World

கிழக்கு லண்டனில் இரு தமிழ்க் குழந்தைகள் கொலை. தந்தை தற்கொலை முயற்சி

லண்டனின் இல்ஃபோர்ட் பகுதியில் தனது இரண்டு குழந்தைகளையும் குத்திக் கொன்றுவிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்குப் போராடிவரும் தந்தை பற்றிய செய்தியொன்று கிடைத்திருக்கிறது. இறந்த குழந்தைகளில் ஒருவர் 3 வயதுடைய ஆண் குழந்தையும், 1 வயதுடைய பெண் குழந்தையுமாவர்.

நிதின் குமார் படம்: CCTV Footage / MailOnline

இந்த இளம் குடும்பம் இரண்டு – இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் இப் பகுதியில் குடியேறியிருந்ததாகவும், விநாயகன் ஸ்டோர்ஸ் கடைக்குப் பின்னாலிருந்த ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நிதி என அழைக்கப்படும் நிதின் குமார் வீட்டுக்கு அருகில் இருந்த கடையொன்றில் பணி புரிந்து வந்ததாகவும் சம்பவ தினத்தன்று 4:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பியதும் மாலை 5:40 போல் இக் கொடிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது என அயலவர்களை மேற்கோள் காட்டி லண்டனிலிருந்து வெளிவரும் ‘மெயில்ஒன்லைன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடையின் சொந்தக்காரரான் சண்முகதாஸ் தேவதுரை ‘மெயில்ஒன்லைன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நிதி ஒரு அருமையான மனிதரும், விசுவாசமான தொழிலாளியுமாவார். காலை 9:00 மணிக்கு அவரே கடையைத் திறப்பார். அன்றய நாள் வழமை போலச் சாதாரணமாகவே இருந்தது. வீடு போகுமுன்னர் எனக்குத் தேனீர் தயாரித்துத் தந்துவிட்டுச் சென்றிருந்தார்” எனக் கூறியிருக்கிறார்.

லண்டனில் நடமாட்டத்தடை நடைமுறையிலுள்ளபோது கணவனை வேலைக்குச் செல்லவேண்டாமென்று மனைவி வற்புறுத்தி வந்ததாகவும் இதன் காரணமாக அவர்களுக்குள் வாக்குவாத்ம் ஏற்பட்டு இத்துர்ப்பாக்கிய நிலைமையில் முடிவடைந்திருக்கிறது என அயலில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழர் ஒருவர் ‘மறுமொழி’க்குத் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் குழப்பமடைந்த குழந்தைகளின் தாயார் வீதியில் ஓடிச் செந்று ‘என் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’ எனக் கதறியதாக றெஷ்ன பெகும் என்ற அயலவர் தெரிவித்தார் என ‘மெயில்ஒன்லைன்’ குறிப்பிடுகிறது.

பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாகவும், ஆண் குழந்தை மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. நிதின் குமார் மருத்துவமனையில், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

நிதின் குமாரின் குடும்பம் கடையின் மேலுள்ள ஃபிளாட்டில் வாழ்ந்து வந்ததாகவும், குழந்தைகள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் எனவும் ஆனால் குடும்பம் அயலவர்களுடன் அதிகம் பழகுவதில்லை எனவும், அயலவர் ஒருவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

அருகிலுள்ள J&N நியூஸ் ஏஜண்ட்ஸ் கடையின் உரிமையாளர்கூறுகையில், இக்குடும்பம் தன் அயலில் வசித்தௌ வந்ததாகவும், சில சமயங்களில் தனது கடையில் வந்து பொருட்கள் வாங்குவதாகவும், எல்லோரையும் போலவே அவர்களதும் ஒரு சாதாரண குடும்பம் எனவும் தெரிவித்தார். கணவர் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் எனவும், பாணும் பாலும் வாங்குவதற்குத் தனது மகனுடனும் சில வேளைகளில் மகளுடனும் வருவார் எனவும் அவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை மாலை 5:30 மணியளவில் இல்ஃபோர்ட்டிலுள்ள ஆல்ட்பொறோ றோட் நோர்த் இலுள்ள ஒரு வீட்டில் ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் தாம் அங்கு சென்றதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதாகவும் ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிசார் தெரிவிக்கின்றனர்.