்ட நிலையில், 2017-18, 2018-19ம் ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாய்வு மேற்கொண்டது.

இதில் 2017-18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள்தான் இப்போது வெளியாகியுள்ளன. ஐந்தாம் கட்ட ஆய்வு தற்போது நடந்துவருகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளின் மிகப் பெரிய முக்கியத்துவமாக சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

Related:  Origin and History of the Tamils
கீழடி அகழ்வாய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்

முதலாவதாக, தமிழ் பிராமி எழுத்தின் காலம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் செல்வது. முன்னதாக தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டுவந்தது. கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்து பதிக்கப்பட்ட மட்பாண்டங்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டவுடன், அந்த எழுத்துகளின் காலம் மேலும் 2 நூற்றாண்டுகள் பழமையானது என்ற முடிவு எட்டப்பட்டது.

இப்போது கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பழமையானது என்ற முடிவுக்கு இது இட்டுச்செல்கிறது.

கீழடி ஆய்வு

இரண்டாவதாக, தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் இதுவரை நகர நாகரிகத்திற்கான அடையாளங்கள் கிடைத்ததில்லை. ஆகவே, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருந்ததைப் போன்ற ஒரு நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்றே கருதப்பட்டது.

ஆனால், கீழடியில் சுட்ட செங்கல்களால் ஆன வீடுகள், கழிவுநீர் போக்கிகள்,சுவர்கள், உறை கிணறுகளுடன் கூடிய ஒரு பகுதி தோண்டியெடுக்கப்பட்டிருப்பதால், இது ஒரு நகர நாகரிகமாகவே கருதப்படுகிறது. இது தமிழகத்தில் கிடைத்த நகர நாகரிகத்தை சுட்டும் ஆதாரம் என்பதோடு, கங்கைச் சமவெளி நாகரிக காலகட்டத்திலேயே இங்கேயும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வு மூலம் நிறுவ முடியும்.

கீழடி ஆய்வு

மூன்றாவதாக பானை ஓடுகளில் காணப்படும் பெயர்கள். பானைகள் சுடப்பட்ட பிறகு, அதில் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் அவை அந்தப் பானையை வாங்கியவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வெவ்வேறு பானைகளில் வெவ்வேறுவிதமான எழுத்தமைதி இருப்பதால், பலரும் இதை எழுதியிருக்கலாம் என்றும் அந்த சமூகத்தில் பலரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

“இந்த ஆய்வு முடிவுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறார்கள். சங்கப் பாடல்கள் அந்த காலகட்டத்து மண்ணையும் மனிதர்களையும் பாடின. அந்தப் பாடல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை இங்கே கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. சங்க காலப் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூக மிக உயர்ந்த நாகரீகம் கொண்டதாகத் தென்படுகிறது. அப்படி ஒரு நாகரீகம் இருந்திருந்தால்தான், அம்மாதிரி பாடல்கள் உருவாகியிருக்க முடியும். அதற்கான ஆதாரமாகத்தான் கீழடி இருக்கிறது” என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

மற்றொரு விஷயத்தையும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். சிந்து சமவெளி குறியீடுகளுக்குப் பிறகு தமிழ் பிராமி உருவாவதற்கு முன்பாக கீறல்கள் பானைகளில் எழுதப்பட்டுள்ளன. சிந்து வெளிக் குறியீடுகளைப் போலவே இந்த கீறல்களையும் படிக்க முடியவில்லை. இம்மாதிரியான பானைக் கீறல்கள் இந்தியாவிலேயே அதிகம் கிடைத்திருப்பது தமிழ்நாட்டில்தான். கீழடியில் மட்டும் 1001 பானைக் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. இது எழுத்து உருவாவதைக் காட்டுகிறது. இம்மாதிரியான கீறல்கள் கங்கைச் சமவெளியில் பெரிதாகக் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

கீழடி ஆய்வு

மேலும், கீழடியில் வழிபாட்டுக்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், இதற்கு பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும் வணங்கவில்லை என்பதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மாதிரி வணங்குவதும் சமயச் செயல்பாடுகளும் அவர்கள் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கவில்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. “சங்க இலக்கியத்தில் நிறைய பெண் தெய்வங்கள் உண்டு. ஆனால், கீழடியில் வாழ்ந்த பழங்கால மக்கள் அவற்றைச் சுற்றி வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வரலாம்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *